நான் இவை எல்லாவற்றையும் மனத்தில் சிந்தித்துச் சுறுசுறுப்பாய்க் கண்டுபிடிக்க முயன்றேன். நீதிமான்களும் ஞானிகளும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் கடவுளுடைய கையில் இருக்கின்றன. ஆனாலும், தான் கடவுளுடைய விருப்புக்கு உகந்தவனோ, வெறுப்புக்கு உகந்தவனோ என்று மனிதன் அறியமாட்டான்.
இக்காலம் நன்னெறியாளனுக்கும் தீ நெறியாளனுக்கும், நல்லவனுக்கும் கெட்டவனுக்கும், சுத்தனுக்கும் அசுத்தனுக்கும், பலிகளைப் படைக்கிறவனுக்கும் பலிகளை இகழ்பவனுக்கும் அனைத்தும் ஒரேவிதமாய் நடக்கின்றன. நல்லவனுக்கு எப்படியோ அப்படியே கெட்டவனுக்கும். ஆணையிட்டப்படி நிறைவேற்றுகிறவனுக்கும் ஆணையை மீறி நடக்கிறவனுக்கும் சமமாய் நிகழும். வருங்காலமட்டும் அனைத்தும் சந்தேகத்தில் இருக்கும்.
இப்படி எல்லாருக்கும் ஒரேவிதமாய் நிகழ்கிறதே, அது இந்த உலகத்திலிருக்கிற துயரங்களிலே தலையான துயரமாம். அதுபற்றியன்றோ மனுமக்களின் இதயம் தீமையால் நிறைய, அவர்கள் ஆணவம் மிஞ்சி நடந்த பின்னர் நரகத்தில் வீழ்வார்கள்?
உயிரோடிருக்கிறவர்கள் தங்களுக்குச் சாவு வருமென்று அறிந்திருக்கிறார்கள். இறந்தவர்களோ இனி ஒன்றும் அறியார்கள். அவர்கள் பெயர் முதலாய் மறக்கப்பட்டிருக்கின்றமையால், இனி ஞானப் பலனை அடைவது அவர்களால் இயலாது.
சூரியனுக்குக்கீழே கடவுள் நியமித்திருக்கிற கடந்துபோகும் நாட்களிலும், நிலையற்ற ஆயுட்காலத்திலும் நீ உன் அன்புடைய மனைவியோடே வாழ். இந்த வாழ்க்கையிலும் நீ இந்த உலகத்தில் செய்கிற உழைப்பிலும் உன் பங்கு இதுவே.
நான் திரும்பி நோக்குகையில் சூரியனுக்குக்கீழே நான் கண்டது என்னவென்றால்: இவ்வுலகில் ஓடுவதற்குப் பரிசு வேகமுள்ளவர்கள் பெறுகிறதுமில்லை; போரிலே பேராற்றலுள்ளோர் (வெற்றி) கொள்ளுகிறதுமில்லை; ஞானிகள் உணவு அடைகிறதுமில்லை; புலவர்கள் பணம் சேர்ப்பதுமில்லை; திறமையுள்ள வேலைக்காரர் (மக்களின்) நன்மதிப்பை அடைகிறதுமில்லை. எல்லாவற்றிற்கும் நல்ல நேரமும் வேண்டும்; தெய்வச் செயலும் வேண்டும்.
மனிதன் தன் முடிவை அறியான். மீன்கள் தூண்டிலில் அகப்படுவதுபோலவும், பறவைகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், பொல்லாத காலம் வரவே மனிதர்கள் திடீரென ஆபத்தில் விழுவார்கள்.
சிறியதொரு நகரம் இருந்தது. அதிலுள்ள குடிகள் சிலரே. பெரிய அரசன் ஒருவன் அதைக் கைப்பற்ற எண்ணி அவ்விடம் வந்து, நகரத்தை வளைத்துச் சுற்றிலும் அதற்கு எதிராகப் பலத்த கொத்தளங்களைக் கட்டி முற்றுகையிட்டான்.
இந்நகரத்தில் சிறந்த ஞானியாகிய ஏழை ஒருவன் இருந்தான். அவன் தன் ஞானத்தினாலே அந்த நகரத்தை விடுவித்தான். ஆயினும் அந்த நகரத்தை விடுவித்தான். ஆயினும், அந்த ஏழை மனிதனை நினைப்பார் ஒருவருமில்லை.
(அதைக் கண்டு) நான்: திறமையினும் ஞானமே நல்லது என்று கருதினேன். அது உண்மையென்றால், ஏழையின் ஞானம் அசட்டை செய்யப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமல் போனதென்ன ?