அக்காலத்தில் ஆண்டவர் என்னை நோக்கி: முந்தினவைகளைப்போல் நீ இரண்டு கற்பலகைகளைச் செதுக்கிக் கொண்டு மலையில் ஏறி நம்மிடம் வருவாய். ஒரு மரப்பெட்டகத்தையும் செய்வாயாக.
அப்படியே நான் சேத்தீம் மரத்தால் ஒரு பெட்டகத்தைச் செய்து, முந்தினவைகளின் வடிவமாக இரண்டு பலகைகளை வெட்டிச் செதுக்கி அவைகளைக் கையிலே ஏந்திக்கொண்டு மலையில் ஏறினேன்.
மக்கள் சபை கூடியிருந்த நாளில் ஆண்டவர் மலையிலே நெருப்பின் நடுவில் நின்று உங்களுக்குத் திருவாக்கருளிய பத்துக் கட்டளைகளையும் தாம் முன்பு எழுதிய வண்ணமே இந்தப் பலகைகளிலும் எழுதி, அவைகளை என்னிடம் தந்தார்.
அதன்பின் இஸ்ராயேல் மக்கள் ஜக்கான் புதல்வரைச் சேர்ந்த பெரோத்திலிருந்து பாளையம் பெயர்ந்து மோசராவுக்கு வந்தார்கள். அங்கே ஆரோன் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர் புதல்வனாகிய எலெயஸார் அவருக்குப் பதிலாகத் தலைமைக்குரு ஆனார்.
அக்காலத்தில் ஆண்டவருடைய உடன் படிக்கைக் கூடாரத்தைச் சுமப்பதற்கும், இந்நாள் வரையிலும் நடந்து வருவதுபோல் ஆண்டவர் திருமுன் நின்று அலுவலைச் செய்வதற்கும், அவருடைய பெயரால் ஆசீர் அளிப்பதற்கும் ஆண்டவர் லேவியின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
அவர் என்னை நோக்கி: நாம் மக்களுக்கு அளிப்போமென்று அவர்களுடைய மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில், அவர்கள் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறு நீ போய் மக்களுக்கு முன்பாகச் சொல்வாய் என்று எனக்குத் திருவுளம்பற்றினார்.
இப்பொழுது, இஸ்ராயலே, நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய நெறியில் ஒழுகி, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கொண்டு, உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் அவருக்கு ஊழியம் செய்து,
உனக்கு நன்மை பயக்கும் பொருட்டு நான் இன்று உனக்குக் கற்பிக்கிற ஆண்டவருடைய கட்டளைகளையும் ஆசாரங்களையும் நீ கைக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டுமென்பதேயல்லாது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் வேறு எதனைக் கேட்கிறார் ?
ஆயினும், ஆண்டவர் உன் மூதாதையரோடு ஒன்றித்து அவர்களை நேசித்தமையால், அவர்களுடைய சந்ததியாகிய உங்களை எல்லா மக்கள் கூட்டங்களுக்குள் தேர்ந்து கொண்டார். இது இந்நாளிலே எண்பிக்கப்பட்டதன்றோ ?