சாபாவின் அரசி சாலமோனின் புகழைக் கேள்விப்பட்டு, அவரைப் புதிரான வினாக்களால் சோதிக்கும்படி யெருசலேமுக்கு வந்தாள். நறுமணப் பொருட்கள், பொன், விலையேறப்பெற்ற இரத்தினங்கள் முதலிய திரளான செல்வங்களைச் சுமந்து வந்த ஒட்டகங்களோடு அவள் சாலமோனிடம் வந்து, தன் மனத்திலிருந்த எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துச் சொன்னாள்.
அவர் பந்தியில் பரிமாறப்பட்ட உணவு வகைளையும் அவருடைய அலுவலர்களின் இருக்கைகளையும் ஊழியரின் ஒழுங்கையும், அவர்கள் ஆடைகளையும், பந்தி பரிமாறுவோரையும், அவர்கள் உடுத்தியிருந்த துணி வகைகளையும், ஆண்டவரின் ஆலயத்தில் அவர் செலுத்தி வந்த பலிகளையும் அவள் கண்ட போது பெரிதும் வியப்புற்றாள்.
நான் இங்கு வந்து நேரில் காணுமுன், மக்கள் சொன்னதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அவர்கள் உமது ஞானத்தைப்ற்றிப் பாதி கூடச் சொல்லவில்லை என்று, இப்போது எனது சொந்த அனுபவத்தால் அறிந்து கொண்டேன். நான் கேள்விப்பட்டதை விட நீர் பெரியவராகவே இருக்கின்றீர்! உம் மனைவியர் பேறுபெற்றோர்.
உம்மைத் தமது அரியணையில் ஏற்றித் தம் அரசராக ஏற்படுத்திய உம் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! ஏனெனில் இஸ்ராயேலருக்கு அவர் அன்பு செய்வதாலும், அவர்களை என்றென்றும் காக்க விரும்புவதாலுமே, அவர்களுக்கு நீதி வழங்குவதற்காக உம்மை அரசராக அவர் ஏற்படுத்தியுள்ளார்" என்று இயம்பினாள்.
வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் ஆலயத்திற்கும் அரண்மனைக்கும் படிக்கட்டுகளையும், பாடகர்களுக்குச் சுரமண்டலம், தம்புரு முதலிய இசைக் கருவிகளையும் செய்தார். அதற்கு முன் இத்தகைய மரங்களை யூதேயா நாட்டினர் கண்டதில்லை.
சாபாவின் அரசி விரும்பியவற்றையும் கேட்டவற்றையும் சாலமோன் அவளுக்குத் கொடுத்தார். அவள் அரசருக்குக் கொடுத்ததை விட அதிகமாகவே பெற்றுக் கொண்டு தன் பரிவாரத்துடன் நாடு திரும்பினாள்.
மேலும், பற்பல நாடுகளின் தூதுவர்களும் வணிகர்களும், அரேபியா நாட்டு அரசர்கள் அனைவரும், மாநில ஆளுநர்களும் சாலமோனுக்கு பொன்னும் வெள்ளியும் அளிப்பது வழக்கம்.
முந்நூறு கேடயங்களையும் செய்து அவற்றிற்குப் பொன் முலாம் பூசினார். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் முந்நூறு சீக்கல் பொன் செலவானது. அக்கேடயங்களை அரசர் லீபானில் இருந்த 'வனபவனம்' என்ற அரச மாளிகையில் வைத்தார்.
அவ்வரியணைக்குப் பொன்னால் செய்யப்பட்ட ஆறு படிகளும் ஒரு பாதப்படியும், இரு பக்கத்திலும் கைதாங்கிகளும், ஒவ்வோரு கைதாங்கியின் அருகே இரண்டு சிங்கங்களும் இருந்தன.
அரசருக்கு இருந்த எல்லா உணவுப் பாத்திரங்களும் லீபானில் இருந்த 'வனபவனம்' என்ற அரச மாளிகையின் எல்லாத் தட்டுமுட்டுகளும் பசும்பொன்னால் ஆனவையே. அக்காலத்தில் வெள்ளிக்கு மதிப்பே கிடையாது.
அரசரின் கப்பல்கள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை ஈராமின் ஆட்களுடன் தார்சீசுக்குப் போய் அங்கிருந்து பொன், வெள்ளி, யானைத்தந்தம், மனிதக் குரங்கு, மயில் முதலியவற்றைக் கொண்டு வரும்.
ஆண்டுதோறும் அவர்கள் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப் பொருட்களையும், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்து வந்தனர்.
சாலமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும் தேர்களும் இருந்தன. பன்னிரண்டாயிரம் குதிரை வீரரும் இருந்தனர். அவை தேர்கள் நிற்கும் நகர்களிலும், அரசர் இருந்து வந்த யெருசலேமிலும் இருந்தன.
சாலமோனின் வரலாறு முழுவதும் இறை வாக்கினரான நாத்தானின் நூலிலும், சிலோனித்தரான அகியாவின் நூலிலும், நாபாத்தின் மகன் எரோபோவாமைப் பற்றி இத்தோ என்னும் திருக்காட்சியாளர் எழுதியுள்ள நூலிலும் காணக்கிடக்கிறது.