உங்களுக்காகவும், லவோத்திக்கேயா நகர் மக்களுக்காகவும், என்னை நேரில் பார்த்திராத மற்றனைவருக்காகவும் நான் எவ்வளவு பாடுபடுகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அவர்களின் உள்ளங்கள் ஊக்கமடைந்து, அவர்கள் அன்பினால் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கடவுளுடைய திட்டத்தின் மறைபொருளை அறிந்துணரச் செய்யக் கூடிய அறிவுத் திறனின் வளத்தை நிறைவாகப் பெறவேண்டுமேன்றே நான் இங்ஙனம் பாடுபடுகிறேன். கிறிஸ்துவே அந்த மறைபொருள்.
என் உடல் உங்களை விட்டுப் பிரிந்திருந்தாலும் என் உயிர் உங்களோடுதான் இருக்கின்றது. உங்களிடையே நிலவும் ஒழுங்கு முறைமையையும், கிறிஸ்துவில் உங்களுக்குள்ள உறுதியான விசுவாசத்தையும் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்.
மேலும் மனிதப் பரம்பரையில் வந்த போலி ஞானத்தாலும், பொருளற்ற ஏமாற்றுப் பேச்சாலும் யாரும் கவரப்படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இப்போலி ஞானம் கிறிஸ்துவைச் சார்ந்ததன்று. இவ்வுலகப் பூதங்களையே சார்ந்தது.
கையால் செய்யாத விருத்தசேதனம் ஒன்றை நீங்கள் அவருள் பெற்றிருக்கிறீர்கள். பாவத்திற்குட்பட்ட உடலைக் களைந்துவிடுவதே இவ்விருத்தசேதனம். இதுவே கிறிஸ்துவினின்று உண்டான விருத்தசேதனம்.
ஞானஸ்நானத்தில் அவரோடு புதைக்கப்பட்டிருக்கிறீர்கள். இறந்தோரிடமிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்ட விசுவாசத்தால், அவரோடு நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள்.
நீங்கள் பாவிகளாய் இருந்தாலும், உடலில் செய்யப்படும் விருத்தசேதனம் கூட உங்களுக்கு இல்லாததாலும இறந்தவர்களாயிருந்தீர்கள். உங்களை இறைவன் மீண்டும் அவரோடு உயிர்பெறச் செய்தார். அவர் நம் குற்றங்களையெல்லாம் மன்னித்துவிட்டார்.
தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர் முதலிய தூதருடைய படைக்கலங்களைப் பறித்துக்கொண்டு சிலுவையில் கிடைத்த வெற்றியால், எல்லாரும் அவர்களைக் காண, இழுத்துக்கொண்டு பவனி சென்றார்.
போலித் தாழ்ச்சியையும், வான தூதர்களை வணங்குவதையும் விரும்புகின்ற எவரும் உங்களைக் கண்டனம் செய்ய விடாதீர்கள். இவையெல்லாம் விரும்புவோர் போலிக்காட்சிகளை அடிப்படையாக வைத்து, உலகச் சிந்தனையால் வீண் இறுமாப்புக் கொண்டு தலையாயிருப்பவரோடு உள்ள தொடர்பை விட்டுவிடுகின்றனர்.
கிறிஸ்துவோடு நீங்கள் இறந்து, உலகப் பூதங்களின் பிடியினின்று விடுதலை அடைந்தீர்கள் அல்லவா? அப்படியானால் இன்னமும் இவ்வுலக வாழ்க்கையே வாழ்வதுபோல், அதன் விதிகளுக்கு உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதேன் ?
மனிதர்களே வகுத்துக்கொண்ட வழிபாடு, போலித் தாழ்ச்சி, உடல் ஒறுத்தல் முதலியவற்றைக் கொண்டுள்ளதால் இப்படிப்பினைகள் ஞானம்போல் தோன்றலாம். ஆனால், அவற்றிற்கு மதிப்பேதும் இல்லை. இச்சைகளைத் தீர்க்கத்தான் அவை பயன்படும்.