சிறிது காலத்திற்குப் பின்னர், ஆகாகு குலத்தைச் சேர்ந்த ஆமதாதின் மகன் ஆமானை அசுவேருஸ் அரசன் மேன்மைப்படுத்தித் தன் சிற்றரசர்கள் யாவருக்கும் மேலாக அவனை உயர்த்தினான்.
ஆகையால் அரண்மனை வாயிலில் இருந்த அரச ஊழியர் அனைவரும் ஆமோனைக் கண்ட போதெல்லாம் மண்டியிட்டு வணங்கினர். ஏனென்றால் அது அரச கட்டளை. மார்தொக்கே ஒருவர் மட்டும் அவனைக் கண்டு மண்டியிட்டு வணங்குவதில்லை.
இவ்வாறு அவர்கள் பலமுறை அவருக்குச் சொல்லியும், அவர் அவர்களுக்குச் செவிமடுக்கவில்லை. தான் ஒரு யூதன் என்று அவர் அவர்களுக்குச் சொல்லியிருந்ததால், அவர் தன் மனத்தை மாற்றுவாரா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர்கள் அதனை ஆமானுக்கு அறிவித்தார்கள்.
ஆயினும் மார்தொக்கேயை மட்டும் கொல்வது பெரிய சாதனையல்ல என்று எண்ணினான். ஏனெனில் மார்தொக்கே ஒரு யூதன் என்று தான் கேள்விப்பட்டிருந்தமையால், அசுவேருசின் நாடெங்குமிருந்த யூதர்கள் அனைவரையும் அழிக்க எண்ணம் கொண்டிருந்தான்.
அசுவேருசுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் நீசான் எனப்படும் முதல் மாதத்தில், யூத குலத்தினரை அழிக்க வேண்டிய மாதமும் தேதியும் யாதென அறியும் பொருட்டு, ஆமான் முன்னிலையில், எபிரேய மொழியில் 'பூர்' எனப்படும் கலசத்தில் சீட்டுப் போட்டுப் பார்த்தனர். அச்சீட்டிலே 'ஆதார்' எனும் பன்னிரண்டாம் மாதம் விழுந்தது.
உடனே ஆமான் அசுவேருஸ் அரசனை நோக்கி, "அரசே, தங்கள் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் சிதறிக் கிடக்கும் ஒரு குலத்தினர் இருக்கின்றனர். அவர்கள் புதுப்புதுச் சட்டங்களையும் வழிபாட்டு முறைகளையும் அனுசரித்து வருகிறார்கள். அத்தோடு அரசரின் சட்டங்களையும் அவர்கள் அலட்சியம் செய்கின்றனர். அவர்களைத் தண்டிக்காமல் விட்டு விட்டால் அவர்கள் அதிகச் செருக்குக் கொள்வர்; இது உமது அரசுக்கு நல்லது அன்று என்பது தங்களுக்குத் தெரிந்ததே.
எனவே உமக்கு விருப்பமானால் அவர்களை அடியோடு அழித்துவிடக் கட்டளையிடும். அவ்வாறு செய்தால் உமது கருவூலக் கண்காணிப்பாளனிடம் நான் பதினாயிரம் தாலந்து கொடுப்பேன்" என்றான்.
அரசன் அதைக் கேட்டு மோதிரத்தைத் தன் கையிலிருந்து சுழற்றி, அதை ஆகாகு குலத்தைச் சேர்ந்த ஆமதாதின் புதல்வனும் யூதர்களின் பகைவனுமாகிய ஆமான் கையில் கொடுத்தான்.
நீசான் என்னும் முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் அரசனின் செயலர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆமான் கட்டளையிட்டபடி அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா ஆளுநர்களுக்கும் மாநில நீதிபதிகளுக்கும் குலத் தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதி அனுப்பினர். எல்லா நாட்டு மக்களும் தத்தம் மொழியிலே படித்து அல்லது கேட்டுப் புரிந்துகொள்ளும் பொருட்டு அக்கடிதங்கள் பல மொழிகளிலும் எழுதப்பட்டன. அத்தோடு ஒவ்வொரு கடிதமும் அரசனின் முத்திரை பதிக்கப் பெற்று அவன் பெயரால் அனுப்பப்பட்டது.
ஆதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளில் சிறியோர், பெரியோர், குழந்தைகள், பெண்கள் ஆகிய எல்லா யூதர்களையும் கொலை செய்து அக்குலத்தையே அழித்தொழிக்கவும், அவர்களுடைய சொத்துகளைக் கொள்ளையிடவும் வேண்டும் எனும் கட்டளையைத் தாங்கி நின்றன அக்கடிதங்கள். அவை அரசனின் தூதுவர் மூலம் மாநிலங்கள் முழுவதும் அனுப்பப்பட்டன.