இப்பொழுது, ஓ இஸ்ராயேலரே! நீங்கள் பிழைத்திருக்கும் படிக்கும், உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கிற நாட்டிலே நீங்கள் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளவும், உங்களுக்கு நான் சொல்லி வருகிற கட்டளைகளையும் நீதிகளையும் கூர்ந்து கேளுங்கள்.
நான் உங்களுக்குச் சொல்லும் வார்த்தைகளில் ஒன்றையும் கூட்டவும் குறைக்கவும் வேண்டாம். நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளை நீங்கள் கைக்கொண்டு ஒழுகக்கடவீர்கள்.
பெல்பெகோரின் காரியத்திலே ஆண்டவர் செய்தவற்றையெல்லாம் நீங்கள் கண்ணாலே கண்டீர்கள். அவர் பெல்பெகோரைக் கும்பிடுகிறவர்களை உங்கள் நடுவில் இராதபடிக்கு அழித்து விட்டாரன்றோ ?
என் கடவுளாகிய ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நீதிமுறைகளையும் கற்பித்தேனென்று அறிவீர்கள். ஆகையால், நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப் போகிற நாட்டில் அவற்றை அனுசரிக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் அவற்றை ஏற்றுக் கொள்வதோடல்லாமல், அவற்றின்படி நடந்து கொள்ளவும் வேண்டும். உங்கள் ஞானமும் விவேகமும் மக்களின்முன்பாக எவ்வாறு விளங்கும் ? அவர்கள் உங்களுடைய எல்லாச் சட்டங்களையும்பற்றி நீங்கள் சொல்லக்கேட்டு: ஆ! இவர்கள் பெரிய இனத்தவர்; ஞானிகளும் அறிவாளிகளுமாய் இருக்கிறார்கள் என்று சொன்னால்மட்டுமேயன்றோ ?
நம் கடவுளாகிய ஆண்டவரை நாம் மன்றாடுகிறபோதெல்லாம் அவர் நமது அண்டையில் தானே இருக்கிறார். ஆ! நம் கடவுளுக்கும் நமக்கும் இடையே இருக்கிற நெருங்கிய உறவு, வேறு எந்தப் புகழ்பெற்ற இனத்தவருக்கும் அவர்களுடைய தேவர்களுக்கும் இடையே உண்டோ ? இல்லை.
உள்ளபடியே இந்நாளில் நான் உங்களுக்கு விவரித்துத் தெளிவிக்கும் சடங்கு முறைகளையும், நீதியுள்ள கட்டளைகளையும், நியாயச் சட்டங்களையும் பெற்றிருக்கிற வேறு சிறந்த மக்கள் யார் ?
ஆதலால், நீ உன்னையும் உன் ஆன்மாவையும் கவனமாய்க் காக்கக்கடவாய். நீ கண்களால் கண்டவைகளை மறவாதே. உன் வாழ்நாளெல்லாம் அவை உன் இதயத்தை விட்டு நீங்காதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. அவற்றை உன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
ஓரேப் ( மலையில் ) ஆண்டவர் என்னை நோக்கி: மக்களை நம்மிடம் கூடி வரச் செய். அவர்கள் நம்முடைய வார்த்தைகளைக் கேட்டுத் தாங்கள் பூமியில் உயிரோடிருக்குமட்டும் நமக்கு அஞ்சும்படியாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை சொல்லும்படியாகவும், நாம் அவர்களோடு பேசுவோம் என்று சொன்னார். அந்நாளில் நீங்கள் ஆண்டவருடைய முன்னிலையில் வந்து,
மலையின் அடிவாரத்தில் சேர்ந்து நின்றுகொண்டிருந்தபோது, அந்த மலை வானமட்டும் எரிந்து கொண்டிருந்ததையும், மலையின் கொடுமுடியில் இருளும் மேகமும் வீற்றிருந்ததையும் கண்டீர்கள்.
அப்பொழுது ஆண்டவர் நெருப்பின் நடுவிலிருந்து உங்களுடன் பேசினார். அவருடைய வார்த்தைகளின் குரலை நீங்கள் கேட்டீர்களேயன்றி, ஓர் உருவத்தையேனும் நீங்கள் கண்டீர்களோ ? இல்லை.
அந்நேரத்தில் அவர் தமது உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, அதை அனுசரிக்கக் கட்டளையிட்டதுமன்றி, இரண்டு கற்பலகைகளில் தாம் எழுதிய பத்து வாக்கியங்களையும் தந்தார்.
அன்றியும், நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப்போகிற நாட்டிலே நீங்கள் அனுசரிக்க வேண்டிய திரு ஆசாரங்களையும் நீதிக் கட்டளைகளையும் உங்களுக்குப் படிப்பிக்க வேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டார்.
ஆகையால், உங்கள் ஆன்மாக்களைக் கவனமாய்க் காத்துக் கொள்ளுங்கள். ஆண்டவர் ஓரேபிலே நெருப்பின் நடுவில் நின்று உங்களோடு பேசின நாளில் நீங்கள் ஓர் உருவத்தையும் காணவில்லை.
கண்களை வானத்துக்கு ஏறெடுத்துச் சூரியன், சந்திரன், விண்மீன்களை நீங்கள் காணும்போது, அறிவு தவறி அவற்றை ஆராதித்து உன் கடவுளாகிய ஆண்டவர் வானத்தின் கீழுள்ள எல்லா மக்களுக்கும் உபயோகமாய் இருக்கும்படி உண்டாக்கினவைகளுக்கு ஒத்த விக்கிரகத்தை உனக்கென்று ஏற்படுத்திக் கொண்டு தொழுவாயென்றும் எண்ணி, ஆண்டவர் அவ்வாறு செய்தார்.
ஆனால், ஆண்டவர் உங்கள் பேச்சுகளின் பொருட்டு என்மேல் கோபம் கொண்டு நான் யோர்தானைக் கடந்து போவதில்லையென்றும் அவர் உங்களுக்குக் கொடுக்கப்போகிற நல்ல நாட்டில் நான் புகுவதில்லை யென்றும் ஆணையிட்டார்.
உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நீ மறந்து, வேண்டாமென்று ஆண்டவர் விலக்கியுள்ளவற்றில் எவ்விதச் சாயலான உருவத்தையும் நீ செய்து கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
நீங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பெற்று அந்த நாட்டில் நீண்டநாள் இருந்த பின்பு, நீங்கள் அறிவு கெட்டு, உங்களுக்கு யாதொரு உருவத்தையும் செய்து, கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபமுண்டாகுமாறு அவர் பார்வைக்கு அக்கிரமமானதைச் செய்தால்,
யோர்தானைக் கடந்து நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப்போகிற நாட்டில் இராமல் விரைவிலே முற்றிலும் அழிந்து போவீர்களென்று நான் இந்நேரம் விண்ணையும் மண்ணையும் சாட்சி வைக்கிறேன். உங்களை அவர் அழித்தொழித்துவிடுவார்.
ஆயினும், உன் கடவுளாகிய ஆண்டவரை நீ அங்கே தேடுவாய். அவரை உன் முழு இதயத்தோடும் வருத்தம் நிறைந்த ஆன்மாவோடும் விரும்பித் தேடுவாயானால், அவர் உனக்கு அகப்படுவார்.
ஏனென்றால், முன் சொல்லப்பட்ட இவையெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடித்த பின்பு, கடைசி நாட்களில் நீ உன் ஆண்டவரிடம் திரும்பி, அவருடைய குரலொலிக்குச் செவி கொடுப்பாய்.
உள்ளபடி உன் கடவுளாகிய ஆண்டவர் இரக்கமுள்ள கடவுள். அவர் உன்னைக் கைவிடவுமாட்டார்; முற்றிலும் அழிக்கவுமாட்டார்; உன் தந்தையருக்குத் தாம் ஆணையிட்டுச் செய்து கொண்ட உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.
கடவுள் உலகிலே மனிதனைப் படைத்த நாள்முதல் உனக்கு முற்பட்ட பழையநாட்களில், வானத்தின் ஒரு கடைசி எல்லை தொடங்கி மறு எல்லை வரையிலுமுள்ள எவ்விடத்திலேனும், இப்படிப்பட்ட காரியம் நடந்ததுண்டோ அல்லது எப்போதேனும் கேள்விப்பட்டதுண்டோ என்று விசாரித்துக் கேள்.
அல்லது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம், கடவுள் மற்ற மக்களுக்குள்ளே ஓர் இனத்தைத் தமக்கென்று, சோதனைகளாலும் அடையாளங்களாலும் அற்புதங்களாலும் போரினாலும் வலிமையினாலும் ஓங்கிய கையாலும் மிகவும் பயங்கரமான காட்சிகளாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள, வகை செய்ததுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
உனக்குக் கற்பிக்கக் கருதி, அவர் வானத்தினின்று தமது குரலொலியை உனக்குக் கேட்கச் செய்து, பூமியிலே தமது கொடிய நெருப்பை உனக்குக் காண்பித்தார். நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவருடைய வார்த்தைகளை நீயே கேட்டாய்.
உன் தந்தையரை நேசித்ததனாலும், அவர்களுக்குப்பின் அவர்கள் சந்ததியைத் தேர்ந்துகொண்டதனாலும், அவர் தமது மிகுந்த வல்லபத்துடன் உனக்குமுன் நடந்து எகிப்திலிருந்து உன்னைப் புறப்படச் செய்தார்.
உன்னிலும் வலிமை மிக்க இனத்தவரை அடியோடு அழிக்கும்படி உன்னை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய நாட்டிலே உன்னைப் புகுவித்து, அந்த நாட்டை உனக்கு உரிமையாகக் கொடுத்தார். இது இந்நாளில் நடக்கிற காரியம்தானே ?
ஆகையால், மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் கடவுளாகிய ஆண்டவரே கடவுள்; அவரைத் தவிர வேறொருவருமில்லை என்பதை நீ இன்று அறிந்து உன் இதயத்தில் சிந்திக்கக் கடவாய்.
உனக்கும், உனக்குப்பின் உன் புதல்வருக்கும் நன்மையாகும் பொருட்டும், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ நெடுங்காலம் வாழும் பொருட்டும், நான் உனக்குக் கற்பிக்கிற அவரது கட்டளையையும் சட்டங்களையும் கைக்கொண்டு ஒழுகக்கடவாய் என்றார்.
( இரண்டொரு நாளும் ) முன்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்ற யாரேனும் ஓடிப்போய் மேற்படி நகரங்களிலே ஒரு நகரத்தைச் சரணடைந்தால், அதில் தப்பிப் பிழைத்திருக்கும்படி அவைகளை ஏற்படுத்தினார்.
அவை எவையென்றால்: ரூபன் கோத்திரத்தாரைச் சேர்ந்த சமவெளியாகிய பாலைவனத்தில் இருக்கிற பொசோர் நகரமும், காத் கோத்திரத்தாரைச் சேர்ந்த கலாத் நாட்டில் இருக்கிற இராமொட் நகரமும், மனாஸே வம்சத்தாரைச் சேர்ந்த பாஸான் நாட்டுக் கோலான் நகரமும் ஆகிய இந்த மூன்றுமேயாம்.