யெருசலேமின் குடிகள் யோராமுக்குப் பதிலாக அவனுடைய இளைய மகன் ஒக்கோசியாசை அரசனாக்கினார்கள். ஏனெனில் அரேபியரோடு பாளையத்திலே நுழைந்த கொள்ளைக் கூட்டத்தினர் மூத்த புதல்வர் அனைவரையும் கொன்று போட்டிருந்தனர். இவ்வாறு யூதாவின் அரசன் யோராமின் மகன் ஒக்கோசியாஸ் அரியணை ஏறினான்.
ஆகையால் அவன் ஆக்காபின் குடும்பத்தாரைப் போல் ஆண்டவர் திருமுன் தீயன புரிந்தான். அவனுடைய தந்தை இறந்த பின் அவனுக்குக் கேடாக அந்தக் குடும்பத்தாரே அவனுக்கு ஆலோசகராயினர்.
அவர்களின் கெடுமதிகளைக் கேட்டு ஒக்கோசியாஸ் இஸ்ராயேலின் அரசன் யோராம் என்ற ஆக்காபின் மகனோடு கலாத் நாட்டு இராமோத்தின் மேல் படையெடுத்துச் சென்று சீரியா அரசன் அசாயேலை எதிர்த்துப் போரிட்டான். அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினர்.
யோராம் அப்போரில் பல காயங்களைப் பட்டுத் துன்புற்றமையால் நலம் பெறுவதற்காக எஸ்ராயேலுக்குச் சென்றான். அப்பொழுது நோய்வாய்ப்பட்டுக் கிடந்த யோராமைப் பார்ப்பதற்காக யூதாவின் அரசன் யோராமின் மகன் ஒக்கோசியாஸ் அங்குச் சென்றான்.
ஒக்கோசியாஸ் யோராமைப் பார்க்க வந்தது கடவுளின் திருவுளத்தினால் அவனுக்குக் கேடாக விளைந்தது. எப்படியெனில் அவன் எஸ்ராயேலுக்கு வந்ததும் யோராமோடு சேர்ந்து கொண்டு நம்சியின் மகன் ஏகுக்கு எதிராய்ப் போரிடப் புறப்பட்டான். ஏகுவோ ஆக்காபின் வீட்டாரைக் கொன்று குவிப்பதற்காகக் கடவுளால் அபிஷுகம் செய்யப்பட்டவன்.
ஏகு ஆக்காபின் குடும்பத்தாரைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது வழியில் ஒக்கோசியாசுக்கு அடிபணிந்து வந்த யூதாவின் தலைவர்களையும், ஒக்கோசியாசின் சகோதரரின் புதல்வர்களையும் கண்டு அவர்களையும் பிடித்துக் கொன்று போட்டான். பின்பு ஒக்கோசியாசைத் தேடினான்.
அவன் சமாரியாவில் ஒளிந்திருப்பதாகக் கேள்வியுற்று அவனைப் பிடித்து வரக் கட்டளையிட்டான். ஒக்கோசியாஸ் தன்னிடம் கொண்டுவரப் பட்டதும் ஏகு அவனைக் கொன்றான். இவன் ஆண்டவரை முழு இதயத்தோடும் பின்பற்றி வந்திருந்த யோசபாத்தின் மகன் என்பதற்காக மக்கள் இவனை அடக்கம் செய்தனர். இதனால் ஒக்கோசியாசின் குடும்பத்தாரில் யாரும் இனி அரியணை ஏற முடியாது போயிற்று.
ஆனால் அரசனின் மகள் யோசாபியாத் கொல்லப்படவிருந்த அரச புதல்வர்களுக்குள் ஒக்கோசியாசின் மகன் யோவாசை மறைவாய்த் தூக்கிக் கொண்டு போய் அவனையும் அவனுடைய செவிலித்தாயையும் படுக்கையறையிலே மறைத்து வைத்தாள். இந்த யோசாபியாத் யோராமின் மகளும் தலைமைக் குரு யோயியாதாவின் மனைவியும் ஒக்கோசியாசின் சகோதரியும் ஆவாள். எனவே, அத்தாலியா அவனைக் கொன்று போடவில்லை.