சவுல் இஸ்ராயேலரில் மூவாயிரம் பேரைத் தமக்குத் தேர்ந்து கொண்டார். ஈராயிரம் பேர் சவுலுடன் மக்மாசிலும் பேத்தல் மலையிலும், ஆயிரம் பேர் யோனத்தாசோடு பெஞ்சமின் நாடாகிய காபாவிலும் இருந்தார்கள். மற்ற மக்களை அவரவர் கூடாரத்திற்கு அனுப்பி விட்டார்.
யோனத்தாசு காபாவிலிருந்த பிலிஸ்தியர் பாளையத்தை முறியடித்தான். இதைப் பிலிஸ்தியர் கேள்விப்பட்ட போது, சவுல், "இதை எபிரேயரும் கேட்கக்கடவர்" என்று நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்தார்.
பிலிஸ்தியரின் பாளையத்தைச் சவுல் முறியடித்தார் என்ற செய்தியை இஸ்ராயேலர் அனைவரும் கேள்விப்பட்டனர். இஸ்ராயேலர் பிலிஸ்தியருக்கு எதிராய்க் கிளம்பினார்கள். மக்கள் கல்கலாவிலிருந்த சவுலுக்குப்பின் ஆர்ப்பரித்துச் சென்றார்கள்.
பிலிஸ்தியரில் முப்பதாயிரம் தேர்ப்படையினரும் ஆறாயிரம் குதிரைப் படையினரும் கடற்கரை மணல் போன்ற எண்ணற்ற மற்ற மக்களும் இஸ்ராயேல் மேல் போரிடக் கூடினார்கள். அவர்கள் புறப்பட்டுப் பெத்தாவனுக்குக் கிழக்கே மக்மாசில் பாளையம் இறங்கினர்.
எபிரேயரில் பலர் யோர்தான் நதியைக் கடந்து காத், காலாத் நாடுகளுக்கு வந்து நேர்ந்தனர். இதுவரை சவுல் கல்கலாவில் இருந்தார்; அவரைப் பின்சென்ற மக்கள் அனைவரும் நடுக்கமுற்று இருந்தனர்.
நீர் என்ன செய்தீர் என்று சாமுவேல் அவரைக் கேட்டார். சவுல் மறுமொழியாக, "மக்கள் என்னை விட்டுச் சிதறிப்போகிறதையும், நீர் குறித்த நாளில் வராததையும், பிலிஸ்தியர் மக்மாசில் ஒன்று திரண்டிருப்பதையும் நான் கண்டேன்.
எனவே, 'பிலிஸ்தியர் இந்நேரம் கல்கலாவில் இறங்கியிருப்பர். நானோ ஆண்டவருடைய இரக்கத்தை இன்னும் பெறவில்லை' என்று எனக்குள் சொல்லிக் கொண்டு, தேவையை முன்னிட்டு தகனப் பலியை ஒப்புக்கொடுத்தேன்' என்றார்.
சாமுவேல் சவுலைப்பார்த்து, "மூடத்தனம் செய்தீர்; உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு இட்ட கட்டளையை நீர் காப்பாற்றவில்லை; இவ்விதம் செய்யாமல் இருந்திருப்பீரானால் ஆண்டவர் இஸ்ராயேல் மேல் உமது அரசை என்றென்றும் உறுதிப்படுத்தி இருந்திருப்பார்.
இனி உமது அரசு நிலைத்து நிற்காது. ஆண்டவர் கட்டளையை நீர் மீறினதால் அவர் தமக்குப் பிடித்த மனிதனைத் தேர்ந்து கொண்டு, அவனைத் தம் மக்களுக்குத் தலைவனாய் இருக்கக் கட்டளையிட்டுள்ளார்" என்றார்.
சாமுவேல் கல்கலாவிலிருந்து புறப்பட்டுப் பெஞ்சமின் நாடாகிய காபாவுக்கு வந்தார். எஞ்சியோர் தங்களுடன் போர்புரிய வந்திருந்த மக்களுக்கு எதிராகச் சவுலைப்பின் தொடர்ந்து, கல்கலாவிலிருந்து பெஞ்சமின் குன்றிலுள்ள காபாவுக்குப் போனார்கள். சவுல் மக்களை எண்ணிப் பார்த்தார். ஏறக்குறைய அறுநூறு பேர் இருந்தனர்.
சவுலும் அவர் மகன் யோனத்தாசும் அவர்களைச் சார்ந்திருந்த மக்களும் பெஞ்சமின் நாடாகிய காபாவில் இருந்தனர். அப்போது பிலிஸ்தியர் மக்மாசில் பாளையம் இறங்கியிருந்தனர்.