தாவீதும் அவரோடு இருந்த யூதாவின் மனிதர்களும் புறப்பட்டுக் கடவுளின் பேழையைக் கொண்டு வரும்படி சென்றார்கள். அப்பேழை கெருபீம்களின் நடுவே வீற்றிருக்கும் சேனைகளின் ஆண்டவருடைய பெயரால் புனிதமாக்கப்பட்டுள்ளமையால் ஆண்டவர் அதன் மேல் தங்கியிருக்கிறார்.
அவர்கள் அந்தக் கடவுட் பேழையை ஒரு புதுத் தேரின் மேல் ஏற்றி, அதைக் காபாவில் உள்ள அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தார்கள். அபினதாபுடைய புதல்வர்களான ஓசாவும் ஆகியோவும் அப் புதுத்தேரை ஓட்டினார்கள்.
தாவீதும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மரத்தால் செய்யப்பட்ட யாழ், வீணை, சுரமண்டலத்தோடும், மேளதாளம் முதலிய இசைக் கருவிகளோடும் ஆடிப்பாடி வந்து கொண்டிருந்தார்கள்.
பல நாள் சென்ற பின்பு கடவுட் பேழையின் பொருட்டு ஆண்டவர் ஒபேதெதோமையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது போய் ஒபேதெதோமின் வீட்டிலிருந்து கடவுட் பேழையை மகிழ்ச்சியுடன் தாவீதின் நகருக்குக் கொண்டு வந்தார். தாவீதுடன் ஏழு பாடகர்க் குழுக்களும், பலிக்கு ஓர் இளங்கன்றும் இருந்தன.
ஆண்டவரின் பேழை தாவீதின் நகருக்குள் நுழைந்தபோது சவுலின் மகள் மிக்கோல் பலகணி வழியாய் உற்றுப் பார்த்து, தாவீது அரசர் ஆண்டவர் முன்னிலையில் குதித்துக் கூத்தாடுவதைக் கண்டு தனக்குள்ளே அவரைப் பழித்தாள்.
பிறகு அவர்கள் கடவுட் பேழையை உள்ளே கொண்டு வந்து, தாவீது அதற்கெனத் தயாரித்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தார்கள். அப்பொழுது தாவீது ஆண்டவர் திருமுன் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தினார்.
பெரும் திரளாய்க் கூடியிருந்த இஸ்ராயேலின் ஆண், பெண் அனைவருக்கும் ஆளுக்கொரு மாட்டுக்கறித் துண்டும் அப்பமும் எண்ணெயில் பொரித்த மிருதுவான மாவுமாகப் பகிர்ந்துகொடுத்தார். பிறகு மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் ஏகினர்.
அப்பொழுது தாவீது தம் வீட்டாரை ஆசீர்வதிக்கத் திரும்பி வந்த போது, சவுலின் மகள் மிக்கோல் தாவீதை எதிர் கொண்டு வந்து அவரை நோக்கி, "கோமாளி தன் ஆடைகளைக் கழற்றுவதுபோல் இன்று இஸ்ராயேலின் அரசர் தம் ஊழியர்களுடைய பணிப் பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளை உரிந்து போட்டாரே; இது அவருக்கு எவ்வளவு பெருமை!" என்று சொன்னாள்.
அதற்கு தாவீது, "உன் தந்தையையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் விட என்னைத் தேர்ந்துகொண்டு, இஸ்ராயேலில் ஆண்டவரின் மக்களுக்குத் தலைவனாய் இருக்கும்படி எனக்குக் கட்டளையிட்ட ஆண்டவர் திருமுன், நான் ஆடிப்பாடி நடனம் செய்தது முறையே;
நான் அதை விட இன்னும் கடையனும், என் கண்களுக்குத் தாழ்ந்தவனும் ஆவேன்; ஆயினும் நீ சொன்ன பணிப் பெண்களுக்கு முன் நான் மாட்சி பெற்றவனாய் விளங்குவேன்" என்று பதில் சொன்னார்.