பின்பு நாம் திரும்பிப் பாஸானுக்குப் போகும்வழியே செல்லுகையில், பாஸானின் அரசனாகிய ஓக் என்பவன் தன்னுடைய குடிகள் எல்லாரோடும் புறப்பட்டு நம்மோடு எதிர்த்துப் போர் செய்யும்படி எதிராய்க்கு வந்தான்.
அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி: நீ அவனுக்கு அஞ்சாதே. அவனையும் அவன் குடிகள் அனைவரையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்படைத்தோம். எஸெபோனிலே குடியிருந்த அமோறையருடைய அரசனாகிய செகோனுக்கு நீ செய்தது போல இவனுக்கும் செய்வாய் என்றருளினார்.
அவ்வாறே நம் கடவுளாகிய ஆண்டவர் பாஸானின் அரசனாகிய ஓக்கையும் அவனுடைய குடிகள் எல்லாரையும் நமது கையில் ஒப்படைத்தமையால், நாம் அவர்களெல்லாரையும் வெட்டி வீழ்த்தினோம்.
ஒரே காலத்தில் அவனுடைய நகரங்களையெல்லாம் பிடித்து அழித்துவிட்டோம். அவற்றில் நாம் பிடிக்காத நகரம் ஒன்றும் இல்லை. பாஸானிலிருந்த ஓக்கின் ஆட்சிக்குட்பட்ட அறுபது நகர்களையும் பிடித்து, அர்கோப் நாடு முழுவதையும் காடாக்கிவிட்டோம்.
அந்த நகர்களெல்லாம் மிகவும் உயர்ந்த மதில்களாலும் வாயில்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. அன்றியும், மதில்கள் இல்லாத நகர்களும் பல இருந்தன.
சமவெளியிலுள்ள எல்லா நகர்களையும், பாஸான் அரசனான ஓக் என்பவனுடைய நகர்களாகிய செல்கா, எதிராயிவரையிலுமுள்ள கலாத் நாடு பாஸான் நாடு முழுவதையும் ( பிடித்தோம் ).
ஏனென்றால், அரக்கவம்சத்தாருக்குள்ளே பாஸான் அரசனாகிய ஓக் என்பவன் மட்டுமே இருந்தான். அம்மோன் புதல்வரைச் சார்ந்த ரப்பாத் என்ற நகரிலே இரும்பினால் செய்யப்பட்ட அவனுடைய கட்டில் இருக்கிறது: அது மனிதனுடைய கைமுழத்தின் அளவுப்படி ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் உள்ளது.
நாம் அக்காலத்திலே உரிமையாக்கிக் கொண்ட நாடு அர்னோன் ஓடைக் கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கிக் கலாத்மலை நாட்டில் பாதிவரையிலும் பரந்து கிடக்கும். அதிலிருந்த நகர்களை ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் கொடுத்தேன்.
கலாத்தின் மற்றப்பாகத்தையும், ஓக்கின் நாடாயிருந்த பாஸான் நாடு முழுவதையும், அர்கோப் நாடு முழுவதையும் மனாஸேயுடைய பாதிக்கோத்திரத்திற்கு ஒப்புவித்துவிட்டேன். பாஸான் முழுவதுமே அரக்கர் நாடு என்று அழைக்கப்படுகின்றது.
மனாஸேயின் புதல்வனாகிய ஜயீர் என்பவன் அர்கோப் நாடு முழுவதையும், ஜெசூரிமாக்காத்தி எல்லைகள் வரையிலும் உரிமையாக்கிக் கொண்டு, பாஸானைத் தன் பெயரைக் கொண்டே ஆவோட் ஜயீர் என்று அழைத்தான். ஆவோட் ஜயீர் என்றால் ஜயீருடைய நகர் என்பதாம். இந்தப் பெயர் இந்நாள் வரையிலும் வழக்கிலிருந்து வருகிறது.
ஆனால், அர்னோன் ஓடைவரையிலுமுள்ள கலாத் நாட்டின் ஒரு பகுதியையும், அர்னோன் நடுஓடையும் அதன் அருகேயுள்ள நாடும் தொடங்கி, அம்மோன் புதல்வருடைய எல்லையாகிய ஜாபோக் ஓடைவரைக்கும் விரிந்து கிடக்கும் நாட்டையும்,
அக்காலத்தில் நான் உங்களை நோக்கி: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு இந்த நாட்டை உரிமையாகத் தருகிறார். போருக்குத் தகுந்த ஆடவராகிய நீங்கள் அனைவரும் ஆயுதம் தாங்கியவராய் உங்கள் சகோதரராகிய இஸ்ராயேல் மக்களுக்கு முன்னே நடந்து போங்கள்.
ஆண்டவர் உங்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தது போல் அவர் உங்கள் சகோதரரையும் இளைப்பாறச் செய்து, அவர்களுக்கு யோர்தானின் அப்புறத்தில் கொடுக்கவிருக்கிற நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும்வரையிலும் நீங்கள் ( பாளையத்தில் ) இருந்து, பிறகு நான் கொடுத்துள்ள உரிமைப் பாகத்திற்கு அவரவர் திரும்பிச் செல்வீர்கள் என்று கட்டளை கொடுத்தேன்.
அக்காலத்திலேயும் நான் யோசுவாவை நோக்கி: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அந்த இரண்டு அரசர்களுக்கும் செய்தவைகளை நீ உன் கண்ணாரக் கண்டாயன்றோ ? நீ போய்ச் சேரவேண்டிய எல்லா நாடுகளுக்கும் அவர் அவ்விதமே செய்வாராகையால், நீ அவர்களுக்கு அஞ்சாதே,
கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் எல்லாம் வல்ல கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீரே! நீர் செய்து முடித்த செயல்களுக்கும் காண்பித்த வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யக் கூடிய வேறு கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை.
நீ பஸ்கா மலையின் கொடுமுடியில் ஏறி உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் திருப்பிப் பார். ஏனென்றால், நீ யோர்தான் நதியைக் கடந்து போவதில்லை.
நீ யோசுவாவுக்கு அறிவுரை கூறி அவனைத் திடப்படுத்துவாயாக. அவனே இந்த மக்களுக்குத் தலைவனாகி, நீ காணவிருக்கும் நாட்டை அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான் என்றருளினார்.