உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டின் மக்களைத் துரத்தி விட்டு, நீ அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டு அவர்களுடைய நகரங்களிலும் வீடுகளிலும் குடியேறும்போது,
(உதாரணமாக) ஒருவன் யாதொரு கபடுமில்லாமல் மற்றொருவனோடுகூட விறகு வெட்டக்காட்டில் போய் மரத்தை வெட்டும்பொழுது கோடாரி கை நழுவியாவது, இரும்புக்கம்பை விட்டுக் கழன்றாவது துணைவன்மேல் பட்டதனால் அவன் இறந்து போனால், இப்படிக் கொலை செய்தவன் அந்த நகரங்களுள் ஒன்றில் ஓடிப்போய்த் தன் உயிரைக் காப்பாற்றுவான்.
இல்லா விட்டால், கொலை செய்யப்பட்டவனுடைய உறவினன் வயிற்றெரிச்சல் கொண்டு (பழிவாங்க) அவனைப் பின்தொடரும்போது வழி அதிகத் தூரமாய் இருக்கும்மாயின் அவனைப் பிடித்துக் கொன்றுவிடுவான். உள்ளபடி அவன் இறந்தவனை முன்னே பகைக்கவில்லை என்பது தெளிவாகையால், அவன்மேல் சாவுக்கு உகந்த குற்றம் ஒன்றும் இல்லை.
நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அனுசரித்து, இன்று நாம் உனக்குக் கற்பிக்கிற கட்டளைகளின்படி நடந்து, ஆண்டவரிடம் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளில் எந்நாளும் நடந்து ஒழுகுவாயாக.
எனின், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு ஆணையிட்டபடி உன் எல்லைகளை விரிவுபடுத்திக்கொடுப்போம் என்று அவர்களுக்குச் சொல்லிய நாடு முழுவதையும் உனக்குத் தந்தருள்வார். பிறகு முன்குறிக்கப்பட்ட மூன்று நகரங்களோடு இன்னும் மூன்று நகரங்களைச் சேர்த்து, அடைக்கல நகரங்களின் எண்ணிக்கையை இருமடங்காக்கு.
ஆனால், ஒருவன் தன் அயலானைப் பகைத்து, அவனுக்காகப் பதுங்கியிருந்து, எழும்பி அவன்மேல் விழுந்து சாகடித்த பின்பு, அவன் முன்சொல்லப்பட்ட நகரங்களுள் ஒன்றில் ஒதுங்கினால்,
அவனுடைய நகரத்துப் பெரியோர்கள் அவனை அடைக்கல நகரத்தினின்று பிடித்து வரும்படி ஆள் அனுப்பி, அவன் சாகும்படிக்குக் கொலை செய்யப்பட்டவனுடைய உறவினன் கையில் அவனை ஒப்புவிப்பார்கள். இவன் அவனைச் சாகடிப்பான்.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய்க் கொடுக்கும் நாட்டில் உனக்குக் கிடைக்கும் சொத்திலே முன்னோர்கள் வைத்த எல்லைக்குறிக் கற்களை நீ எடுக்கவும் ஒதுக்கிப் போடவும் ஆகாது.
ஒருவன் எவ்விதக் குற்றமோ தீச்செயலோ செய்திருப்பினும், ஒரே சாட்சியைக் கேட்டு நியாயம் தீர்க்கக்கூடாது. ஆனால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கினாலே காரியம் தெளிவாக வேண்டும்.