பின் ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளி: நீயும், எகிப்து நாட்டினின்று நீ அழைத்துக் கொண்டு வந்த உன் மக்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்போம் என்று ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு ஆகியோருக்கு நாம் ஆணையிட்டு வாக்குறுதி அருளிய நாட்டிற்குப் போங்கள்.
பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டிலே நீ புகும்படி செய்வோம். ஆயினும், வழியிலே நாம் உங்களை அழித்தொழிக்காதபடிக்கு நாம் உங்கள் நடுவே போக மாட்டோம். உண்மையிலே உன் மக்கள் வணங்காக் கழுத்துள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்றார்.
ஆண்டவர் மோயீசனை நோக்கி: இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்: நீங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள். உங்கள் நடுவில் நாம் ஒருவேளை வருவோமாயின், உங்களை அழித்தொழிக்க வேண்டியதாயிருக்கும். (ஆகையால்) நீங்கள் அணிந்திருக்கிற ஆபரணங்களைக் கழற்றிப் போட்டால், நாம் உங்களுக்குச் செய்ய வேண்டியதை அறிவோம் என்றருளினார்.
பின்னர் மோயீசன் ஆசாரக் கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளையத்துக்கு வெளியே தூரத்தில் நிறுவினார்; அதன் பெயரை உடன்படிக்கைக் கூடாரம் என்று அழைத்தார். அது முதல் யாதொரு வழக்கு உண்டானால், மக்களெல்லாம் பாளையத்துக்கு வெளியே உடன்படிக்கைக் கூடாரத்துக்குப் போவார்கள்.
ஒருவன் தன் நண்பனோடு பேசுவதுபோல ஆண்டவர் மோயீசனோடு நேரிலே உரையாடிக் கொண்டிருப்பார். பிறகு அவர் பாளையத்துக்குத் திரும்பிப் போகும் போது, நூனின் புதல்வனும் இளைஞனுமான யோசுவா என்னும் அவனுடைய சீடன் திருக் கூடாரத்தை விட்டு விலகாதிருந்தான்.
மோயீசன் ஆண்டவரை நோக்கி: நீர் இந்த மக்களை அழைத்துக் கொண்டு போ என்று கட்டளையிடுகிறீர். ஆயினும், என்னோடு கூட இன்னாரை அனுப்புவீர் என்பதை எனக்கு அறிவிக்கவில்லை. சிறப்பாக, நீர் என்னை நோக்கி: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்து அறிந்திருக்கிறோம் என்றும், நமக்கு நீ விருப்பமுள்ளவன் ஆனாய் என்றும் திருவுளம்பற்றியிருந்தீரே.
ஏனென்றால், பூமியின் மீது வாழ்கின்ற எல்லா மக்களாலும் நாங்கள் மாட்சிபெறும் பொருட்டு நீர் எங்களுடன் எழுந்தருளாவிடின், அடியேனுக்கும் உம் குடிகளுக்கும் உம்முடைய கண்களில் இரக்கம் கிடைத்ததென்று நாங்கள் எதனால் அறிவோம் என்றார்.
ஆண்டவர்: இதோ நீ சொன்ன இவ்வார்த்தைப்படி செய்வோம். ஏனென்றால், நம்முடைய கண்களில் உனக்கு இரக்கம் கிடைத்தது. உன்னைப் பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறோம் என்று மறுமொழி சொன்னார். அதற்கு,
அப்பொழுது அவர்: நாம் உனக்கு முழு நன்மையைக் காண்பிப்போம். அன்றியும், நாம் உனக்கு முன் ஆண்டவருடைய (திருப்) பெயரைக் கூறுவோம். எவனிடம் பிரசன்னமாயிருப்போமோ அவன் மட்டில் இரங்குவோம். எவன் மீது இரக்கமாய் இருக்கத் திருவுளம் கொள்வோமோ அவன் மேல் இரக்கம் வைப்போம் என்றருளினார்.