ஆக்காபிற்கு சமாரியாவில் எழுபது புதல்வர்கள் இருந்தனர். ஆதலால் ஏகு சமாரியாவிலுள்ள நகரப் பெரியோர்களுக்கும் மூப்பர்களுக்கும், ஆக்காபின் புதல்வர்களை வளர்த்து வந்தவர்களுக்கும் கடிதம் அனுப்பினான்.
அவன் அதில் எழுதியிருந்ததாவது: "உங்கள் தலைவரின் புதல்வர்களையாவது, தேர்களையாவது, குதிரைகளையாவது, அரண் உள்ள நகர்களையாவது, படைக்கலன்களையாவது கைக்கொண்டிருக்கிற நீங்கள் இக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட உடனே,
உங்கள் தலைவரின் புதல்வரில் நல்லவனும் உங்கள் மனத்திற்குப் பிடித்தவனுமான ஒருவனைத் தேர்ந்து கொண்டு, அவனுடைய தந்தையின் அரியணையில் அவனை ஏற்றி, உங்கள் தலைவரின் வீட்டைக் காப்பாற்ற நீங்கள் போரிடக் கடவீர்களாக" என்பதே.
இதை வாசித்து அவர்கள் மிகவும் பீதியுற்று, "ஏகுவை எதிர்த்து நிற்க இரண்டு அரசர்களாலும் முடியவில்லை. பின் நாம் அவனை எங்ஙனம் எதிர்த்து நிற்கக் கூடும்?" என்றனர்.
பின்பு அரண்மனை மேற்பார்வையாளரும், நகரப் பெரியோர்களும், மூப்பர்களும் ஆக்காபின் புதல்வர்களை வளர்த்து வந்தவர்களும் ஏகுக்கு ஆள் அனுப்பி, "நாங்கள் உம் அடிமைகள். நீர் கட்டளையிடுவதை எல்லாம் நாங்கள் செய்யக் காத்திருக்கின்றோம். எங்களுக்கென ஓர் அரசனை நாங்களே ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம். உமது விருப்பப்படியே செய்யும்" எனத் தெரிவித்தனர்.
ஏகு மறுபடியும், "நீங்கள் என் அடிமைகளாய் இருந்து எனக்குக் கீழ்ப்படிய விரும்பின், உங்கள் தலைவருடைய புதல்வர்களின் தலைகளைக் கொய்து நாளை இதே நேரத்தில் என்னிடம் ஜெஸ்ராயேலுக்குக் கொண்டு வாருங்கள்" எனக் கடிதம் எழுதி அவர்களுக்கு அனுப்பி வைத்தான். அப்பொழுது அரச புதல்வர் எழுபது பேரும் நகரப் பெரியோரோடு வளர்ந்து வந்தனர்.
கடிதம் கிடைத்தவுடனே அவர்கள் அரச புதல்வர்களைப் பிடித்து எழுபது பேரையும் கொன்று, அவர்களின் தலைகளைக் கூடைகளில் வைத்து அரசனிடம் ஜெஸ்ராயேலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
தூதுவன் ஒருவன் ஏகுவிடம் ஓடிவந்து, "அரசபுதல்வர்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்" என அறிவித்தான். அதற்கு அவன், "நாளைப் பொழுது புலரும் வரை அவற்றை நகர வாயிலின் இருபுறத்திலும் இரண்டு குவியலாக வையுங்கள்" எனச் சொன்னான்.
மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவன் வெளியே வந்து மக்கள் அனைவரின் முன்னிலையில் நின்று கொண்டு, "நீங்கள் நீதிமான்கள்; என் தலைவனுக்கு எதிராய்ச் சதி செய்து அவனைக் கொன்றவன் நான் தான் என்றாலும், இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?
ஆக்காபின் சந்ததிக்கு விரோதமாய் ஆண்டவர் சொன்னவற்றில் ஒன்றேனும் நிறைவேறாமல் போனதில்லை என்றும், ஆண்டவர் தம் அடியான் எலியாசின் மூலம் கூறின அனைத்தையும் அவரே நிறைவேற்றினார் என்றும் அறிந்து கொள்ளுங்கள்" என்றான்.
பின்னர் ஜெஸ்ராயேலில் இருந்த ஆக்காப் வீட்டாருள் எஞ்சியிருந்த அனைவரையும் அவைப் பெரியோரையும் அவனுடைய நண்பர்களையும், குருக்களையும் கொன்று குவித்தான். அவனைச் சேர்ந்தவர்களில் ஒருவனைக் கூட உயிரோடு விட்டுவைக்கவில்லை.
அப்போது யூதா அரசன் ஒக்கோசியாசின் சகோதரர் அங்கு இருக்கக் கண்டான். ஏகு அவர்களை நோக்கி, "நீங்கள் யார்?" என அவர்களைக் கேட்டான். அவர்கள், "நாங்கள் ஒக்கோசியாசின் சகோதரர்; அரசரின் புதல்வர்களையும் அரசியின் புதல்வர்களையும் கண்டு அவர்களுக்கு எங்கள் மரியாதையைச் செலுத்த வந்துள்ளோம்" என்று மறுமொழி கூறினர்.
ஏகு, "இவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்றான். அவர்களும் உயிரோடு இவர்களைப் பிடித்துக் குடிசையின் அருகில் இருந்த ஒரு குழியில் வெட்டிக் கொன்றார்கள். அந்த நாற்பத்திரண்டு பேர்களில் ஒருவனையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
ஏகு அவ்விடமிருந்து புறப்பட்டுப் போகும் போது தனக்கு எதிரே வழியில் வந்துகொண்டிருந்த ரேக்காவின் மகன் யோனதாபைக் கண்டு அவனை வாழ்த்தினான். "என் இதயம் உன்மட்டில் பிரமாணிக்கமாய் இருக்கிறது போல் உன் இதயமும் என்மட்டில் இருக்கின்றதா?" என அவனைக் கேட்டான். அதற்கு யோனதாப், "ஆம்" எனப் பதிலுரைத்தான். அதற்கு ஏகு, "அப்படியானால் கைகொடு" என்றான். அவன் கை கொடுக்க, ஏகு அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு,
அங்ஙனம் சொல்லி அவனைத் தன் தேரில் ஏற்றி, சமாரியாவுக்குக் கொண்டு வந்தான். அங்கே ஆண்டவர் எலியாசு மூலம் சொல்லியிருந்தபடி, ஏகு ஆக்காபின் வீட்டாரில் ஒருவனையும் விட்டு வைக்காது எல்லோரையும் கொன்று குவித்தான்.
இப்போது பாவாலின் தீர்க்கதரிசிகள், பணிவிடைக்காரர், குருக்கள் ஆகிய அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்; அவர்களில் ஒருவரும் வரத் தவறக்கூடாது; ஏனெனில், நான் பாவாலுக்கு ஒரு மகத்தான பலி செய்ய வேண்டியிருக்கிறது. வராதவர் கொல்லப்படுவர்" என்றான். பாவாலை வழிபடும் அனைவரையும் அழிக்க எண்ணியே ஏகு இச்சூழ்ச்சி செய்திருந்தான்.
ஏகு இஸ்ராயேல் நாடு எங்கணும் ஆட்களை அனுப்பிப் பாவாலின் அடியார்கள் அனைவரையும் வரவழைத்தான். அவர்கள் எல்லாரும் தவறாது வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒன்றாய்ப் பாவாலின் கோவிலில் நுழைந்தனர். கோயில் முழுவதும் மக்களால் நிறைந்திருந்தது.
ஏகு ஆடையணிகளை வைத்திருப்பவர்களை நோக்கி, "பாவாலின் பக்தர்கள் அனைவர்க்கும் உடைகளைக் கொண்டு வந்து கொடுங்கள்" என்றான். அவர்களும் உடைகளைக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்தனர்.
ஏகும் ரெக்காபின் மகன் யோனதாபும் பாவாலின் ஆலயத்தில் நுழைந்து பாவால் பக்தர்களை நோக்கி, "உங்களோடு ஆண்டவரின் அடியார்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப் பாருங்கள். இங்கே பாவாலின் அடியார்கள் மட்டுமே இருக்க வேண்டும்" என்றனர்.
பிறகு அவர்கள் பலிப் பொருட்களையும், தகனப் பலிகளையும் செலுத்தக் கோவிலுக்குள் நுழைந்தனர். ஆனால் ஏகு ஏற்கெனவே எண்பது சேவகர்களைக் கோயிலுக்கு வெளியே தயாராயிருக்கும்படி சொல்லி, அவர்களை நோக்கி, "நான் உங்கள் கையில் அளிக்கப் போகிற மனிதர்களில் எவனையாவது நீங்கள் தப்பியோடவிட்டால், அவனுயிருக்குப் பதிலாக உங்கள் உயிரை வாங்குவேன்" என்று கட்டளையிட்டிருந்தான்.
தகனப்பலி முடிந்ததும் ஏகு தன் படைவீரர்களையும், படைத்தலைவர்களையும் பார்த்து, "நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பியோட விடாமல் எல்லாரையும் வெட்டிக் கொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான். அதன்படியே படைத்தலைவர்களும் படைவீரரும் உள்ளே நுழைந்து, அங்கு இருந்தோரை வாளுக்கு இரையாக்கி அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்தனர். அன்றியும் நகரிலிருந்து பாவால் கோயிலுக்குப் போய்,
ஆயினும் அவன் இஸ்ராயேலரைப் பாவத்திற்கு ஆளாக்கியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழியினின்று விலகினதுமில்லை; பேத்தலிலும் தானிலும் இருந்த பொற்கன்றுகளைக் கைவிட்டதுமில்லை.
பின்பு ஆண்டவர் ஏகுவைப் பார்த்து, "நேரியதும் எமக்கு உகந்ததுமானவற்றைக் கருத்துடன் செய்து முடித்ததாலும், ஆக்காபின் வீட்டுக்கு எதிராக நாம் கருதினவற்றை எல்லாம் நிறைவேற்றியதாலும் உன் புதல்வர் இஸ்ராயேலின் அரியணையில் நான்காம் தலைமுறைவரை வீற்றிருப்பர்" என்றார்.
அதாவது யோர்தான் நதி முதல் அதற்குக் கிழக்கே இருந்த காலாத், காத், ரூபன், மனாசே முதலிய நாடுகளையும், ஆர்னோன் நதி தீரத்தில் அமைந்திருந்த அரோயர் முதல் காலாத், பாசான் நாடுகளையும் அழித்தான்.