மறுபடியும் எங்களைப்பற்றி நாங்களே நற்சான்று கூறத்தொடங்குகிறோமா? அல்லது நற்சான்றுக் கடிதங்கள் சிலருக்குத் தேவையாய் இருப்பதுபோல் அத்தகைய கடிதங்களை உங்களிடம் காட்டவோ, உங்களிடமிருந்து பெறவோ வேண்டிய தேவை எங்களுக்கு உண்டா?
எங்கள் ஊழியத்தைப் பயன்படுத்தி, கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. எழுதியதோ மையினாலன்று, உயிருள்ள கடவுளின் ஆவியினாலே; கற்பலகையில் அன்று, உங்கள் உள்ளங்களாகிய உயிர்ப் பலகைகளிலேயே எழுதப்பட்டது.
அவரே எங்களுக்குப் புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைத் தந்தார்: அந்த உடன்படிக்கையோ எழுதிய சட்டத்தைச் சார்ந்ததன்று; ஆவியானவரையே சார்ந்தது. ஏனெனில், எழுதிய சட்டம் விளைப்பது சாவு, ஆவியானவர் அளிப்பதோ வாழ்வு.
கற்களில் எழுத்துக்களால் வரையப்பட்ட அச்சட்டத்தோடு பொருந்திய திருப்பணி சாவை விளைப்பதாய் இருந்தும், அத்திருப்பணி இறைமாட்சிமை சூழ அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாய் இருந்த அந்த மாட்சிமை மோயீசன் முகத்தில் எவ்வளவு ஒளி வீசிற்றென்றால், இஸ்ராயேல் மக்கள் அவர் முகத்தை உற்றுப் பார்க்கவும் இயலவில்லை.
ஏனெனில், தண்டனைத் தீர்ப்புக் குட்படுத்தும் திருப்பணி இவ்வளவு மாட்சிமையுள்ளதாய் இருந்ததென்றால், மன்னிப்புத் தரும் திருப்பணி இன்னும் எவ்வளவோ மாட்சிமை நிறைந்ததாய் இருக்கவேண்டும்!
அவர்களின் அறிவுப்புலன் மழுங்கிப் போயிற்று. ஆம், இன்று வரை, அவர்கள் பழைய ஏற்பாட்டைப் படிக்கும்போது, அதே முகத்திரை இன்னும் எடுபடாமலே இருக்கிறது; கிறிஸ்துவில்தான் அது மறைந்தொழியும்.