இதைத்தான் நான் ஏற்கெனவே எழுதினேன். நான் வரும் போது எனக்கு மகிழ்ச்சி தரவேண்டிய உங்களாலே எனக்கு வருத்தம் ஏற்படக்கூடாதென்று அப்படி எழுதினேன். எனது மகிழ்ச்சியை உங்கள் அனைவருடைய மகிழ்ச்சியாகவே கொள்வீர்கள் என்று உங்கள்மேல் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
மிகுந்த வேதனையோடும், உடைந்த உள்ளத்தோடும், கலங்கிய கண்களோடும் இதை எழுதினேன். இப்படி எழுதியது உங்களுக்கு வருத்தம் தருவதற்கன்று. உங்கள்மேல நான் வைத்திருக்கும் பேரன்பை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்கே.
நீங்கள் ஒருவனை மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன்; ஏனெனில், நான் மன்னிக்கவேண்டியது ஏதாவது இருந்தால், அதைக் கிறிஸ்துவின் முன்னிலையில் உங்களுக்காக ஏற்கெனவே மன்னித்துவிட்டேன்.
கிறிஸ்துவுக்குள் வாழும் எங்களை எப்போதும் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்குபெறச் செய்து, தம்மைப்பற்றிய அறிவு, எங்கள் வழியாக நறுமணமென எங்கும் பரவச்செய்யும் கடவுளுக்கு நன்றி.
கடவுளின் சொல்லை விலைகூறித் திரிபவர் பலரைப்போல் நாங்கள் செய்யாமல், கள்ளமற்ற உள்ளத்தோடு கடவுளால் ஏவப்பட்டு, கிறிஸ்துவுக்குள், கடவுளின் முன்னிலையில் பேசுகிறோம்.