English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Daniel Chapters

Daniel 5 Verses

1 பல்தசார் என்னும் அரசன் பெருங்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரிய விருந்தொன்று செய்தான்; அந்த ஆயிரம் பேர்களுடன் அவனும் திராட்சை இரசம் குடித்தான்.
2 குடிமயக்கத்தில் இருந்த அவன், அரசனும் அவனுடைய பெருங்குடி மக்களும், அவனுடைய மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்காகத் தன் தந்தையாகிய நபுக்கோதனசார் யெருசலேம் கோயிலிலிருந்து கொண்டு வந்த பொன் வெள்ளிப் பாத்திரங்களைக் கொண்டுவரச் சொன்னான்.
3 அவ்வாறே, யெருசலேமிலிருந்த இறைவனின் கோயிலிலிருந்து கொண்டு வந்த பொன், வெள்ளிப் பாத்திரங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும், அவனுடைய பெருங்குடி மக்களும், அவனுடைய மனைவியரும் வைப்பாட்டிகளும் அந்தப் பாத்திரங்களில் குடித்தார்கள்;
4 அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக்கொண்டு, பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் இவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.
5 திடீரென விளக்குக்கு எதிரில், அரசனது அரண்மனைக் கூடத்துச் சுவரில் மனித கைவிரல்கள் தோன்றி எழுதத் தொடங்கின. அரசனோ எழுதுகின்ற அந்தக் கையின் மணிக்கட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.
6 அப்போது, அரசனின் முகம் மாறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலக்கத்திற்குள்ளாக்கின; அவனது இடுப்பின் கட்டுகள் தளர்ந்தன; அவனுடைய தொடைகள் நடுங்கின.
7 அரசனோ நிமித்திகரையும் கல்தேயரையும் குறிச்சொல்லுகிறவர்களையும் கூட்டிக் கொண்டு வரும்படி கத்தினான்; மன்னன் பபிலோனிய ஞானிகளை நோக்கி. "இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்குச் செம்பட்டாடையும், கழுத்தில் பொற்சங்கிலியும் அணிவித்து என் அரசில் மூன்றாம் அதிகாரியாய் ஏற்படுத்துவேன்" என்றான்.
8 பிறகு அரசனின் ஞானிகள் எல்லாரும் உள்ளே சென்றனர்; ஆனால் அந்தச் சொற்களைப் படிக்கவோ, அவற்றின் உட்பொருளை அரசனுக்கு அறிவிக்கவோ அவர்களால் இயலவில்லை.
9 அதைக் கண்ட மன்னன் பல்தசார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பெருங்குடி மக்களும் திகைத்துப் போயினர்.
10 அரசனுக்கும், பெருங்குடி மக்களுக்கும் நேர்ந்ததை அறிந்த அரசி விருந்துக் கூட்டத்திற்குள் வந்து, "அரசே, நீர் நீடூழி வாழ்க! உம்முடைய நினைவுகளின் காரணமாய் நீர் கலங்கவேண்டா; உம் முகம் வேறுபடக் காரணமுமில்லை.
11 பரிசுத்த தெய்வங்களின் ஆவி கொண்ட மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தெய்வங்களுக்கொத்த அறிவொளியும் புத்தியும் ஞானமும் அவனிடத்தில் வெளிப்பட்டு விளங்கின. உம் தந்தையாகிய நபுக்கோதனசார் அரசர் அவனை ஞானிகளுக்கும் நிமித்திகர்களுக்கும் கல்தேயர்களுக்கும் குறிசொல்கிறவர்களுக்கும் தலைவனாகக் கூட ஏற்படுத்தினார்; ஆம், அரசே, உம் தந்தை அவ்வாறு செய்தார்.
12 அரசனால் பல்தசார் என்று பெயரிடப்பட்ட அந்தத் தானியேலுக்கு, வியத்தகு விவேகமும் அறிவும் புத்திக் கூர்மையும், கனவுகளுக்கு விளக்கம் கூறும் அறிவாற்றலும், சிக்கல்களைத் தீர்க்கும் வல்லமையும் உண்டு; ஆகையால் இப்போது தானியேலைக் கூட்டிக் கொண்டு வந்தால், அவன் விளக்கம் கூறுவான்" என்றாள்.
13 அவ்வாறே, தானியேல் அரசன் முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டார்; அரசன் அவரைப் பார்த்து, "என் தந்தையாகிய அரசன் யூதேயாவிலிருந்து சிறைபிடித்து வந்த யூதர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே?
14 உன்னிடத்தில் தெய்வங்களின் ஆவியும், வியத்தகு அறிவும் புத்தியும் ஞானமும் உண்டென உன்னைப்பற்றிக் கேள்விப்பட்டேன்.
15 இப்போது, இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை எனக்குச் சொல்வதற்காக ஞானிகளும் நிமித்திகர்களும் என்முன் வந்தார்கள்; ஆனால் அவர்களால் இந்தச் சொற்களின் உட்பொருளை வெளிப்படுத்த முடியவில்லை.
16 மறைபொருளை வெளிப்படுததவும், சிக்கலானவற்றைத் தீர்க்கவும் உன்னால் முடியும் என உன்னைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; ஆகையால் நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், செம்பட்டாடையும் கழுத்தில் பொற்சங்கிலியும் உனக்கு அனிவித்து என் அரசில் மூன்றாம் அதிகாரியாய் உன்னை ஏற்படுத்துவேன்" என்றான்.
17 அப்பொழுது தானியேல் அரசனுக்கு மறுமொழியாகக் கூறினார்; "உம்முடைய பரிசுகள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம் வெகுமதிகளை வேறு யாருக்காவது கொடும். ஆனால், அரசே, இந்தச் சொற்களை உமக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை உமக்கு நான் கூறுவேன்.
18 அரசே, மிக உன்னதரான கடவுள் உம் தந்தையாகிய நபுக்கோதனசாருக்குப் பேரரசையும் மேன்மையையும் சிறப்பையும் மகிமையையும் அளித்தார்.
19 அவருக்கு அளிக்கப்பட்டிருந்த மாட்சிமையின் காரணமாய் எல்லா மக்களும் இனத்தாரும் மொழியினரும் அவருக்கு அஞ்சி நடுங்கினார்கள்; அவர் எவர்களைக் கொல்ல எண்ணினாரோ அவர்களைக் கொன்றுபோடுவார்; எவர்களைத் தண்டிக்க விரும்பினாரோ அவர்களைத் தண்டிப்பார்; எவர்களை உயர்த்த எண்ணினாரோ அவர்களை உயர்த்துவார்; எவர்களைத் தாழ்த்த விரும்பினாரோ அவர்களைத் தாழ்த்துவார்.
20 ஆனால் அவருடைய உள்ளம் இறுமாப்புற்று, அவருடைய மனம் செருக்கினால் கடினப்பட்டது; அப்போது அவர் தமது அரசின் அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்; அவரிடமிருந்து அவருடைய மகிமை எடுக்கப்பட்டது;
21 மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார்; மேலும் அவருடைய இதயம் மிருகங்களின் இதயம் போல் ஆயிற்று; காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்தார்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளுகிறார் என்பதையும், தமக்கு விருப்பமானவரையே அதன் மேல் ஏற்படுத்துவார் என்பதையும் அறிந்துணருமட்டும், உம் தந்தை மாட்டைப் போலப் புல்லை மேய்ந்து, வானத்தின் பனியிலே நனைந்து கிடந்தார்.
22 அவருடைய மகனாகிய பல்தசாரே, இவற்றையெல்லாம் நீர் அறிந்திருந்தும் உம் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.
23 ஆனால் விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவருடைய கோயிலின் பாத்திரங்களைக் கொண்டு வரச் சொல்லி, நீரும் உம் பெருங்குடி மக்களும், உம்முடைய மனைவியரும் வைப்பாட்டிகளும் அவற்றில் திராட்சை இரசம் குடித்தீர்கள்; அது மட்டுமன்று; காணவோ கேட்கவோ உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் இவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள்; ஆனால் தம் கையில் உமது உயிரையும், உம் வழிகளையும் கொண்டிருக்கிற கடவுளை நீர் மகிமைப்படுத்தவில்லை;
24 ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி இந்தச் சொற்களை எழுதுவித்தார்.
25 எழுதப்பட்ட சொற்கள் பின்வருமாறு: மானே, தெக்கெல், பாரெஸ்.
26 இவற்றின் உட்பொருள்: மானே-கடவுள் உமது அரசின் நாட்களை எண்ணி வரையறுத்து முடிவாக்கிவிட்டார்;
27 தெக்கெல்- நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; அப்போது இலேசாயிருந்தீர்;
28 பாரெஸ்- உமது அரசு பிரிக்கப்பட்டு மேத்தியர்க்கும் பேர்சியர்க்கும் கொடுக்கப்பட்டது" என்றார்.
29 அப்பொழுது, அரசனின் கட்டளைப்படி தானியேலுக்குச் செம்பட்டாடை உடுத்தினார்கள்; அவருடைய கழுத்தில் பொற்சங்கலி அணிவித்தார்கள்; மன்னனுடைய அரசில் தானியேல் மூன்றாம் அதிகாரி என்று விளம்பரப் படுத்தினார்கள்.
30 அன்றிரவிலேயே கல்தேய அரசனாகிய பல்தசார் கொலை செய்யப்பட்டான்;
31 மேதியனாகிய தாரியுஸ் என்பவன் தன் அறுபத்திரண்டாம் வயதில் அந்த அரசைத் தனதாக்கிக் கொண்டான்.
×

Alert

×