சாலமோன் தம் தந்தை தாவீது கடவுளுக்கு நேர்ந்து கொண்டிருந்தவற்றை எல்லாம் கொண்டு வந்தார். பொன், வெள்ளியையும் எல்லாவிதத் தட்டு முட்டுகளையும் ஆலயத்தின் கருவூலங்களிலே வைத்தார்.
பின்பு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சீயோன் என்ற தாவீதின் நகரிலிருந்து கொண்டு வருவதற்காக இஸ்ராயேலின் மூப்பர்களையும், குலத்தலைவர்கள் எல்லாரையும், இஸ்ராயேல் மக்களின் குடும்பத்தலைவர்களையும் யெருசலேமில் கூடிவரக் கட்டளையிட்டார்.
அவ்வாறே குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஆலயத்தின் உள்தூயகத்திற்குக் கொண்டு வந்து அதற்குத் குறிக்கப்பட்ட இடமாகிய கெருபீம்களின் இறக்கைகளுக்குக் கீழே வைத்தனர்.
திருப்பேழையைத் தூக்குவதற்கு உதவும் தண்டுகள் சற்று நீளமாய் இருந்ததால் அவற்றின் முனைகள் திருப்பேழைக்கு வெளியே சிறிது தெரிந்தன. ஆனால் கொஞ்சம் வெளியே இருந்தவர்களுக்கு அவை புலப்படா. திருப்பேழை இன்றுவரை அவ்விடத்திலேயே இருக்கிறது.
இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, ஆண்டவர் ஓரேபிலே அவர்களுக்குத் தமது திருச்சட்டத்தைக் கொடுத்த போது, மோயீசன் அப் பேழையில் வைத்திருந்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அத் திருப்பேழைக்குள் இல்லை.
குருக்கள் திருவிடத்திலிருந்து வெளியே வந்த போது அவர்கள் அத்தனை பேரும் புனிதப் படுத்தப் பட்டிருந்தனர். இறைவழிபாட்டு முறைமைகளும், பிரிவின் முறைகளும் இன்னும் குறிக்கப்படவில்லை.
லேவியர்களும், பாடகர்களும், அதாவது ஆசாப், கேமன், இதித்தூன் என்போரின் குழுவினரும், அவர்களின் புதல்வர்களும் சகோதரர்களும் மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு கைத்தாளங்களையும் தம்புருகளையும் ஒலித்துப் பாட்டுப் பாடி ஆர்ப்பரித்துப் பலிபீடத்தின் கீழ்த் திசையில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களோடு நூற்றிருபது குருக்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் ஒரே குரலாய் எக்காளம் ஊதி, கைத்தாளம் கொட்டி, கிண்ணாரம் முதலிய பலவித இசைக் கருவிகளை இசைத்துப் பாட்டுப்பாடி ஆர்ப்பரித்த ஓசை வெகுதூரம் கேட்டது. அப்பொழுது, "ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். அவர்தம் இரக்கம் என்றென்றும் உள்ளது" என்று பாடகர் ஆண்டவருக்குப் புகழ்பாடினர். அவ்வேளையில் மேகம் ஆண்டவரின் ஆலயத்தை நிரப்பிற்று.