அவர்கள் ஏனாக்கின் புதல்வர்; வலுத்த இனம்; நெடிய ஆட்கள்; நீ அவர்களைக் கண்டிருக்கிறாய். அவர்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்கத்தக்கவர் ஒருவருமில்லையென்று நீ கேள்விப்பட்டிருக்கிறாய்.
அப்படியிருக்க, உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன்பாக நடப்பாரென்பதை இன்று நீ கண்டறிவாய். அவர் எரிக்கும் நெருப்பைப்போல் அவர்களை அடித்து மடக்கி விரைவில் அழித்துவிடுவார். அவர் உனக்கு முன்சொல்லியிருப்பது போல், உன் கண்களுக்கு முன்பாகவே அவர்களை அழித்தொழிப்பார்.
உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் முன்னிலையில் அழித்த பின்னரோ, நீ: ஆ! இந்த மக்கள் தங்கள் அக்கிரமத்தின் பொருட்டு அழிவுண்டமையால், நான் நீதிமானென்று ஆண்டவர் இந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி என்னை அழைத்து வந்தார் என்று உன் இதயத்தில் நினைக்காதே.
உள்ளபடி நீ அவர்களுடைய நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டுப் புகுந்தது உன்னுடைய புண்ணியத்தாலும் அன்று; நேர்மையாலும் அன்று. அவ்வினத்தாருடைய அக்கிரமத்தைப் பற்றியும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகிய உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கொடுத்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டியதை முன்னிட்டுமே, அவர்கள் உன் கண்களுக்குமுன் அழிக்கப்பட்டார்கள்.
பாலைவனத்திலே உன் கடவுளாகிய ஆண்டவருக்குக் கடும் கோபம் உண்டாக நீ காரணமாய் இருந்ததை நினை. எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இவ்விடம் சேரும் வரையிலும் நீ எப்பொழுதும் கடவுளை எதிர்த்து முரண்டிக் கொண்டேயிருந்தாய்.
ஆண்டவர் உங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை கற்பலகைகளை வாங்கிக்கொள்ளும் பொருட்டு நான் மலையில் ஏறினபோது, அப்பம் உண்ணாமலும் தண்ணீர் குடியாமலும் நாற்பது நாள் இரவும் பகலும் மலையில் தங்கியிருந்தேன்.
அப்பொழுது கடவுளுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் கொடுத்தார். சபை கூடியிருந்த நாளில் அவர் மலையிலே நெருப்பின் நடுவில் இருந்து உங்களோடு பேசிய எல்லா வாக்கியங்களும் அவைகளில் எழுதப்பட்டிருந்தன.
நீ எழுந்து விரைவில் இவ்விடம் விட்டு இறங்கிப்போ. ஏனென்றால், நீ எகிப்தினின்று புறப்படச் செய்த உன் மக்கள் நீ காட்டிய நெறியை விட்டு விலகி, வார்க்கப்பட்ட ஓர் உருவத்தைத் தங்களுக்கு உண்டாக்கிக் கொண்டார்கள் என்றார்.
நம்மை விட்டுவிடு. அவர்களை நாம் அழித்து அவர்கள் பெயரை வானத்தின் கீழிருந்து நீக்கிவிட்டு, அவர்களைக்காட்டிலும் மக்கள் நிறைந்ததும் வலிமையுள்ளதுமான இன்னொரு இனத்திற்கு உன்னைத் தலைவனாக்குவோம் என்றார்.
நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவத்தில் விழுந்து, வார்க்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைச் செய்து, அவர் உங்களுக்குக் காட்டின நெறியை அவ்வளவு விரைவில் விட்டுவிலகினீர்களென்று நான் கண்டபோது,
பிறகு, நீங்கள் ஆண்டவருக்குக் கோபமுண்டாகுமாறு அவருக்கு எதிராகக் கட்டிக்கொண்ட பாவமனைத்திற்கும் நான் முன்போல ஆண்டவருடைய முன்னிலையில் விழுந்து, இரவு பகல் நாற்பது நாளும் அப்பம் உண்ணாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
உங்கள் பாவப்பொருளாகிய அந்தக் கன்றுக் குட்டியையோ நான் எடுத்து உடைத்து நொறுக்கித் தூளாக்கி நெருப்பில் எரித்து மலையினின்று இறங்கும் அருவியில் எறிந்து விட்டேன்.
இன்னும் அவர் உங்களைக் காதேஸ் பர்னேயிலிருந்து அனுப்பி: நீங்கள் போய், நாம் உங்களுக்குக் கொடுத்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டபோது, நீங்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்பாமலும், அவருடைய குரலொலிக்குச் செவிக்கொடாமலும், அவர் இட்ட கட்டளையை மீறி நடந்தீர்கள்.
ஆண்டவர் உங்களை அழிப்போமென்று சொல்லியமையால், நான் இரவு பகல் நாற்பது நாளும் அவர் திருமுன் பணிந்திருந்து, அவர் உங்களை அழிக்க வேண்டாமென்று கெஞ்சி விண்ணப்பம் செய்து, அவரை நோக்கி:
(அவர்களை அழித்தால்) நீர் எங்களை மீட்டுப் புறப்படச் செய்த நாட்டில் வாழ்வோர் நிந்தையாய்ப் பேசி; ஓகோ! ஆண்டவர் அவர்களுக்கு வாக்குறுதி செய்திருந்த நாட்டில் அவர்களைப் புகுவிக்க இயலாமற் போனபடியாலும், அவர்களை வெறுத்துப் பகைத்ததனாலும் அன்றோ, பாலைவனத்தில் அவர்களைக் கொன்றுபோடுமாறு எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்று சொல்லுவார்கள்.