ஆசாரக் கூடாரத்தை அமைக்க வேண்டிய மாதிரி என்னவென்றால், முறுக்கிழையான மெல்லிய சணல் நூல்களாலும், நீலநிறம், இரத்த நிறம், இரு தடவை சாயம் தோய்த்த பொன்னிறமுள்ள நூல்களாலும் நெய்யப்பட்ட புடவையைக் கொண்டு பத்து மூடுதிரைகளைச் செய்வித்து, அவை சித்திர விசித்திரப் பின்னல் வேலையால் அலங்கரிக்கப்படும்.
ஒவ்வொரு மூடுதிரையின் இரு புறங்களிலும் ஐம்பது காதுகள் இருக்க வேண்டும். அவை ஒன்றோடொன்று இணையும்படி காதோடு காது ஒன்றுக்கொன்று நேர் நேராய் இருக்க வேண்டும்.
ஐந்து கம்பளிகளை ஒன்றாகத் தனித்தனியே சேர்ப்பாய். ஆறு கம்பளிகளை ஒன்றோடொன்றாகச் சேர்த்து, ஆறாவது கம்பளியை மேற்புறத்தில் முகப்புக்கு முன் மடித்துப் போடும்படியாய்த் தைக்கக்கடவாய்.
இணைக்கப்பட்ட ஒரு கம்பளி மற்றொரு கம்பளியோடு சேரத்தக்கதாக, ஒவ்வொரு கம்பளியின் ஓரத்திலே ஐம்பது காதுகளை அமைத்து விடுவாயானால், அந்தக் கம்பளிகள் ஒன்றோடொன்று சேரச் செய்யக் கூடும்.
ஒவ்வொரு பலகையும் அடுத்த பலகையோடு இசைந்திருக்கும்படி பலகைகளின் ஓரங்களிலே இரண்டு காடியும் கழுத்தும் அமைத்து வைப்பாய். பலகைகளெல்லாம் அவ்விதமே தயார் செய்யப்படும்.
அவற்றைக் கீழிருந்து மேலே வரையிலும் ஒரே கூட்டு மூட்டினாலே சேர்த்து வைக்கவேண்டும். மேலும், ஓரங்களிலே வைக்க வேண்டிய இரண்டு பலகைகளிலும் அவ்விதமே செய்யவேண்டும்.
அந்தப் பலகைகளையும் பொன் தகட்டால் மூட வேண்டியதுமன்றி, எந்தக் குறுக்குச் சட்டங்களினால் பலகையெல்லாம் நிலைப்படுத்தப்பட்டிருக்குமோ அந்தக் குறுக்குச் சட்டங்களைப் பாய்ச்சத்தக்க வளையங்களையும் பொன்னால் அமைப்பாய். குறுக்குச் சட்டங்களைப் பொன் தகட்டாலே மூடவேண்டும்.
நீல நிற நூல், கருஞ்சிவப்பு நூல், இரட்டிப்புச் சாயமுள்ள இரத்த நிற நூல், திரித்த மெல்லிய சணல் நூல் முதலிய நூல்களை நெய்து, இவற்றால் ஒரு திரை செய்வாய். அதைச் சித்திர விசித்திரப் பின்னல் வேலைகளால் அலங்கரித்திருக்க வேண்டும்.
சேத்தீம் மரத்தால் செய்து பொன் தகட்டால் மூடப் பட்ட நான்கு தூண்களின் முன் புறத்தில் (அதைத்) தொங்க விடுவாய். அத்தூண்களுக்கோ நான்கு பொன் போதிகைகளும் நான்கு வெள்ளிப் பாதங்களும் இருக்கும்.
அந்தத் திரையை வளையங்களில் கோத்துக் கட்டிய பின் உடன்படிக்கைப் பெட்டகத்தை அதற்குள்ளே மறைத்து வைப்பாய். அந்தத் திரையோ பரிசுத்த இடத்திற்கும், பரிசுத்தத்திலும் பரிசுத்த இடத்திற்கும் நடுவில் இருக்கும்.
அன்றியும், ஆசாரக் கூடாரத்தின் வாயிலில் நீல நிற நூல், கருஞ்சிவப்பு நூல், இரட்டிப்புச் சாயமுள்ள இரத்த நிற நூல், திரித்த மெல்லிய சணல் நூல்--இவற்றை நெய்து சித்திரப் பின்னல் வேலையால் அலங்கரித்த தெந்தோரியம் என்னும் தொங்கு திரையையும் அமைப்பாயாக.
சேத்தீம் மரங்களால் செய்யப் பட்ட ஐந்து தூண்களையும் பொன்னால் மூடுவாய். அவற்றின் முன் மேற்சொன்ன தொங்கு திரை தொங்க வைக்கப்படும். அத்தூண்களின் பொதிகைகள் பொன்னாலும், பாதங்கள் வெள்ளியாலும் செய்யப்படும்.