Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Daniel Chapters

Daniel 9 Verses

1 கல்தேயரின் அரசுக்கு மன்னனாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அசுவெருஸ் என்பவனின் மகன் தாரியுஸ் ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.
2 அவனுடைய முதல் ஆட்சியாண்டில், தானியேலாகிய நான், யெருசலேமின் அழிவு நிலை முடிவதற்கு எழுபது ஆண்டுகள் செல்ல வேண்டும் என்று எரெமியாஸ் இறைவாக்கினர்க்கு ஆண்டவர் சொல்லிய ஆண்டுக் கணக்கை நூல்களிலிருந்து படித்தறிந்தேன்.
3 நான் உண்ணாமல் நோன்பிருந்து கோணியுடை அணிந்து சாம்பலில் அமர்ந்து, என் முகத்தை என் கடவுளாகிய ஆண்டவர்பால் திருப்பி மன்றாடி வேண்டிக் கொண்டேன்.
4 என் கடவுளாகிய ஆண்டவரிடம் என் பாவங்களை அறிக்கையிட்டு மன்றாடி வேண்டிக் கொண்டேன்: "ஆண்டவரே, உமக்கு அன்பு செய்து, உம்முடைய கட்டளைகளைக் கடைப் பிடிக்கிறவர்களுடன் உடன் படிக்கையைக் காத்து இரக்கம் காட்டுகிறவராகிய அஞ்சத் தக்க மகிமை மிக்க இறைவா, நாங்கள் பாவம் செய்தோம்;
5 அக்கிரமம் புரிந்தோம்; தீநெறியில் நடந்து விலகிப் போனோம்; உம் கட்டளைகளையும் நீதி முறைமைகளையும் விட்டு அகன்று போனோம்.
6 எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், எங்கள் தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் உமது திருப்பெயரால் அறிவுரை கூறிய இறைவாக்கினர்களான உம் ஊழியர்களுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.
7 ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு எதிராகச் செய்த துரோகங்களுக்காக உம்மால் அருகிலோ தொலைவிலோ எல்லா நாடுகட்கும் விரட்டப்பட்டிருக்கும் யூதர்களும், யெருசலேம் குடிகளும், எல்லா இஸ்ராயேலருமாகிய எங்களுக்கு இன்றுள்ளது போலத் தலை கவிழும் வெட்கமே உரியது.
8 ஆம், ஆண்டவரே, வெட்கமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் தந்தையர்களுக்கும் உரியது; ஏனெனில் நாங்கள் உமக்கு எதிராகப் பாவஞ் செய்தோம்.
9 எங்கள் இறைவனும் ஆண்டவருமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு; நாங்களோ உம்மை விட்டு அகன்று போனோம்.
10 இறைவாக்கினர்களாகிய தம் ஊழியர்கள் வாயிலாய் எங்களுக்குக் கொடுத்த தம்முடைய சட்டங்களின் படி நடக்குமாறு சொன்ன எங்கள் இறைவனாகிய ஆண்டவரின் குரலொலியை நாங்கள் கேட்க மறுத்தோம்.
11 இஸ்ராயேலர் யாவரும் உம் நீதி முறைமைகளை மீறி, உம்முடைய சொற்களைக் கேட்காமல் போயினர்; கடவுளின் ஊழியரான மோயீசனின் நூலில் எழுதப்பட்ட சாபக் கேடும் சாபனைகளும் எங்கள் மேல் விழுந்தன; ஏனெனில் நாங்கள் அவருக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.
12 எங்களுக்கும், எங்களை ஆண்டு வந்த எங்கள் அரசர்களுக்கும் எதிராக அவர் கூறியவற்றை நிறைவேற்றி விட்டார்; ஏனெனில் யெருசலேமுக்கு நிகழ்ந்தது போல வானத்தின் கீழ் வேறெங்கும் நடக்கவில்லை.
13 மோயீசனின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளவாறே, இந்தத் தீங்கெல்லாம் எங்கள் மேல் வந்துற்றது; இருப்பினும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நாங்கள் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்பி, உமது உண்மையை எண்ணிப் பார்க்கும்படி உமது முகத்தை நாங்கள் தேடவில்லை.
14 ஆகையால் ஆண்டவர் எங்கள் இறுமாப்பைப் பார்த்து அதற்குத் தக்க தண்டனையை எங்களுக்குத் தந்தார்; எங்கள் கடவுளாகிய ஆண்டவர் செய்து வரும் செயல்களிலெல்லாம் நீதியுள்ளவர்; அவருடைய சொற்களைக் கேட்டு நடக்கத் தவறினோமே!
15 அப்படியிருக்க, ஆண்டவரே, உம் மக்களை ஆற்றல் மிக்க கையால் எகிப்து நாட்டிலிருந்து மீட்டு, இந்நாள் வரை நாங்கள் காணுமாறு உமக்குப் பேரும் புகழும் தேடிக்கொண்ட எங்கள் இறைவனே, நாங்களோ உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம், அக்கிரமம் புரிந்தோம்.
16 ஆனால் ஆண்டவரே, உம்முடைய நீதிச் செயல்களுக்கேற்ப உம் சினம் யெருசலேமாகிய உமது நகரத்தையும், உமது பரிசுத்த மலையையும் விட்டு விலகுவதாக! ஏனெனில் எங்கள் பாவங்களுக்காகவும், எங்கள் தந்தையரின் அக்கிரமங்களுக்காகவும் யெருசலேமும் உம் மக்களும் சுற்றுப் புறத்தினர் யாவருக்கும் முன்பாக நிந்தையாகி விட்டனர்.
17 ஆகையால், எங்கள் இறைவா, இப்பொழுது உம் அடியானின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அவனுடைய மன்றாட்டைக் கேட்டருளும்; பாழாய்க் கிடக்கிற உமது பரிசுத்த இடத்தின் மேல் உமது முகம் உம்மை முன்னிட்டே ஒளிர்வதாக!
18 என் இறைவனே, உமது செவிசாய்த்துக் கேட்டருளும்; உம் கண்களைத் திறந்து எங்கள் துயரத்தையும், உமது திருப்பெயர் தாங்கிய நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நன்மைத்தனத்தை நம்பாமல், உமது இரக்கப் பெருக்கத்தையே நம்பி எங்கள் மன்றாட்டுகளை உமது முன்னிலையில் செலுத்துகிறோம்.
19 ஆண்டவரே, கேளும்; ஆண்டவரே, மன்னித்தருளும்; ஆண்டவரே, செவிமடுத்துச் செயலாற்றும்; என் இறைவா, உமக்காகவே கேட்கிறேன், காலந்தாழ்த்தேயும்; ஏனெனில் இது உமது நகரம், இவர்கள் உம் மக்கள்; உம் திருப்பெயரைத் தாங்கியுள்ளனர்."
20 இவ்வாறு நான் சொல்லி வேண்டிக் கொண்டு, என் பாவங்களையும், என் இனத்தாராகிய இஸ்ராயேல் மக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு, என் கடவுளின் பரிசுத்த மலைக்காக என் விண்ணப்பங்களை என் கடவுள் முன்னிலையில் செலுத்தி,
21 இவ்வாறு நான் செபம் செய்து கொண்டிருக்கையில், முதற் காட்சியில் நான் கண்ட கபிரியேல் என்பவர் அதோ, விரைவாய்ப் பறந்து வந்து மாலைப்பலி வேளையில் என்னைத் தொட்டார்;
22 அவர் என்னிடம் சொன்னது பின்வருமாறு: "தானியேலே, உனக்குக் கற்பிக்கவும், தெளிவுண்டாக்கவும் நான் புறப்பட்டு வந்தேன்.
23 நீ செபம் செய்யத் தொடங்கிய போதே கட்டளை பிறந்தது; நான் அதை உனக்குத் தெரிவிக்க வந்தேன்; ஏனெனில் நீ மிகுதியான அன்புக்குரியவன்; ஆதலால் நான் சொல்வதைக் கவனித்துக் காட்சியின் உட்பொருளை உணர்ந்துகொள்:
24 மீறுதல் முடிவுறவும், பாவம் அழிவுறவும், அக்கிரமம் பரிகரிக்கப்படவும், முடிவில்லா நீதி வரவும், காட்சியும் இறைவாக்கும் நிறைவேறவும், பரிசுத்தர்களுள் பரிசுத்தர் அபிஷுகம் பெறவும் உன் இனத்தார் மேலும், உன் பரிசுத்த நகர் மேலும் எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
25 ஆகவே, நீ அறிந்து மனத்தில் வைக்க வேண்டியது: யெருசலேம் திரும்பக் கட்டப்படும்படி கட்டளை பிறந்தது முதல், தலைவராக அபிஷுகம் செய்யப்பட்டவர் வரும் வரையில் ஏழு வாரங்கள் ஆகும்; பின்பு அறுபத்திரண்டு வாரங்களில் தெருக்களும் மதில்களும் கால நெருக்கடியில் திரும்பவும் கட்டப்படும்;
26 அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பிறகு, அபிஷுகம் செய்யப்பட்டவர் குற்றமற்றவராயிருந்தும் தொலைக்கப்படுவார்; வரப்போகும் தலைவனது மக்களினம் நகரத்தையும் பரிசுத்த இடத்தையும் அழிக்கும்; அவனுடைய முடிவு பேரழிவாகும்; இறுதிவரை போர் நடக்கும்; இதுவே குறிக்கப்பட்ட அழிவு
27 ஒரு வாரத்திற்கு அவன் பலரோடு உடன்படிக்கை செய்வான், பாதி வாரத்திற்குப் பலியையும் காணிக்கையையும் நிறுத்தி விடுவான்; திருக்கோயிலில் அருவருக்கத்தக்கது இருக்கும், அந்த அருவருப்பு இறுதி வரையில், பாழாக்குபவனுக்குக் குறிக்கப்பட்ட அழிவு வரையில் நிலைநிற்கும்."
×

Alert

×