சாமுவேல் இறந்தார். அதன் பொருட்டு இஸ்ராயேலர் அனைவரும் ஒன்று கூடித் துக்கம் கொண்டாடினர். பின்னர் ராமாத்தாவிலுள்ள அவரது வீட்டில் அவரை அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டுப் பாரான் பாலைவனத்திற்குச் சென்றான்.
மாவோன் பாலைவனத்தில் ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய காணியாட்சி கார்மேலில் இருந்தது; அம் மனிதன் பெரும் செல்வந்தன்; அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. கார்மேலில் அவன் மந்தைக்கு மயிர் கத்தரிக்க நேரிட்டது.
அம் மனிதனின் பெயர் நாபால். அவன் மனைவியின் பெயர் அபிகாயில், அப்பெண் மிக அழகானவள்; விவேகமுள்ளவள். அவளுடைய கணவனோ கொடியவன், தீயவன், கபடுள்ளவன், காலேப் குலத்தினன்.
எங்களுடன் பாலைவனத்தில் இருந்த உம்முடைய இடையர்கள் ஆடுகளுக்கு மயிர் கத்தரித்து வருகின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். நாங்கள் அவர்களை ஒரு முறையேனும் துன்பப் படுத்தினதுமில்லை; கார்மேலில் அவர்கள் இருந்த காலமெல்லாம் அவர்களுடைய மந்தையில் ஓர் ஆடு கூடக் காணாமற் போனதுமில்லை.
உம் வேலைக்காரரைக் கேளும்; உமக்குச் சொல்வார்கள். ஆதலால் உம் அடியார் எங்களுக்கு உம் கண்களில் தயை கிடைப்பதாக. நல்ல நாளிலன்றோ வந்தோம்? உமது கையில் அகப்படுவதை உம் அடியார்களுக்கும் உம் மகனாகிய தாவீதுக்கும் கொடும்' என்று சொல்வீர்கள்" என்று சொல்லி அனுப்பினான்.
நாபாலோ தாவீதின் ஊழியர்களுக்கு மறுமொழியாக, "தாவீது என்பவன் யார்? இசாயி மகன் யார்? தங்கள் தலைவர்களை விட்டு ஓடிப்போகிற ஊழியர்களில் எண்ணிக்கை இன்று பெருகி வருகிறது.
நான் என் அப்பங்களையும், தண்ணீரையும், மயிர் கத்தரித்தவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியையும் எடுத்து எங்கிருந்தோ வந்துள்ள மனிதர்களுக்குக் கொடுப்பதா?" என்றான்.
அப்போது தாவீது தன் ஆட்களை நோக்கி, "நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான். அப்படியே அவர்கள் தங்கள் வாளை எடுத்துக் கொண்டார்கள். தாவீதும் தன் வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். ஏறக்குறைய நானூறு பேர் தாவீதைப் பின் தொடர்ந்தனர். இருநூறு பேர் சாமான்கள் அருகில் இருந்து கொண்டனர்.
அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலை நோக்கி, "இதோ நம் தலைவனுக்கு வாழ்த்துச் சொல்லத் தாவீது பாலைவனத்திலிருந்து தூதர்களை அனுப்பியிருக்க, அவர்கள் மேல் அவர் கோபித்துக் கொண்டாரே;
அம்மனிதர்களோ எங்களுக்குக் கூடியமட்டும் நல்லவர்களாய் இருந்தார்கள்; எங்களுக்குத் தொந்தரை செய்ததுமில்லை; நாங்கள் பாலைவனத்தில் அவர்களோடு நடமாடின காலமெல்லாம் நம் பொருட்களில் ஒன்றும் காணமற் போனதுமில்லை.
எனவே நீர் யோசித்து என்ன செய்யக் கூடும் என்று பாரும்; ஏனெனில் உம் கணவர் மீதும் உம் வீட்டின் மீதும் பெரும் துன்பம் வரக்கூடும்; அவர் பெலியாலின் மகன்; அவரிடத்தில் பேசக்கூட ஒருவனும் துணிய மாட்டான்" என்றான்.
இதைக் கேட்டு அபிகாயில் விரைந்து இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தித் திராட்சை இரசத்தையும், சமைக்கப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், மாவையும் வற்றல் செய்த நூறு கட்டுத் திராட்சைப் பழங்களையும், வற்றலான இருநூறு கூடை அத்திப் பழங்களையும் எடுத்துக் கழுதைகள் மேல் ஏற்றினாள்.
தன் வேலைக்காரரைப் பார்த்து, "நீங்கள் எனக்கு முன் செல்லுங்கள்; இதோ நான் உங்களுக்குப் பின் வருகிறேன்" என்று சொல்லி அனுப்பினாள். தன் கணவன் நாபாலுக்கு இதைத் தெரியப்படுத்தவில்லை.
தாவீது தன் ஆட்களை நோக்கி, "அந்த மனிதனுக்குப் பாலைவனத்தில் இருந்தவற்றை எல்லாம் வீணில் காப்பாற்றினேன். அவனுக்குச் சொந்தமானவை அனைத்திலும் ஒன்றுமே அழியவில்லை. அவனோ நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்தான்.
அவனுக்குச் சொந்தமானவர்களில் ஓர் ஆண் மகனை முதலாய் பொழுது விடியுமட்டும் நான் உயிரோடு விட்டு வைப்பேனாயாகில், கடவுள் தாவீதின் எதிரிகளுக்கு அதற்குத் தகுந்த பிரதி பலன் அளிப்பார்" என்று சபதம் கூறினான்.
பிறகு அவன் காலில் விழுந்து, "என் தலைவ, இப்பழி என்மேல் இருக்கட்டும். உம் அடியாள் சொல்லப் போகிறதை நீர் காது கொடுத்துக் கேட்டருள வேண்டும் என்று உம்மைக் கெஞ்சுகிறேன்.
என் தலைவராகிய அரசே, நீர் அக்கெட்ட மனிதனாகிய நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம். ஏனெனில் அவருடைய பெயருக்கு ஏற்றபடி அவர் ஓர் அறிவிலி. அவருக்கு அறிவின்மையும் உண்டு. என் தலைவ, உம் அடியாளாகிய நான் நீர் அனுப்பின உம் ஊழியர்களைக் கண்டதில்லை.
இப்போது என் தலைவ, நீர் இரத்தத்தைச் சிந்தாதபடி உம்மைத் தடுத்து அப்பழியினின்று உமது கையைக் காப்பாற்றினவர் ஆண்டவரே. ஆண்டவர் மேலும் உம் மேலும் ஆணை! உம் எதிரிகளும் என் தலைவராகிய உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களும் நாபாலைப் போல் ஆகக்கடவார்கள்!
எனவே, என் தலைவராகிய உமக்கு உம் அடியாள் கொண்டு வந்துள்ள ஆசி மொழியை நீரும் ஏற்றுக்கொள்ளும்; என் தலைவராகிய உம்மைப் பின்தொடர்ந்து வந்துள்ள உம் ஊழியர்களுக்கும் கொடும்.
உம் அடியாளுடைய குற்றத்தை மன்னியும்; என் தலைவ, நீர் ஆண்டவருடைய போர்களைச் செய்கிறபடியால், என் தலைவராகிய உமக்கு என் ஆண்டவர் பிரமாணிக்கமான வீட்டைக் கட்டாயம் கட்டுவார். உமது வாழ்நாள் முழுவதும் ஒரு தீங்கும் உம்மை அணுகாதிருப்பதாக.
உம்மைத் துன்பப்படுத்தவும், உமது உயிரை வாங்க வகை தேடவும் யாரேனும் எப்போதாவது துணிந்தால், என் தலைவரின் உயிர், வாழ்வோரின் கட்டுகளில் கட்டியிருப்பது போல, உம் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் காப்பாற்றப்படும். உம் எதிரிகளின் உயிர்களோ கவணில் சுழற்றப்படுவது போல் சுழற்றப்படுவனவாக!
அப்பொழுது மாசற்ற இரத்தத்தைச் சிந்திப் பழி வாங்கினதைக் குறித்து என் தலைவராகிய உமக்குத் துக்கம் இராது; மனவருத்தமும் உண்டாகாது. ஆண்டவர் என் தலைவராகிய உமக்கு நன்மை செய்யும் போது உம் அடியாளை நினைத்துக் கொள்ளும்" என்றாள்.
நான் உனக்குத் தீங்கு இழைக்காதபடி என்னைத் தடுத்த இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழி! நீ விரைந்து என் எதிரில் வந்திராவிட்டாள், பொழுது விடியுமுன் நாபாலுடைய வீட்டாரில் ஓர் ஆண்பிள்ளை முதலாய் உயிரோடு இருந்திரான்" என்றான்.
அவள் தனக்குக் கொண்டு வந்தவற்றை எல்லாம் தாவீது அவள் கையினின்று பெற்றுக் கொண்டு, "நீ சமாதானமாய் வீட்டிற்குப் போ. இதோ நான் உனக்குச் செவிமடுத்து, உனது வேண்டுகோளுக்கு இசைந்துள்ளேன் என இதன் மூலம் அறிந்து கொள்" என்று சொல்லி, அவளை அனுப்பி வைத்தான்.
அபிகாயில் நாபாலிடம் வந்தபோது, இதோ அரச விருந்து போன்று ஒரு பெரிய விருந்து அவன் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. நாபாலுடைய உள்ளம் களித்திருந்தது. அவன் மிகவும் குடிவெறியில் இருந்தான். ஆகையால் பொழுது விடியும் வரை அவள் அதைப் பற்றி ஒன்றும் அவனிடம் கூறவில்லை.
அதிகாலையில் நாபால் உட்கொண்ட திராட்சை இரசம் செரித்த பின், அவனுடைய மனைவி இவ்வார்த்தைகளை எல்லாம் அவனுக்குத் தெரிவித்தாள். அப்பொழுது அவனது உயிர் பிரிந்தது; அவனும் கல்லாய் சமைந்தான்.
நாபால் இறந்ததைத் தாவீது கேள்விப்பட்ட போது, "நாபால் கையினால் எனக்கு வந்த பழி கேட்டிற்குத் தக்க நீதி வழங்கித் தம் அடியானைத் தீமையினின்று காப்பாற்றின கடவுள் புகழப்படுவாராக! நாபாலின் தீய குணத்தை ஆண்டவர் அவன் தலையின் மேல் வரச் செய்தார்" என்றான். பிறகு தாவீது அபிகாயிலைத் தன் மனைவியாக்கிக் கொள்ளும் படி அவளிடம் தூது அனுப்பினான்.
தாவீதின் ஊழியர்கள் கார்மேலில் இருந்த அபிகாயிலிடம் வந்து, அவளிடம் பேசி, "தாவீது உம்மைத் தம் மனைவி ஆக்கிக் கொள்வதற்காக எங்களை உம்மிடம் அனுப்பியுள்ளார்" என்று சொன்னார்கள்.
அபிகாயில் விரைந்து கழுதை மேல் ஏறினாள். அவளுடைய தோழியர் ஐவர் அவளுடன் போனார்கள். அவள் தாவீதினுடைய ஊழியர்களைப் பின் தொடர்ந்து சென்று அவனுக்கு மனைவியானாள்.