இனி அரசரே உங்களை வழிநடத்துவார். நானோ நரைத்த கிழவனாகி விட்டேன். என் மக்களும் உங்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, என் இளமை முதல் இன்று வரை உங்களுடன் வாழ்ந்து வந்த நான் இதோ உங்கள் முன் நிற்கிறேன்.
நான் எவனுடைய மாட்டையாவது கழுதையையாவது கவர்ந்து கொண்டதுண்டா? எவனுக்காவது இடுக்கண் விளைவித்ததுண்டா? எவனைப்பற்றியாவது அவதூறு சொன்னதுண்டா? எவன் கையிலாவது பரிசில் பெற்றதுண்டா என்பதைக் குறித்து நீங்கள் ஆண்டவருக்கு முன்பாகவும், அவரால் அபிஷுகம் செய்யப்பட்டவருக்கு முன்பாகவும் என்னைப்பற்றிச் சொல்லுங்கள். அப்படி எதுவும் உண்டானால் அதை நான் வெறுத்து இன்றே உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்" என்றார்.
அதற்கு அவர்கள், "நீர் எங்கள்மேல் பொய்க்குற்றம் சாட்டியதுமில்லை; எங்களுக்கு இடுக்கண் விளைவித்ததுமில்லை; எவர் கையிலும் எதுவும் வாங்கினதுமில்லை" என்று சொன்னார்கள்.
மீண்டும் அவர், "என் கையில் நீங்கள் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு இன்று ஆண்டவரும் சாட்சி; அவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரும் சாட்சி" என்றார். அதற்கு அவர்கள், "அவரே சாட்சி" என்று சொன்னார்கள்.
யாக்கோபு எகிப்தில் நுழைந்தார். உங்கள் முன்னோர் துன்புறுத்தப்படுகையில் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். ஆண்டவர் ஆரோனையும் மோயீசனையும் அனுப்பி உங்கள் முன்னோர்களை எகிப்து நாட்டினின்று மீட்டு இவ்விடத்தில் அவர்கள் குடியிருக்கச் செய்தார்.
அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்ததினால், அவர் ஆசோரின் படைத்தலைவனாகிய சிசராவின் கையிலும் பிலிஸ்தியர் கையிலும் மோவாபிய அரசன் கையிலும் அவர்களை ஒப்படைத்தார். இவர்களோடு அவர்கள் போர் புரிந்தனர்.
பின்பு அவர்கள் ஆண்டவரை நோக்கி, 'நாங்கள் ஆண்டவரை விட்டுப் பாவாலையும் அஸ்தரோத்தையும் வழிபட்டதினால் பாவிகளானோம்; இப்போது எங்களை எதிரிகளின் கையினின்று மீட்டு விடும்; உமக்குத் தொழுகை செய்வோம்' என்று குரல் எழுப்பினார்கள்.
அப்பொழுது ஆண்டவர் ஜெரோபாவாலையும் பாதானையும் ஜெப்தேயையும் சாமுவேலையும் அனுப்பிச் சுற்றிலுமிருந்த உங்கள் எதிரிகளின் கையினின்று உங்களை விடுவித்தார்; நீங்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தீர்கள்.
பிறகு அம்மோன் புதல்வர்களின் அரசனாகிய நாவாஸ் உங்களை எதிர்த்து வருவதைக் கண்ட போது உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களை ஆண்டு வந்தாலும், நீங்கள் என்னை நோக்கி: 'அப்படியன்று; ஓர் அரசன் எங்களை ஆள வேண்டும்' என்று சொன்னீர்கள்.
நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி அவருக்கு ஊழியம் செய்தும், அவருடைய குரலைக் கேட்டு அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யாமலும் இருப்பீர்களாகில், நீங்களும் உங்களை ஆள்கிற அரசரும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்பீர்கள்.
இன்று கோதுமை அறுவடை நாள் அன்றோ? நான் ஆண்டவரை மன்றாடுவேன்; அவர் இடி முழக்கங்களையும் மழைகளையும் அனுப்புவார். நீங்கள் உங்களுக்கு ஓர் அரசரைக் கேட்டதினால், ஆண்டவர் திருமுன் பெரிய தீமையை நீங்கள் செய்துகொண்டீர்கள் என்று இதனால் கண்டறிவீர்கள்" என்றார்.
மக்கள் அனைவரும் ஆண்டவருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் அனைவரும் சாமுவேலைப்பார்த்து, "எங்கள் எல்லாப் பாவங்களுடன் எங்களுக்கு அரசன் வேண்டும் என்று கேட்டதினால் செய்த தீமையையும் சேர்த்துக்கொண்டோமே; இதனால் நாங்கள் சாகாதபடி உம் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் உம் அடியார்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று வேண்டினார்கள்.
சாமுவேல் அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள், இந்தத் தீமை எல்லாம் நீங்கள் செய்தீர்கள்; ஆயினும் ஆண்டவரை விட்டு அகலாது உங்கள் முழு இதயத்தோடு ஆண்டவருக்கு ஊழியம் செய்யுங்கள்.
உங்களுக்காக மன்றாடுவதை விட்டுவிடுவதால் நான் கட்டிக்கொள்ளும் பாவம் ஆண்டவர் முன் எனக்கு இல்லாது போவதாக! நான் நல்ல நேரியவழியை எப்பொழுதும் உங்களுக்குப் போதிப்பேன்.
ஆகையால் நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி உங்கள் முழு இதயத்தோடும் உண்மையாகவே அவரை வழிபட்டு வாருங்கள். அவர் உங்களுக்குச் செய்த அரும் பெரும் செயல்களைப் பார்த்தீர்கள்.