இதனால் ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்தார். அவன் தன் இறுதி நாள் வரை தொழுநோய்ப்பட்டு, தனியே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தான். அரசனின் மகன் யோவாத்தான் அரண்மனையில் அதிகாரியாய் இருந்து நாட்டு மக்களுக்கு நீதி வழங்கினான்.
அசாரியாசு தன் முன்னோரோடு துயில் கொள்ள, அவனைத் தாவீதின் நகரில், அவனுடைய முன்னோருக்கு அருகே அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோவாத்தான் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
இவனும் தன் முன்னோர்கள் செய்தது போல் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து வந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமுடைய பாவ வழிகளை விட்டு அவன் விலகவில்லை.
யூதாவின் அரசன் அசாரியாசின் ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் ஜாபேசின் மகன் செல்லும் அரசன் ஆனான். ஆனால் சமாரியாவில் அவன் ஒரு மாதந்தான் ஆட்சி புரிந்தான்.
அக்காலத்தில் மனோகேம் தாப்சா நகரை அழித்துவிட்டு, தேர்சா முதல் அதன் எல்லைகள் வரையுள்ள குடிகளையும் கொன்றான். அன்றியும் கருவுற்றிருந்த எல்லாப் பெண்களையும் வயிற்றைக் கிழித்துக் கொன்றான்.
ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அன்றியும் தன் வாழ்நாள் முழுதும் இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளைவிட்டு அவன் விலகினானில்லை.
அசீரியாவின் அரசன் பூல் இஸ்ராயேல் நாட்டின்மீது படையெடுத்து வந்தான். அப்போது மனாகேம் பூலின் உதவியால் தன் ஆட்சி நிலைபெறும் பொருட்டு, ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளிக்காசுகள் கொடுத்தான்.
மனோகேம் இப்பணத்தை இஸ்ராயேலிலுள்ள வலியோர், செல்வந்தர் முதலியவர்களிடமிருந்து வசூல் செய்திருந்தான். ஆள் ஒன்றுக்கு ஐம்பது சீக்கல் வெள்ளி வீதம் அசீரியா அரசனுக்குக் கொடுக்கும்படி பணித்தான். எனவே அசீரியா அரசன் நாட்டில் சிறிதும் தாமதியாது திரும்பிவிட்டான்.
ரொமேலியாவின் மகனும், படைத்தலைவனுமான பாசே அவனுக்கு எதிராகச் சதி செய்து தன்னோடு இருந்த ஐம்பது காலாத்தியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோபுரத்திற்கு வந்து, அக்கோப், அரியே ஆகியவர்களின் முன் அரசனைக் கொன்றுவிட்டு அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
இஸ்ராயேல் அரசன் பாசேயுடைய ஆட்சி காலத்தில், அசீரியரின் அரசன் தெகிளாத்-பலசார் இஸ்ராயேல் நாட்டின் மீது படையெடுத்து வந்து அயியோனையும், மவாக்காவிலுள்ள அபேல் என்ற இடத்தையும், ஜானோயே, கேதஸ், அசோர், காலாத், கலிலேயா ஆகிய இடங்களையும், நெப்தலி நாடு முழுவதையும் பிடித்ததுமன்றி, அந்நாட்டுக் குடிகளையும் சிறைப்பிடித்து அசீரியா நாட்டிற்குக் கொண்டு போனான்.
ஏலாவின் மகன் ஒசேயோ ரொமேலியாவின் மகன் பாசேயுக்கு எதிராகச் சதி செய்து, பதுங்கியிருந்து கொண்டு அவனைத் தாக்கிக் கொன்று போட்டான். ஒசியாசின் மகன் யோவாத்தாமின் ஆட்சியின் இருபதாம் ஆண்டில் அவனுக்குப்பின் இவன் அரியணை ஏறினான்.
ஆயினும் (விக்கிரக ஆராதனைக்கென அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை. இன்னும் மக்கள் அம்மேடுகளின் மேல் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். ஆலயத்தின் உயர்ந்த வாயிலைக் கட்டியவன் இவனே.
யோவாத்தாம் தன் முன்னோரோடு துயில் கொள்ள, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் ஆக்காசு அவனுக்குப் பின் அரசன் ஆனான்.