மனுமக்கள் உயிரோடிருக்கும் நாள்வரையிலும்பெற்று நுகரத்தக்கது இன்னதென்று நான் அறியுமட்டும், மதியீனத்தைவிட்டு விலகி ஞானத்திலே என் சிந்தையைச் செலுத்த வேண்டுமென்று, மதுபானங்களை விட்டு என் உடலை ஒறுக்கத் தீர்மானித்தேன்.
ஊழியக்காரர்களையும் ஊழியக்காரிகளையும் கொண்டிருந்தேன். என் வீட்டிலே பிறந்த அடிமைகளும் மாட்டுமந்தை, ஆட்டுமந்தைகளும் எவ்வளவென்றால், எனக்குமுன் யெருசலேமிலிருந்த எல்லாருக்கும் இருந்ததைக் காட்டிலும் அவை அதிகத்திரளாய் இருந்தன.
என் கண்கள் நாட்டம் கொண்ட எதையும் நான் அவைகளுக்குத் தடை செய்திலேன்; என் இதயம் விரும்பிய சிற்றின்பங்களில் ஒன்றையும் நான் வேண்டாமென்று தள்ளியதும், ஈட்டிய பொருட்களை அனுபவிக்கமால் ஒதுக்கி விட்டதும் இல்லை. நான் முயற்சி செய்து பெற்ற பொருட்களை அனுபவிப்பது நியாயம் என்றிருந்தேன்.
பின்னர், என் கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட வீணான தொல்லைகளையும் கண்முன் கொண்டு சிந்தித்தபோது, இதோ, எல்லாம் விழலும் மனத் துயரமுமாய் இருக்கின்றனவென்றும், வானத்தில் கீழ் உள்ளவை எல்லாம் நிலையற்றனவென்றும் கண்டேன்.
அப்பொழுது நான் சிந்திக்கத் தொடங்கி: மூடனுக்கும் சாவு நேரிடும், எனக்கும் நேரிடும் என்றால், நான் அதிகமாய்ப் படித்திருப்பதினால் பயன் என்ன என்று யோசித்து, அதுவும் வீண்தான் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
உள்ளபடி, மூடனும்சரி ஞானியும் சரி- அவர்களுடைய நினைவு என்றைக்கும் நிலை நிற்காது; காலச்சக்கரம் சுழலச் சுழல இருவரும் மறக்கப்படுவார்கள்; கல்வி கற்றவனும் கல்லாதவனும் ஒரே விதமாய்த்தான் சாவார்கள்.
அவன் ஞானியாய் இருப்பானோ அறிவற்றவனாய் இருப்பானோ என்று அறியேன். ஆயினும், நான் வேர்த்துக் கவலைப்பட்டு ஈட்டின என் எல்லாப் பொருட்களுக்கும் அவன் தலைவன் ஆவான். இவ்வளவு வீணானது வேறு ஏதாவது உண்டோ?
உள்ளபடி ஒருவன் ஞானத்தையும் கல்வியையும் ஆவலாய்த் தேடி உழைத்த பின்பு, தான் ஈட்டியவற்றை உழைக்காதிருந்த வேறொருவனுக்கு விட்டு விடுகிறான். இதுவன்றோ வீணும் பெரிய தீமையுமாய் இருக்கிறது?
கடவுள் தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் தந்தருள்கிறார். பாவிக்கோ அவர் கொடுத்தது என்ன? தமக்கு விருப்பமாயிருக்கிறவனிடம் விட்டுக் கொடுக்கும் பொருட்டுச் செல்வங்களைச் சேர்த்துக் குவித்து வைக்கும் தொல்லையையும் வீண் கவலையையும்தான் கொடுத்தார். அது வீண் வேலையும் வீண் நாட்டமும் அன்றோ?