கடவுள் முன்னிலையிலும், வாழ்வோர்க்கும் இறந்தோர்க்கும் தீர்ப்பிடப்போகும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் இவரது பிரசன்னத்தை முன்னிட்டும், இவரது அரசாட்சியை முன்னிட்டும் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்வது: தேவ வார்த்தையை அறிவியும்; வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிடினும் வலியுறுத்திப்பேசும்;
ஒருகாலம் வரும், அப்போது மக்கள் நலமிக்க போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் மனம் போன போக்கிலே எண்ணிறந்த போதகர்களைத் திரட்டிக்கொள்வர்.
நீரோ எந்தச் சூழ்நிலையிலும் சமநிலையாயிரும். துன்பத்தை ஏற்றுக்கொள்ளும். நற்செய்தித் தொண்டனுக்குரிய வேலையைச் செய்யும். உம் திருப்பணியைச் செவ்வனே செய்யும்.
இனி எனக்கு இருப்பது ஒன்றே; நல்வாழ்வின் பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராம் ஆண்டவர் அந்த இறுதி நாளிலே எனக்குக் கைம்மாறாக அருள்வார். எனக்கு மட்டுமன்று, அவரது பிரசன்னத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் அனைவருக்கும் அருள்வார்.
நான் முதல் விசாரணையில் என் வழக்கை எடுத்துச் சொன்னபோது, எனக்குத் துணை நிற்க யாரும் முன்வரவில்லை. எல்லாரும் என்னைக் கை விட்டனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக.
ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார், என் வழியாய் நற்செய்தியின் அறிவிப்பு முற்றுப் பெறும்படியும், புறவினத்தார் அனைவரும் அதைக் கேட்டறியும்படியும் என்னை உறுதிப்படுத்தினார். சிங்கத்தின் வாயினின்று நான் விடுவிக்கப்பட்டேன்.