அதாவது, 'நாம் எகிப்து நாட்டிலிருந்து நம் மக்களை மீட்டுக் கொணர்ந்த நாள்முதல், எமது திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தை எழுப்புமாறு நாம் இஸ்ராயேலின் யாதொரு நகரையும் தேர்ந்து கொள்ளவில்லை. நம் மக்கள் இஸ்ராயேலரை ஆள நாம் வேறு எவரையும் தேர்ந்து கொள்ளவில்லை.
இவ்வாறு தமது வாக்குறுதியை ஆண்டவர் இப்போது நிறைவேற்றியுள்ளார். முன்பே ஆண்டவர் கூறியிருந்தது போல் என் தந்தை தாவீதுக்குப் பின், நான் இஸ்ராயேலின் அரியணையில் அமர்ந்து இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டியுள்ளேன்.
சாலமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான வெண்கலப் பிரசங்க மேடை ஒன்று செய்து அதை ஆலயத்தின் நடுவில் வைத்திருந்தார். அதன்மேல் அவர் நின்று கொண்டிருந்தார். பிறகு இஸ்ராயேல் மக்கள் அனைவர் முன்னிலையிலும் முழந்தாளிட்டுத் தம் கைகளை விண்ணை நோக்கி உயர்த்தி,
மீண்டும் சொல்லத் தொடங்கினதாவது: "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணிலும் மண்ணிலும் உமக்கு இணையான இறைவன் இல்லை. முழு இதயத்தோடும் உம்மைப் பின்பற்றும் உம் அடியார்கள் மேல் நீர் அன்பு கூர்ந்து உமது உடன்படிக்கையைக் காத்து வருகிறீர்.
என் தந்தையும் உம் ஊழியனுமான தாவீதுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நீர் நிறைவேற்றியுள்ளீர். உம் வாயினால் வாக்களித்ததை உம் கையினால் இன்று செய்து விட்டீர்.
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தையும் உம் அடியானுமான தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியருளும். 'நீ நம் முன்னிலையில் நடந்து வந்துள்ளது போல், உன் மக்களும் நமது திருச்சட்டத்தின் வழியைப் பின்பற்றி நடப்பார்களாகில், இஸ்ராயேலின் அரசு உன் சந்ததியை விட்டு என்றும் நீங்காது' என்று நீர் வாக்களித்துள்ளீர் அன்றோ?
கடவுள் உண்மையாகவே மனிதரோடு மண்ணில் வாழ்வது நம்பக்கூடியதா? விண்ணும் விண்ணகங்களும் உம்மைக் கொள்ளாதிருக்க, நான் கட்டியுள்ள இந்த ஆலயம் உம்மை எவ்வாறு கொள்ளக்கூடும்?
உம் ஊழியனான நானும் உம் மக்களாகிய இஸ்ராயேலரும் இவ்விடத்தில் இப்போது செய்யும் விண்ணப்பத்திற்குச் செவிமடுத்தருளும். இதற்காகவே நான் இவ்வாலயத்தை கட்டினேன். இங்கு யார் வந்து மன்றாடினானலும், உமது உறைவிடமான விண்ணகத்திலிருந்து அவன் மேல் கருணை கூர்ந்து அவர்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
விண்ணிலிருக்கிற நீர் அதைக்கேட்டு, உம் அடியாருக்கு நீதி வழங்கும்; தீயவனுடைய நடத்தைக்கேற்ப, அவனுக்குத் தண்டனையும், குற்றமற்றவனின் மாசின்மைக்கேற்ப, அவனுக்கு வெகுமதியும் அளித்தருளும்.
உம் மக்களாகிய இஸ்ராயேலர் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததனால் தங்கள் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்டு, உம் பக்கம் மனம் திரும்பித் தவம் புரிந்து, உமது திருப்பெயரைக் கூவியழைத்து இந்த ஆலயத்திலே உம்மை மன்றாட வந்தால்,
நீர் விண்ணிலிருந்து உம் மக்கள் இஸ்ராயேலரின் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்களின் முன்னோருக்கும் நீர் கொடுத்த நாட்டுக்கு அவர்கள் திரும்பச் செய்யும்.
மக்களின் பாவங்களுக்குத் தண்டனையாக வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும் போது, அவர்கள் உம்மை வேண்ட இவ்வாலயத்துக்கு வந்து உமது திருப் பெயரை ஏற்றுக்கொண்டு தங்கள் பாவ வழிகளை விட்டு மனந்திரும்புவார்களாகில்,
ஆண்டவரே, விண்ணிலிருந்து அதைக் கேட்டு உம் அடியார்களின் பாவங்களையும், உம் மக்கள் இஸ்ராயேலரின் பாவங்களையும் மன்னித்து, அவர்கள் நடக்க வேண்டிய நன்னெறியை அவர்களுக்குக் கற்பித்தருளும்; உம் மக்களுக்குச் சொந்தமாக நீர் கொடுத்த நாட்டில் மழை பெய்யக் கட்டளையிட்டருளும்.
நாட்டில் பஞ்சம், கொள்ளைநோய், வறட்சி, சாவு, வெட்டுக்கிளி, கம்பளிப்பூச்சி முதலியன உண்டாகிற போதும், எதிரிகள் நாட்டைப் பாழாக்கி நகர்களைப் பிடிக்க முற்றுகையிடுகிற போதும், எவ்வித வாதையோ நோயோ வருகிற போதும்,
உமது உறைவிடமான விண்ணிலிருந்து அவனுக்குச் செவிமடுத்து அவனை மன்னித்தருளும். ஒவ்வொருவனுக்கும் அவனவன் நடத்தைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு செய்வீராக. ஏனெனில் நீர் ஒருவரே மனிதரின் உள்ளத்தை அறிகிறவர்!
உம் மக்களான இஸ்ராயேலர் அல்லாத புறவினத்தாருள் ஒருவன் உமது மாண்புமிகு பெயரைக் குறித்தும் உமது பேராற்றல், பரிவிரக்கத்தைக் குறித்தும் தொலை நாட்டிலிருந்து வந்து இந்த ஆலயத்தில் உம்மைத் தொழுது மன்றாடினால்,
உமது நிலையான உறைவிடமான விண்ணிலிருந்து அவன் மன்றாட்டுக்குச் செவிகொடுத்து அவன் கேட்பதையெல்லாம் கொடுத்தருளும். இதனால் உலக மக்கள் அனைவரும் உம் திருப்பெயரை அறிந்து, உம் மக்கள் இஸ்ராயேலரைப் போல் அவர்களும் உமக்கு அஞ்சி நடப்பர். இவ்வாறு நான் கட்டியுள்ள இந்த ஆலயத்தில் உமது திருப்பெயரே கூவி அழைக்கப்படுகிறது என்று அவர்கள் அறியும்படி செய்தருளும்.
உம் மக்கள் நீர் காட்டின வழியிலே நடந்து தங்கள் எதிரிகளோடு போரிடச் செல்லும் போது, நீர் தேர்ந்து கொண்ட இந்நகருக்கும், உமது திருப்பெயருக்கு நான் கட்டியுள்ள இவ்வாலயத்துக்கும் நேராக நின்று அவர்கள் உம்மைத் தொழுது மன்றாடினால்,
பாவம் செய்யாத மனிதனே இல்லை. ஆதலால் ஒருவேளை அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தாலும் அதன்பொருட்டு நீர் அவர்கள் மேல் சினம் கொண்டு அவர்களை எதிரிகளின் கையில் ஒப்புவிக்க எதிரிகள் அவர்களைச் சிறைபிடித்து, அண்மையிலோ சேய்மையிலோ இருக்கிற நாட்டிற்குக் கொண்டு போனால்,
தாங்கள் சிறையிருக்கும் நாட்டில் மனம் திரும்பித் தவம் புரிந்து அங்கேயே உம்மை நோக்கி, 'நாங்கள் பாவம் செய்தோம்; அக்கிரமம் புரிந்தோம்; அநீதியாய் நடந்ததோம்' என்று சொல்லி,
தங்கள் முழு இதயத்தோடும் முழு மனத்தோடும் உம்மை நோக்கி மன்றாடினாலும், நீர் அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த நாட்டின் திசையை நோக்கியாகிலும், நீர் தேர்ந்துகொண்ட இந்நகருக்கும், நான் உமது திருப்பெயருக்குக் கட்டியுள்ள இந்த ஆலயத்திற்கும் நேராகவுமாகிலும் நின்று உம்மைத் தொழுது வேண்டிக்கொண்டாலும்,
கடவுளாகிய ஆண்டவரே, எழுந்தருளும்! உமது உறைவிடத்திற்கு வந்தருளும்! உமது பேராற்றல் விளங்கும் உம் திருப்பேழையும் எழுந்து வரட்டும்! கடவுளான ஆண்டவரே, உம் குருக்கள் மீட்பின் ஆடையை அணிந்து கொள்ளட்டும். உம் புனிதர்கள் நன்மைகள் பெற்று மகிழட்டும்.