புறணிப் பேச்செல்லாம் விலக்குங்கள். புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் போல் கலப்பற்ற ஞானப் பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் வளர்ச்சி பெற்று மீட்படைவீர்கள்.
நீங்களும் உயிருள்ள கற்களென, ஞான இல்லமாக அமைக்கப்படுவீர்களாக. அதில் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவனுக்குகந்த ஞானப்பலி நிறைவேற்றும் குருத்துவத் திருக்கூட்டமாக அமைவீர்கள். ஏனெனில்,
' இதோ, நான் கல்லொன்றைத் தேர்ந்தெடுத்து, விலைமதிப்பற்ற மூலைக்கல்லாக அதைச் சீயோனில் நாட்டுகிறேன், அதன் மேல் விசுவாசம் வைப்பவன் ஏமாற்றம் அடையான் ' என்று மறை நூலில் காணக் கிடக்கிறது.
தடுக்கி விழச் செய்யும் கல் அது, இடறலான பாறை அது " என்னும் வாக்குகள் பொருந்தும். தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால் தான் அவர்கள் தடுக்கி விழுகின்றனர்; அதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருந்தனர்.
நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரசு குருத்துவத் திருக்கூட்டம், பரிசுத்த குலம், இறைவனுக்குச் சொந்தமான மக்கள்; உங்களை இருளினின்று தம் வியத்தகு ஒளிக்கு அழைத்த இறைவனின் புகழ்ச்சிகளை அறிவிப்பது உங்கள் பணி.
அன்பிற்குரியவர்களே, நீங்கள் அந்நியரும், வெளி நாட்டினருமாய் இருப்பதால், ஆன்மாவிற்கு எதிராகப் போர் புரியும் ஊனியல்புக்குரிய இச்சைகளினின்று விலகுமாறு உங்களை வேண்டுகிறேன்.
புற மனத்தினர் உங்களைத் தீயவரென்று இப்போது தூற்றினாலும், உங்கள் நற்செய்கைகளைப் பார்த்து, கடவுள் வரும் நாளில், அவர்கள் அவரை மகிமைப் படுத்துமாறு, அவர்களிடையே நீங்கள் நன்னடத்தையில் சிறந்து விளங்குங்கள்.
குற்றம் செய்தபின், அதற்காக அடிபட்டால், அதைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்வதில், என்ன பெருமை? மாறாக, நன்மை செய்தும், அதற்காகத் துன்புற்றால், அதைப் பொறுமையாக ஏற்றுக் கொள்வதே கடவுளுக்கு உகந்தது.
இவ்வாறு வாழவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்ற போது, தம்முடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றுமாறு முன்மாதிரி தந்து சென்றார்.
நாம் பாவங்களை அப்புறப்படுத்தி இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழ, கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்.