ஆண்டவர் மீண்டும் மோயீசனை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒப்பான வேறு இரண்டு கற்பலகைகளை நீ வெட்டு. உன்னால் உடைக்கப்பட்ட பலகைகளில் இருந்த வார்த்தைகளை இவற்றிலும் எழுதுவோம்.
அப்படியே ( மோயீசன் ) முந்தின பலகைகளைப் போல் வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி, அதிகாலையில் எழுந்திருந்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடியே பலகைகளைத் தம்முடன் எடுத்துக் கொண்டு சீனாய் மலையில் ஏறினார்.
அவர் தம் முன் கடந்து போகையில் மோயீசன் அவரை நோக்கி: எல்லா அதிகாரமும் கொண்டுள்ள ஆண்டவராகிய கடவுளே, அருள் நோக்கும் தயவும் பொறுமையும் அளவில்லாத இரக்கமும் பொருந்திய கடவுளே,
ஆயிரம் படைப்புக்களுக்கும் இரக்கம் புரிகிறவரே, அக்கிரமத்தையும் பாதகங்களையும் பாவங்களையும் போக்குபவரே, உமது முன்னிலையில் தன் சுபாவ இயல்பினால் மாசில்லாதவன் ஒருவனும் இல்லை. தந்தையர் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும் பேரப்பிள்ளைகளிடத்திலும், மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிக்கிறவரே என்று கூறி,
ஆண்டவரே, உமது முன்னிலையில் அடியேனுக்கு அருள் கிடைத்ததாயின், ( இம் மக்கள் வணங்காக் கழுத்துடையவர்களாகையால் ) நீர் எங்களுடன் எழுந்தருளவும், எங்கள் அக்கிரமங்களையும் பாவங்களையும் போக்கவும், அடியோர்களை உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் என்றார்.
ஆண்டவர் மறுமொழியாக: மக்கள் எல்லாருக்கும் முன் நாம் ஒர் உடன்படிக்கை செய்வோம். உன்னோடு கூட இருக்கிற இந்த மக்கள் நாம் செய்யப்போகிற ஆண்டவருக்குரிய பயங்கரமான செய்கைகளைக் காணும்படி, பூமி எங்கும் எந்த இனமும் எந்த மக்களும் காணாத அற்புதங்களைக் காட்டுவோம்.
இன்றும் நாம் உனக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அனுசரித்துக்கொள். ஆமோறையனையும் கானானையனையும் ஏத்தையனையும் பாரேசையனையும் ஏவையனையும் யெபுசேயனையும் உனக்குமுன் நாம் இதோ துரத்தி விடுவோம்.
ஆகையால், அவர் எரிச்சலுள்ள கடவுள். நீ அந்நாட்டாரோடு உடன்படிக்கை செய்யாதே. செய்தால், அவர்கள் ஒருவேளை தங்கள் தெய்வங்களைக் கள்ள வழியிலே பின்பற்றி நடந்து தங்கள் விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்த பின் அவர்களில் ஒருவன் உன்னை அழைத்து, விக்கிரகங்களுக்குப் படைக்கப் பட்ட இறைச்சியில் சிறிது உண்ணச் சொல்வான், எச்சரிக்கை!
அவர்கள் புதல்வியரிடையே உன் புதல்வர்களுக்குப் பெண்கொள்ளாதே. கொண்டால், இவர்கள் ஒருவேளை தங்கள் தெய்வங்களைக் கள்ள வழியிலே பின்பற்றி நடந்த பின் உன் புதல்வர்களையும் தங்கள் தெய்வங்களைப் பின்பற்றி நடக்கச் செய்வார்கள், எச்சரிக்கை!
புளியாத அப்பத் திருவிழாவை நீ அனுசரிக்கக்கடவாய். நாம் உனக்குக் கட்டளையிட்டபடியே, புதுப் பலன்களின் மாதத்திலே ஏழு நாளும் புளியாத அப்பங்களை உண்ணுவாய். ஏனென்றால், நீ வசந்த காலத்து முதல் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தாய்.
கழுதையின் தலையீற்றை ஓர் ஆட்டைக் கொடுத்து மீட்டுக் கொள்வாய். அதன் விலையை முதலாய்க் கொடுக்க உனக்கு வசதி இல்லாது போனால், அது கொல்லப்படும். உன் பிள்ளைகளில் மூத்த மகனை மீட்டுக்கொள்வாய். வெறுங் கையோடு நம்முடைய சந்நிதிக்கு வரக்கூடாது.
ஏனென்றால், நாம் அந்நியரை உன் முன்னின்று துரத்திவிட்டு உன் எல்லைகளையும் விரிவுபடுத்திய கடவுளின் சந்நிதிக்கு வந்து உன்னைக் காண்பித்தால், எவரும் உன் நாட்டைப்பிடிக்கும்படி முயற்சிசெய்ய மாட்டார்கள்.
உன் நிலத்திலே விளைந்த முதற்பலன்களை உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆலயத்தில் ஒப்புக்கொடுப்பாய். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம் என்று சொன்னார்.
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: எந்த வார்த்தைகளைச் சொல்லி நாம் உன்னோடும் இஸ்ராயேலரோடும் உடன்படிக்கை செய்தோமோ அந்த வார்த்தைகளை நீ உனக்காக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ஆகையால், மோயீசன் அவ்விடத்தில் நாற்பது பகலும் நாற்பது இரவுமாய் ஆண்டவரோடு தங்கி, உண்ணாமலும் குடியாமலும் இருந்தார். ஆண்டவரும் உடன்படிக்கையின் பத்து வாக்கியங்களையும் கற்பலகைகளில் எழுதியருளினார்.
பின், மோயீசன் சீனாய் மலையிலிருந்து இறங்கும் போது இரண்டு சாட்சியப் பலகைகளையும் தம் கையில் எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால், தம்மோடு ஆண்டவர் பேசியதினாலே தம் முகம் ஒளிவீசிக் கொண்டிருப்பதை அறியாதிருந்தார்.
மோயீசன் ஆண்டவர் திருமுன் அவரோடு பேசும்படி போகையில், உள்ளே புகுந்தது முதல் வெளியே புறப்பட்டு வரும் வரை முக்காட்டை நீக்கி விடுவார். பின் அவர் வெளியே வந்து, தனக்குத் தெரிவிக்கப் பட்டவையெல்லாம் இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்லுவார்.
மோயீசன் வெளியே வரும் போது அவர் முகம் சுடர் விட்டெரிவதை அவர்கள் காண்பார்கள். ஆனால், அவர் எதையேனும் அவர்களிடம் சொல்ல வேண்டியிருந்தால், திரும்பவும் முக்காட்டைத் தம் முகத்தின் மேல் போட்டுக் கொள்வார்.