அப்பொழுது அனானியின் மகன் ஏகு என்ற திருக்காட்சியாளர் அவனுக்கு எதிரே வந்து, "நீரோ தீயவனுக்குத் துணையாய் நின்று ஆண்டவரைப் பகைக்கிறவனோடு நட்புக் கொண்டீர். அதன் பொருட்டு ஆண்டவரின் கோபம் உம்மேல் வரவேண்டியதாயிருந்தது.
ஆயினும் நீர் சில நற்செயல்கள் புரிந்துள்ளீர்: அதாவது, சிலைத்தோப்புகளை யூதா நாட்டிலிருந்து அகற்றி, உம் முன்னோரின் கடவுளைப் பின்பற்றி வந்துள்ளீர்" என்றார்.
யோசபாத் யெருசலேமில் குடிபுகுந்த பிறகு தன் குடிமக்களைக் காணப் புறப்பட்டுப் பெர்சாபே முதல், எப்பிராயீம் மலை நாடு வரை வாழ்ந்து வந்த மக்களிடம் சென்று, அவர்களைத் தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரின் வழிபாட்டுக்குத் திருப்பினான்.
அவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் கடமைகளைக் கவனமாய் நிறைவேற்றுங்கள். நீங்கள் மனிதரின் கட்டளையால் அன்று, ஆண்டவரின் திருப்பெயரை முன்னிட்டே நீதி வழங்க வேண்டும். ஏனெனில் நீதி வழங்க, இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் எந்தத் தீர்ப்பு இடுகிறீர்களோ அந்தத் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.
மேலும், யோசபாத் சில லேவியர்களையும் குருக்களையும் இஸ்ராயேல் குலத்தலைவர்களையும் ஏற்படுத்தி, ஆண்டவருக்கடுத்த காரியங்களிலும், மற்ற வழக்குகளிலும் மக்களுக்கு அவர்கள் நீதி வழங்கக் கட்டளையிட்டான்.
தத்தம் ஊர்களில் குடியிருக்கும் உங்கள் சகோதரர் இரத்தப்பழி, சட்டங்கள், கட்டளைகள், சடங்கு முறைகள் முதலியவற்றிற்கு அடுத்த வழக்குகளை உங்களிடம் கொண்டு வரும் போது, அவர்கள் ஆண்டவருக்கு முன்பாகக் குற்றவாளிகள் ஆகாதபடியும், ஆண்டவரின் சீற்றம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் வராதபடியும் அவர்களுக்குப் புத்தி புகட்டுங்கள். இவ்வாறு செய்தால், நீங்கள் குற்றமற்றவராய் இருப்பீர்கள்.
ஆண்டவருக்கடுத்த எல்லா வழக்குகளிலும் தலைமைக் குரு அமரியாசும், அரசனுக்கடுத்த எல்லாக் காரியங்களிலும் யூதா குலத்தலைவனும் இஸ்ராயேலின் மகனுமான ஜபதியாசும் தலைவர்களாய் இருப்பார்கள். உங்கள் நடுவே இருக்கிற லேவியர்களும் உங்களுக்கு உதவியாய் இருப்பார்கள். நீங்கள் மனத் திடனோடு உங்கள் கடமைகளை ஆற்றுவதில் கவனமாய் இருங்கள். இவ்வாறு செய்வீர்களாகில் ஆண்டவர் உங்களுக்குத் துணையாய் இருப்பார்" என்றான்.