மேலும், நீ உரிமையாக்கிக் கொள்ளவிருக்கும் நாட்டிலே உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து உன்னைக் காட்டிலும் மிகப் பெரிய, வலிமைமிக்க இனத்தாராகிய ஏத்தையார் ஜெற்கேசையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஜெபுசையர் என்னப்பட்ட ஏழு இனங்களையும் உனக்கு முன்பாக அழித்து,
உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கைவயப்படுத்திய பின்பு நீ அவர்களை முறியடித்து அடியோடு அழிக்கக்கடவாய். அவர்களோடு நீ உடன்படிக்கை செய்துகொள்ளவும் வேண்டாம்; அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
ஏனென்றால், நீ நம்மைப் பின்பற்றாமல் பிற கடவுளருக்குப் பணி செய்யும்படி அந்தப் பெண்கள் உன் புதல்வர்களைத் தீய போதனையால் கெடுத்து விடுவார்கள். அதனாலே ஆண்டவர் கோபம் கொண்டு விரைவில் உன்னை அழித்துவிடுவார்.
ஆதலால், நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களையும் இடித்து, அவர்களுடைய சிலைகளையும் உடைத்து, அவர்களுடைய சோலைகளையும் வெட்டி, கொத்து வேலையாகிய அவர்களுடைய விக்கிரகங்களையும் சுட்டெரிக்கக் கடவீர்கள்.
உள்ளபடி நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட குடியாய் இருக்கிறாய். மண்ணிலுள்ள எல்லா மக்களிலும் உன்னைக் கடவுளாகிய ஆண்டவர் தம் சொந்த மக்களாகத் தேர்ந்துகொண்டார்.
மக்கள் அனைவரிலும் நீங்கள் திரளான மக்கள் என்பதற்காக ஆண்டவர் உங்களோடு சேர்ந்துகொண்டு உங்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. உள்ளபடி நீங்கள் மற்றுமுள்ள எல்லா மக்களிலும் கொஞ்சமாகவே இருக்கிறீர்கள்.
அவர் உங்கள்மேல் அன்புகூர்ந்து, உங்கள் மூதாதையர்களுக்குத் தாம் இட்ட ஆணையைக் காக்க வேண்டுமென்பதை முன்னிட்டு தமது வலுத்த கையால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனான பரவோனுடைய கையினின்றும் உன்னை மீட்டுக் கொண்டார்.
ஆதலால், உன் கடவுளாகிய ஆண்டவர் வலிமையும் உண்மையும் பொருந்திய கடவுளென்றும், அவர் தமக்கு அன்பு செய்து தம்முடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஆயிரம் தலைமுறைகள்வரையிலும் தமது உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காக்கிறவரென்றும்,
தம்மைப் பகைக்கிறவர்கள்மேல் அவர் உடனே பழிவாங்கி, அவர்களுடைய தகுதிக்கு ஏற்றபடி அவர்களுக்குச் சரியான தண்டனை வழங்கச் சற்றும் தாமதியாமல் அந்நேரமே அவர்களை அழிக்கிற கடவுளென்றும் அறியக்கடவாய் ஆகையால்,
நீ அனுசரிக்கும் பொருட்டு இன்று நான் உனக்குக் கருத்தாய்க் கற்பிக்கின்ற சட்ட ஒழுங்குகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைமைகளையும் கைக்கொண்டு ஒழுகக்கடவாய்.
இந்த நீதி நியாயங்களை நீ கேட்டு அவற்றைக் கைக்கொண்டு அனுசரிப்பாயாயின், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையர்க்கு ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையையும் காப்பார்; தமது இரக்கத்தையும் உன்மேல் வைப்பார்.
அவர் உன்னை நேசித்து, உனக்கு அளிக்கப்படுமென்று உன் மூதாதையர்க்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டிலே உன்னைப் பெருகச்செய்து, உன் பிள்ளைகளையும் உன் நிலத்தின் கனியாகிய தானியங்களையும் கொடி முந்திரிப் பழச் சாற்றையும் எண்ணெயையும் ஆட்டு மந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
மற்றுமுள்ள மக்கள் அனைவரையும்விட நீ ஆசீர் பெற்றவனாய் இருப்பாய். உங்களுக்குள்ளேயும் உங்கள் மிருகவுயிர்களுக்குள்ளேயும், ஆணிலேனும் பெண்ணிலேனும் மலடு இராது.
உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கைவயப்படுத்த இருக்கும் எல்லா மக்களையும் அழிக்கக்கடவாய். உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக, அவர்கள் வணங்கும் கடவுளரை நீ வணங்காதே, வணங்கினால் கெட்டுப்பொவாய்.
உன் கண்களே கண்ட கொடிய வாதைகளையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புறப்படச் செய்யக் காண்பித்த அடையாளங்களையும் அற்புதங்களையும், அவரது வலுத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நினைத்துக்கொள். நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா மக்களுக்கும் அவர் அவ்வண்ணமே செய்வார்; பயப்படாதே.
மேலும், அவர்களில் யார் யார் உனக்குத் தப்பி ஒளிந்து கொண்டிருப்பார்களோ, அவர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் வேரோடு அழித்தொழிக்கும் நாள் வரையிலும் அவர் செங்குளவிகளை அனுப்பி, அவர்களை வதைத்துத் துன்புறுத்துவார்.
அவரே உன் முன்னிலையில் அந்த மக்கள் மெதுவாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் அழிந்துபோகச் செய்வார். உள்ளபடி அந்த இனத்தவரை ஒருமிக்க அழிப்பதாயிருந்தால் காட்டு மிருகங்கள் உன் பக்கம் பெருகிப்போகும்.
அவர்களுடைய அரசர்களையும் உன் கைவயப்படுத்துவார். நீ அவர்களுடைய பெயர் முதலாய் வானத்தின் கீழ் இராதபடிக்கு, அவர்களை அழிக்கக்கடவாய். நீ அவர்களை அழித்துத் தீரும் வரையிலும் ஒருவரும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.
அவர்களுடைய சித்திரவேலைப்பாடுள்ள விக்கிரகங்களை நெருப்பால் சுட்டெரிக்கக்கடவாய். அவைகள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவைகளாகையால், நீ படுகுழியில் விழாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் விரும்பாமலும், அவற்றில் கொஞ்சமேனும் எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக.
அந்த விக்கிரகங்களைப் போல் நீ சாபத்துக்கு உள்ளாகாதபடிக்கு, அவைகளில் யாதொன்றையும் உன் வீட்டிற்குக் கொண்டு போகத் துணியாதே. அது சாபத்துக்கேற்ற பொருளாதலால், நீ விக்கிரகத்தை அசுத்தமென்றும், தீட்டுள்ள அழுகலென்றும் வெறுத்து, அருவருத்துப் புக்கணிக்கக்கடவாய்.