சமாரியாவின் மலை மேல் வாழ்கின்ற பாஷான் பசுக்களே, இந்த வாக்கைக் கேளுங்கள்; உங்கள் கணவனைப் பார்த்து, 'கொண்டு வா, குடிப்போம்' என்று சொல்லுகிறீர்களே, ஏழைகளை ஒடுக்கி, எளியவர்களை நசுக்குகிற உங்களுக்கு,
இறைவனாகிய ஆண்டவர் தம் பரிசுத்தத்தின் மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: இதோ, உங்களுக்கு நாட்கள் வருகின்றன; அப்போது நீங்கள் கொக்கிகளாலும், உங்களில் எஞ்சியிருப்பவர்கள் தூண்டில்களாலும் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.
பேத்தேலுக்கு வாருங்கள், வந்து கட்டளையை மீறுங்கள்; கலாகாத்துக்கு வந்து பாவத்தின் மேல் பாவம் செய்யுங்கள். நாடோறும் காலையில் உங்கள் பலிகளையும், மூன்று நாளைக்கொரு முறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.
உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு வேலையில்லாமல் செய்தோம்; நீங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கினோம்; இருப்பினும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கும் போதே உங்களுக்கு மழையையும் நிறுத்தி விட்டோம்; ஓர் ஊரில் மழை பெய்யச் செய்து இன்னொரு ஊர் காயச் செய்தோம், ஒரு வயலில் மழைப் பெய்யச் செய்தோம், மழை பெய்யாத வயல் காய்ந்து போயிற்று.
இரண்டு மூன்று ஊர்களின் மக்கள் தண்ணீர் தேடித் தள்ளாடி வேறொரு ஊருக்கு போயும் தாகம் தணியவில்லை; இப்படியெல்லாம் செய்தும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
வெப்பக் காற்றாலும் பயிர் நோவாலும் உங்களை வதைத்தோம், உங்கள் சோலைகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தோம்; அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் வெட்டுக்கிளி தின்றது; இருப்பினும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
எகிப்துக்கு அனுப்பிய கொள்ளை நோய் போன்ற கொள்ளை நோயை உங்கள் மேலும் அனுப்பினோம், உங்கள் இளைஞர்களை வாளால் வெட்டி வீழ்த்தினோம்; உங்கள் குதிரைகளும் கொள்ளைபோயின; உங்கள் பாளையங்களில் செத்தவர்களின் பிண நாற்றம் உங்களுடைய மூக்கினுள் ஏறும்படி செய்தோம்; இருப்பினும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
சோதோம், கொமோராவைக் கடவுள் இடித்தது போல் உங்கள் நடுவிலும் நாம் ஊர்களை இடித்தோம். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளியைப் போல் ஆனீர்கள்; இருப்பினும் நீங்கள் நம்மிடம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.
ஏனெனில், அவரே மலைகளை உருவாக்குகிறவர், காற்றை உண்டாக்குகிறவர், தம்முடைய எண்ணத்தை மனிதனுக்கு வெளியிடுகிறவர்; அவரே காலையிருளைப் படைக்கிறவர், மாநிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுகிறவர்; சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பது அவர் பெயராம்.