யோவாக்கிமின் ஆட்சி காலத்தில் பபிலோன் அரசன் நபுக்கொதொனோசோர் யூதாவின் மேல் போர் தொடுத்தான். (அதில் தோற்று) யோவாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்குப் பணிந்திருந்தான். பின்பு அவனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.
ஆண்டவர் கல்தேயாவினின்றும் சீரியாவினின்றும் மோவாபினின்றும் அம்மோன் மக்களினின்றும் கொள்ளைக்காரர்களை அவன் மீது ஏவி விட்டார். அவர் தம் அடியாரான இறைவாக்கினர்மூலம் உரைத்திருந்த வாக்குப்படி யூதாவை அழிப்பதற்காகவே அவர்களை அங்கே அனுப்பினார்.
மனாசே செய்திருந்த எல்லாப் பாவங்களின் காரணமாக யூதாவைத் தம் திருமுன் நின்றும் தள்ளி விடுவதாக ஆண்டவர் யூதாவுக்கு எதிராய்ச் சொல்லியிருந்த வாக்கின்படியே இது நிகழ்ந்தது.
யோவாக்கிமின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. இவற்றின்பின் யோவாக்கிம் தன் முன்னோரோடு துயில் கொண்டான்.
எகிப்திய அரசன் இதன்பின் தன் நாட்டிலிருந்து வெளிவரவேயில்லை. ஏனெனில், எகிப்திய நதி முதல் யூபிரட்டிசு நதி வரை எகிப்திய அரசன் கைவசம் இருந்த நாட்டையெல்லாம் பபிலோனிய அரசன் பிடித்திருந்தான்.
யோவாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. யெருசலேமில் மூன்று மாதம் அவன் அரசாண்டான். அவன் தாயின் பெயர் நோகெஸ்தா. இவள் யெருசலேமைச் சேர்ந்த எல்நாத்தான் என்பவனுடைய மகள்.
அப்போது யூதாவின் அரசன் யோவாக்கினும் அவன் தாயும் அவன் ஊழியர்களும் பெருமக்களும் அண்ணகர்களும் பபிலோன் அரசனிடம் சரணடைந்தனர். பபிலோனின் அரசனும் அவனை ஏற்றுக்கொண்டான். இது நபுக்கொதொனோசோருடைய ஆட்சியின் எட்டாம் ஆண்டில் நிகழ்ந்தது.
பின்பு அவன் ஆலயத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களையெல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் சொன்ன வாக்கின்படி ஆலயத்தில் இஸ்ராயேலின் அரசன் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன் பாத்திரங்களையும் உடைத்தெறிந்தான்.
மேலும் யெருசலேம் நகர மக்கள் அனைவரையும், நகரப் பெருமக்கள், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்கள், சிற்பக் கலைஞர், கொல்லர் ஆகியோரையும் சிறைப்பிடித்துப் பபிலோன் நகருக்குக் கொண்டு சென்றான். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மட்டும் தங்கள் ஊரில் விடப்பட்டனர்.
இதுவுமன்றி, அவன் யோவாக்கினையும், அவன் தாயையும் மனைவியரையும் அண்ணகர்களையும் பபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றான். நாட்டின் நீதிபதிகளையும் யெருசலேமிலிருந்து பபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டு போனான்.
மேலும், உடல் வலிமையுள்ள ஏழாயிரம் பேரையும், சிற்பக் கலைஞரும் கொல்லருமாகிய ஆயிரம் பேரையும், ஆற்றல் மிக்கவர்களையும், போர் வீரர்களையும் அவன் சிறைப்படுத்திப் பபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
செதேசியாசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் யெருசலேமில் பதினொன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அவன் தாயின் பெயர் அமித்தாள். இவள் லொப்னா என்ற ஊரைச் சேர்ந்த ஏரேமியாசினுடைய மகள்.
யெருசலேமையும் யூதாவையும் தமது திருமுன் நின்று தள்ளிவிடும் அளவிற்கு ஆண்டவர் அவற்றின் மேல் கோபம் கொண்டிருந்தார். செதேசியாசு பபிலோனிய அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.