உம் தந்தை மிகப் பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தியுள்ளார். நீர் அப்பளுவான சுமையை இலகுவாக்கி எங்கள் சுமையின் பளுவைக் குறைக்க ஒத்துக் கொண்டால், நாங்கள் உமக்கு அடிபணிவோம்" என்றனர்.
ரொபோவாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருந்த காலத்தில் அவருக்குப் பணி புரிந்து வந்த மூப்பரைக் கலந்துபேசி, நான் இம்மக்களுக்கு மறுமொழி கொடுக்க வேண்டுமே; நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள்?" என்று வினவினான்.
மக்கள் என்னிடம் வந்து: 'உம் தந்தை எம்மேல் வைத்த நுகத்தை நீர் இலகுவாக்க வேண்டும்' என்று விண்ணப்பம் செய்து கொண்டனர். அதற்கு நான் என்ன பதில் கூறவேண்டும்? உங்கள் ஆலோசனை என்ன?" என்று கேட்டான்.
அதற்கு அவனோடு இன்ப சுகமாக வளர்ந்து வந்திருந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, "உம்மைப் பார்த்து, 'உம் தந்தை என் நுகத்தை அதிகப் பளுவாக்கியுள்ளார்; நீர் அதை இலகுவாக்க வேண்டும்' என்று கேட்கும் மக்களுக்கு நீர் கூறவேண்டிய மறுமொழியாவது: 'என் தந்தையின் இருப்பை விட என் சுண்டு விரலே பெரிது.
ஆகையால், என் தந்தை பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார்; நானோ அதை இன்னும் பாரமாக்குவேன். என் தந்தை உங்களைத் மிலாறுகளால் அடித்தார்; நானோ உங்களைத் தேள்களைக் கொண்டு தண்டிப்பேன்' என்று சொல்லுவீராக" என்றனர்.
இளைஞர்களின் ஆலோசனைப்படி அவர்களை நோக்கி, "என் தந்தை உங்கள் மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நானோ அதை அதிகப் பாரமாக்குவேன். என் தந்தை மிலாறுகளால் உங்களை அடித்தார். நானோ உங்களைத் தேள்களைக் கொண்டு தண்டிப்பேன்" என்றான்.
இவ்வாறு அரசன் மக்களின் விண்ணப்பத்திற்குச் செவி கொடுக்கவில்லை. இது கடவுளின் திருவுளப்படியே நடந்தது. அதனால் அவர் சிலோனித்தரான அகியாவின் மூலம் நாபாத்தின் மகன் எரொபோவாமுக்குச் சொல்லியிருந்த தமது வாக்கை நிறைவேற்றினார்.
அரசனின் முரட்டுத்தனமான பதிலைக் கேட்ட மக்கள் ரொபோவாமைப் பார்த்து, "தாவீதோடு எங்களுக்குப் பங்கு இல்லை; இசாயியின் மகனிடம் எங்களுக்கு உரிமைச் சொத்தும் இல்லை. இஸ்ராயேலே, உன் கூடாரங்களுக்குப் போ; தாவீதே, நீயே உன் சொந்தவீட்டுக் காரியங்களைப் பார்த்துக் கொள்" என்று சொல்லி, இஸ்ராயேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றனர்.
பின் அரசன் ரொபோவாம் வரி வசூல் செய்ய அதுராமை அனுப்பி வைத்தான். இஸ்ராயேல் மக்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்று போட்டனர். அதைக் கேள்வியுற்ற ரொபோவாம் விரைவாய்த் தன் தேரின் மேல் ஏறி யெருசலேமுக்கு ஓடிப் போனான்.