நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய பிள்ளைகளாய் இருங்கள். ஒருவன் இறந்ததை முன்னிட்டு உங்கள் உடலை வெட்டவும் வேண்டாம்; தலைமயிரைச் சவரம் செய்யவும் வேண்டாம்.
அசைபோடுவனவற்றிலும் இரண்டாகப் பிரிந்திராத குளம்புள்ள மிருகங்களை, உதாரணமாக: ஒட்டகம், முயல், கொகிலில் முதலியவற்றை நீங்கள் உண்ண வேண்டாம். அவை அசை போடுவது மெய்யே. ஆனால், அவைகளுக்கு விரிகுளம்பில்லையாதலால் அவைகள் உங்களுக்கு அசுத்தமாய் இருக்கும்.
பன்றிக்கு விரிகுளம்புள்ளதாயினும், அது அசை போடுவதில்லை. ஆதலால், பன்றி உங்களுக்கு அசுத்தமானது. அதன் இறைச்சியை உண்ணவும் கூடாது; அதன் செத்தவுடலைத் தொடவும் கூடாது.
தானாய் செத்த எதையும் உண்ணலாகாது. அதை உங்கள் வாயிலில் இருக்கிற அகதிக்குக் கொடுக்கலாம் அல்லது அவனுக்கு விற்கலாம். ஏனென்றால், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் புனித மக்கள். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்.
உன் கடவுளாகிய ஆண்டவர் பெயர் புகழப்படும்படிதான் தேர்ந்து கொண்டுள்ள இடத்திலே உன் தானியத்திலும் கொடி முந்திரிப்பழச் சாற்றிலும் எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவரது திருமுன் உண்டு, அதனால் எக்காலமும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக் கற்றுக்கொள்.
ஆனால் (ஒருவேளை) உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடம் அதிகத் தூரமாயிருந்தாலும் இருக்கும்; அப்படியிருந்தால் அவர் உனக்கு ஆசீரளித்துத் தந்தருளிய பொருட்களையெல்லாம் கொண்டுபோவது கூடாத காரியமாயிருக்கும்.
அங்கே அந்தப் பணத்தைக் கொண்டு உன் விருப்பப்படி ஆடு மாடு முதலிய இறைச்சி வகையையும், கொடிமுந்திரிப் பழச்சாறு முதலிய மதுபானத்தையும், உன் ஆன்மா விரும்புகிற எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி, உன் வீட்டாரோடு உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையிலே விருந்தாடுவாய்.
அப்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கை செய்யும் வேலைகளிலெல்லாம் உனக்கு ஆசீரளிக்கும்படி, உன்னோடு பங்கும் உரிமையுமில்லாத லேவியனும், உன் வாயில்களில் இருக்கிற அகதியும் திக்கற்றவனும் விதவையும் வந்து உண்டு நிறைவு கொள்வார்கள்.