(விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழித்து, சிலைகளை உடைத்து, அவற்றிற்கென அமைக்கப்படிருந்த சோலைகளையும் அழித்து, மோயீசனால் செய்து வைக்கப்பட்ட பித்தளைப் பாம்பையும் உடைத்தெறிந்தான். ஏனெனில், இஸ்ராயேல் மக்கள் அன்று வரை அதற்குத் தூப வழிபாடு செய்து வந்தனர். அது நோயஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது.
அவன் தன் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் மேல் முழு நம்பிக்கை வைத்தான். ஆதலால் அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் அரசர் அனைவரிலும் அவனைப் போல் ஒருவனும் இல்லை.
ஆதலால் ஆண்டவரும் அவனோடு இருந்தார். அவன் தான் எடுத்துக்கொண்ட காரியங்கள் யாவற்றிலும் ஞானத்துடன் நடந்து கொள்வான். அசீரிய அரசனுக்குப் பணிந்திராமல் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
இஸ்ராயேலின் அரசனும் ஏலாவின் மகனுமாகிய ஓசேயுடைய ஆட்சியின் ஏழாவது ஆண்டில், அதாவது எசேக்கியாசு அரசனுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டில், அசீரிய அரசன் சல்மனாசார் சமாரியாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டு, பிடித்தான்;
அதைப் பிடிக்க மூன்று ஆண்டுகள் ஆயின. அரசன் எசேக்கியாசின் ஆட்சியினது ஆறாம் ஆண்டில், அதாவது இஸ்ராயேல் அரசன் ஓசேயுடைய ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில் இது நடந்தது.
ஏனெனில், இஸ்ராயேலர் தங்கள் ஆண்டவரான கடவுளின் குரலுக்குச் செவிமடுக்காமல், அவரது உடன்படிக்கையை மீறி, ஆண்டவரின் ஊழியன் மோயீசன் இட்ட கட்டளைகள் யாவற்றையும் கடைப்பிடியாது அவற்றைப் புறக்கணித்தனர்.
அப்போது யூதாவின் அரசன் எசேக்கியாசு லாக்கீசிலிருந்த அசீரிய அரசனிடம் தூதுவரை அனுப்பி, "நான் குற்றம் செய்தேன். எனவே என் நாட்டை விட்டுத் திரும்பிச் செல்லும். நீர் என்மீது சுமத்துவதை எல்லாம் நான் செய்யத் தயார்" என்றான். அப்படியே அசீரிய அரசன் யூதாவின் அரசன் எசேக்கியாசை முந்நூறு தாலந்து வெள்ளியும், முப்பது தாலந்து பொன்னும் செலுத்தக் கட்டளையிட்டான்.
ஆயினும் அசீரிய அரசன் லாக்கீசிலிருந்து தர்த்தானையும் ரப்சாரிசையும் ரப்சாசேசையும் பெரும் படையுடன் யெருசலேமுக்கு எசேக்கியாசு அரசனிடம் அனுப்பினான். இவர்கள் புறப்பட்டு யெருசலேமுக்கு வந்து வண்ணாரத்துறை வழியருகிலுள்ள மேல்குளத்து வாய்க்கால் அருகே வந்து நின்றனர்.
ரப்சாசேசு என்பவன் இவர்களைப் பார்த்து, "நீங்கள் எசேக்கியாசுக்குச் சொல்லவேண்டியதாவது: ' அசீரியப் பேரரசன் சொல்வதாவது: நீர் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கையின் பொருள் என்ன?
எகிப்து நாட்டை நம்பியிருக்கின்றீரோ? அது நெரிந்த நாணலேயன்றி வேறன்று. நெரிந்த நாணலின் மேல் ஒருவன் சாய்ந்தால் அது உடைந்து அவனது கையில் குத்தி ஊடுருவி விடுமன்றோ? எகிப்தின் அரசன் பாரவோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே இருப்பான்.
நீர் ஒரு வேளை, "எங்கள் கடவுளான ஆண்டவரின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்" என்று சொல்லலாம். ஆனால், அவருடைய மேடுகளையும், பலிபீடங்களையும் எசேக்கியாசு அழித்து, யூதா மக்களையும் யெருசலேம் மக்களையும் பார்த்து, ' நீங்கள் யெருசலேமிலிருக்கும் இப்பீடத்தின் முன் பணியக்கடவீர்கள் ' எனக் கட்டளையிடவில்லையா?
இப்போது என் தலைவராகிய அசீரிய அரசரை எதிர்த்து வாருங்கள்; நான் உங்களுக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுக்கிறேன்; அவற்றிற்குத் தேவையான குதிரை வீரர்களாவது உம்மிடம் இருக்கின்றனரா?
நீர் என் தலைவரின் ஊழியர்களில் மிகவும் கடையனான ஓர் ஆளுநன் முன் எங்ஙனம் எதிர்த்து நிற்க முடியும்? தேர்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் எகிப்தையா நம்பியிருக்கிறீர்?
ஆண்டவரது திருவுளத்தினால்லவா நான் இந்நாட்டை அழிக்க வந்துள்ளேன்? ஆண்டவர் என்னைப் பார்த்து, "நீ போய் அந்நாட்டை அழித்துப்போடு" என்று கூறினார்' என்பதாம்" என்றான்.
அப்போது எல்கியாசின் மகன் எலியாக்கிமும் சொப்னாவும் யோவாகேயும் ரப்சாசேசை நோக்கி, "உம் ஊழியராகிய எங்களோடு சீரிய மொழியில் பேசும்; அது எங்களுக்குத் தெரியும். யூதா மொழியில் பேசவேண்டாம்; ஏனெனில் நகர் மதிலின் மேல் இருக்கிற மக்கள் இதைக் கேட்டு விடுவார்கள்" என்றனர்.
அதற்கு ரப்சாசேசு, "என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவனோடும் உங்களோடும் இவ்வாறு பேசவா? இல்லை. உங்களோடு தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிற்சுவரில் இருக்கிற மனிதரிடம் பேசவே என்னை அனுப்பினார்" என்றான்.
எசேக்கியாசினுடைய சொல்லுக்கு நீங்கள் காது கொடாதீர்கள். இதோ அசீரிய அரசர் சொல்கிறதாவது: நீங்கள் உங்கள் நன்மையை மனத்திற் கொண்டு என்னிடம் தஞ்சம் அடையுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தம் சொந்தத் திராட்சைக் கொடியின் பழத்தையும், சொந்த அத்திமரத்தின் பழத்தையும் உண்டு, தம் சொந்தக் கிணற்றின் நீரைக் குடிப்பார்கள்.
பின், நான் வந்து உங்கள் நாட்டைப் போல் நிலவளமும், திராட்சை இரசமும், நிறைய உணவும், திராட்சைத் தோட்டங்களும் ஒலிவ மரங்களும் எண்ணெயும் தேனும் மிகுந்த நாடாகிய மற்றொரு நாட்டுக்கு உங்களைக் கொண்டு போவேன். நீங்கள் மடியாமல் வாழ்வீர்கள். 'ஆண்டவர் நம்மைக் காப்பார்' என்று கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கும் எசேக்கியாசுக்குச் செவி கொடாதீர்கள்.
அத்தனை நாடுகளின் தெய்வங்களில் தங்கள் நாட்டை என் கையினின்று மீட்டவர் யார்? அப்படி இருக்கையில் உங்கள் ஆண்டவர் யெருசலேமை என் கையினின்று மீட்பாரோ? என்பதாம்" என்றான்.
பின்பு அரண்மனை மேலதிகாரியும் எல்கியாசின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான சொப்னாவும், அரசனின் பதிவாளனும் அசாபின் மகனுமான யோவாகேயும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அரசன் எசேக்கியாசிடம் திரும்பி வந்து, ரப்சாசேசு கூறியவற்றை அவனுக்குத் தெரிவித்தனர்.