அப்படியே, அவர் கல்தேயருடைய நாட்டினின்று வெளியேறி காரானில் தங்கினார். அவர் தந்தை இறந்தபிறகு, நீங்கள் இப்போது இருக்கும் நாட்டில் கடவுள் அவரைக் குடியேற்றினார்.
'ஆனால் அவர்களை அடிமைப்படுத்திய நாட்டினர்மீது தீர்ப்புக் கூறுவேன். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறி, இவ்விடத்தில் என்னை வழிபடுவர்' என்று கடவுள் உரைத்தார்.
விருத்தசேதன உடன்படிக்கையை அவருக்கு அருளினார். அதன் படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்று, எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரு குலத் தந்தையரையும் பெற்றனர்.
"இக்குலத் தந்தையர்கள் சூசைமேல் பொறாமைகொண்டு எகிப்தில் அடிமையாகும் படி அவரை விற்றனர். ஆனால், கடவுள் அவருக்குத் துணைநின்று, இன்னல்கள் அனைத்தினின்றும் அவரை விடுவித்தார்.
ஞானத்தை அவருக்கு அளித்து, எகிப்து நாட்டு மன்னன் பார்வோனின் அன்பைப் பெறச்செய்தார். மன்னன் அவரை எகிப்து நாட்டிற்கும், தன் உடைமை அனைத்திற்கும் அதிகாரியாக்கினான்.
அவர்களுடைய உடலைச் சீக்கேம் ஊருக்குக் கொண்டுவந்து, ஏமோர் என்பவரின் மக்களிடமிருந்து ஆபிரகாம் விலை கொடுத்து அவ்வூரில் வாங்கியிருந்த கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
அப்பொழுது அவர்களில் ஒருவனை எகிப்தியன் கொடுமைப் படுத்துவதை அவர் கண்டு, சகோதரனுக்குத் துணை நின்று, துன்பப்பட்டவனுக்காக அந்த எகிப்தியனைக் கொன்று பழிதீர்த்தார்.
மறுநாள் அவர்களில் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், அவர் எதிர்ப்பட்டு, ' நண்பர்களே, நீங்கள் சகோதரர்கள் தானே! ஏன் ஒருவருக்கொருவர் தீங்கு செய்கிறீர்கள்? ' என்று சமாதானப்படுத்த முயன்றார்.
எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தைக் கண்ணுற்றேன். அவர்களின் அழுகுரலைக் கேட்டேன். அவர்களை மீட்க இறங்கிவந்தேன். இதோ, உன்னை எகிப்துக்கு அனுப்புகிறேன், வா ' என்றார்.
"உன்னைத் தலைவனாகவோ நடுவனாகவோ ஏற்படுத்தியது யார்?' என்று முன்பு மறுத்து விட்டார்களே, அந்த மோயீசனையே, தலைவராகவும் மீட்பராகவும் கடவுள் முட்புதரில் தோன்றிய வானதூதரின் வழியாக அனுப்பினார்.
அவர்களது திருக்கூட்டம் பாலை நிலத்தில் கூடியபோது, சீனாய் மலையில் தம்முடன் பேசிய வான்தூதருக்கும், நம் முன்னோர்க்கும் இடை நின்றவர் இவரே. அங்கே அவர், உயிருள்ள திருமொழிகளை நமக்கு அளிப்பதற்காக, அவற்றைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
' எங்களுக்கு முன்செல்லத் தெய்வங்களைச் செய்து, கொடும். ஏனெனில், எங்களை எகிப்து நாட்டினின்று வெளியேற்றிய அந்த மோயீசனுக்கு என்ன நடந்ததோ, தெரியவில்லை ' என்று ஆரோனிடம் சொன்னார்கள்.
இதனால் கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வான்படையை வணங்கும்படி அவர்களைக் கைவிட்டுவிட்டார். இதைப்பற்றி இறைவாக்கினர்கள் நூலில்: இஸ்ராயேல் குலத்தவரே, பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் நீங்கள் எனக்குப் பலிகளும் காணிக்கைகளும் செலுத்தினீர்களா?
இல்லை, மோளோக்கின் கூடாரத்தையும், ரெப்பா தெய்வத்தின் விண் மீனையும் சுமந்துகொண்டு போனீர்கள் அன்றோ! இச்சிலைகளை நீங்கள் வணங்குவதற்கெனச் செய்துகொண்டீர்கள்; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் கடத்துவேன்' என்று எழுதியுள்ளது.
மோயீசனிடம் பேசிய இறைவன் கட்டளையிட்டபடி பாலை நிலத்தில் நம் முன்னோருக்குச் சாட்சியக் கூடாரம் இருந்தது. தாம் காட்டிய படிவத்திற்கேற்ப அதை மோயீசன் அமைக்க வேண்டுமென்று இறைவன் சொல்லியிருந்தார்.
அந்தக் கூடாரம் அடுத்த தலைமுறையில் வந்த நம் முன்னோர் கைக்கு வந்தது. தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த புறவினத்தாரின் நாட்டை நம் மக்கள் யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தனர். தாவீதின் நாள்வரை அது அங்கேயே இருந்தது.
"திமிர் பிடித்தவர்களே, விருத்தசேதனமில்லாத உள்ளமும் செவியும் படைத்தவர்களே, பரிசுத்த ஆவியை நீங்கள் எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள். முன்னோருக்கேற்ற மக்கள் நீங்கள்.
இறைவாக்கினர்களுள் யாரைத்தான் உங்கள் முன்னோர் துன்புறுத்தவில்லை? அதுமட்டுமன்று, அவர்கள் நீதிமானுடைய வருகையை முன்னறிவித்தவர்களைக் கொலையும் செய்தனர். இப்போது நீங்கள் அந்த நீதிமானையே காட்டிக்கொடுத்து, கொலை செய்தீர்கள்.