உன் பகைவர்களுக்கு எதிராக நீ போருக்குப் போகும்போது, அவர்களுடைய குதிரைகளையும் தேர்களையும் உன்னிலும் பெரிய கூட்டமாகிய போர்வீரர்களையும் கண்டாலும் அவர்களுக்கு அஞ்சாதே. ஏனென்றால், உன்னை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
இஸ்ராயேலரே, கேளுங்கள். இன்று உங்கள் பகைவர்களுடன் போர் செய்ய இருக்கிறீர்கள். உங்கள் இதயம் சோரவும் வேண்டாம்; அவர்களைப் பார்த்து நீங்கள் அஞ்சவும் முதுகு காட்டவும் மனம் கலங்கவும் வேண்டாம்.
ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் நடுவில் இருக்கிறார். அவரே உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி உங்களோடு நின்று உங்கள் பக்கத்தில் போராடுவார் என்பார்.
அன்றியும் படைத்தலைவர்கள் தத்தம் படை முகத்திலே நின்று உரத்த குரலில் போர்வீரர்களை நோக்கி: புது வீட்டைக் கட்டி அதை நேர்ச்சி செய்யாதவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவான். ஏனென்றால், அவன் போர்க்களத்திலே விழுந்து இறந்தால் வேறொருவன் அவன் வீட்டை நேர்ச்சி செய்ய வேண்டியதாகும்.
கொடிமுந்திரித் தோட்டத்தை நட்டு அதன் பழங்களை யாரும் உண்ணத்தக்கதாகத் தான் செய்யவேண்டியதை இன்னும் செய்யாதவன் ஒருவேளை போர்க்களத்திலே இறந்தால் வேறொருவன் அவனுக்குப் பதிலாக அந்த வேலையைச் செய்யவேண்டியதாகும். (அதனால் மேற்சொல்லிய தோட்டத்திற்கு உரியவன்) தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவன்.
ஒரு பெண்ணுக்குப் பரிசம் கொடுத்து இன்னும் அவளை மணந்து கொள்ளாதவன் போரில் இறந்தால் வேறொருவன் அவளை மணந்துகொள்ள வேண்டியதாகும்; (அதனால்) அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவான் என்றும்,
இவைகளைச் சொல்லிய பிற்பாடு படைத்தலைவர்கள் மீண்டும் அவர்களை நோக்கி: உங்களுள் பயந்தவனும் திடமற்றவனுமாய் இருக்கிறவன் தன் சகோதரர்களுடைய மனவூக்கம் சோர்ந்து போவதற்கு ஒருவேளை காரணமாய் இருக்கலாம். (அதனால்) அவனும் வீட்டிற்குத் திரும்பிப் போகக்கடவான் என்றும் சொல்லக்கடவார்கள்.
அவர்கள் உடன்பட்டுத் தங்கள் வாயிலைத் திறந்தார்களாயின், அதிலுள்ள மக்ககௌல்லாரும் அடைக்கலம் பெறுவார்கள். ஆயினும், அவர்கள் உனக்குத் திறை கொடுப்பவர்களாகி உனக்கு ஊழியம் செய்யக்கடவார்கள்.
பெண்களையும் குழந்தைகளையும் மிருகவுயிர்களையும் மட்டும் உயிரோடு வைத்து, நகரத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, அவற்றை உன் போர்வீரருக்குள்ளே பங்கிட்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த பகைவருடைய சொத்துகளை அனுபவிப்பாய்.
(இப்படிச் செய்யவேண்டிய காரணம் என்னவென்றால்) அவர்களை உயிரோடிருக்க விட்டால், அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து வந்த பற்பலவித வெறுப்புக்குள்ளான செயல்களை உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள்; அதனாலே நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு விரோதமாய்க் குற்றவாளிகளாவீர்கள்.
நீ ஒரு நகரத்தை நெடுநாளாய் முற்றுகையிட்டு, அதைப் பிடிக்கும் பொருட்டுச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்போது, நீ கோடரியை ஓங்கிப் பழமரங்களை வெட்டவும் வேண்டாம்; சுற்றுப்புறத்திலுள்ள பலவகை மரங்களை அழிக்கவும் வேண்டாம். அது மரமேயொழிய வேறன்று. அது உன் பகைவரோடு சேர்ந்துகொண்டு உன்மீது போருக்கு வராதன்றோ ?
ஆனால், உண்ணத்தக்க கனிதராத காட்டு மரங்களோ, அவை பற்பல விதமாகப் பயன்படக் கூடுமென்று காண்பாயேல், அவற்றை வெட்டிப் போர்க் கருவிகளைச் செய்து, உனக்கு அடங்காமல் எதிராக நிற்கும் அந்த நகரம் பிடிபடுமட்டும் அந்த போர்க் கருவிகளைப் பயன்படுத்துவாய்.