நாம் தூசியிலிருந்து உன்னைக் கை தூக்கி, நம் மக்கள் இஸ்ராயேல்மேல் உன்னைத் தலைவனாக ஏற்படுத்தினோம்; நீயோ எரோபோவாமின் வழிநடந்து நம் மக்களாகிய இஸ்ராயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி, அவர்களுடைய பாவங்களால் நமக்குக் கோபம் வருவித்தாய்.
பாசா தன் செயல்களால் ஆண்டவருக்குக் கோபமுண்டாக்கி, அவர் திருமுன் செய்த எல்லாப் பாவங்களின் பொருட்டு ஆண்டவர் எரோபோவாம் வீட்டாரைப் பாழாக்கினது போல் இவன் வீட்டாரையும் பாழாக்கிப் போடுவார் என்று, அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினர் பாசாவுக்கும் அவன் வீட்டாருக்கும் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்திருந்தார். எனவே, அரசன் சினம் கொண்டு அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினரைக் கொலை செய்தான்.
அவனது பாதிக் குதிரைப் படைக்குத் தலைவனாய் இருந்த சாம்பிரி என்ற அவனுடைய ஊழியன் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். தேர்சாவின் ஆளுநனான அர்சாவின் வீட்டில் ஏலா குடி போதையில் இருந்தான்.
பாசாவும் அவன் மகன் ஏலாவும் தங்கள் வீண் பகட்டால் தாங்களும் பாவிகளாகி, இஸ்ராயேலையுல் பாவத்தில் ஆழ்த்தி இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வரச் செய்தனர். அதன் காரணமாகவே இது நிகழ்ந்தது.
யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய இருபத்தேழாம் ஆண்டில் சாம்பிரி தேர்சாவில் இருந்துகொண்டு ஏழுநாள் அரசாண்டான். அப்போது பிலிஸ்தியருக்குச் சொந்தமாய் இருந்த கெப்பெத்தோன் என்ற நகரை இஸ்ராயேலரின் படை வளைத்து முற்றுகையிட்டது.
அப்போது, 'சாம்பிரி கலகம் செய்து அரசனைக் கொன்று விட்டான்' என்று கேள்விப்பட்டவுடன் இஸ்ராயேலர் எல்லாரும் கூடி, அன்று பாளையத்தில் இருந்த இஸ்ராயேலின் படைத்தலைவனாகிய அம்ரியை அரசனாக்கினார்கள்.
ஆயினும் கினேத்தின் மகன் தெப்னியைப் பின்பற்றினவர்களை விட அம்ரியைப் பின்பற்றினவர்களே அதிக வலிமையுற்றனர். தெப்னி இறந்தான்; அம்ரியோ இன்னும் ஆட்சி செலுத்தி வந்தான்.
யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறின முப்பத்தோராம் ஆண்டில் அம்ரி அரசைக் கைப்பற்றி, இஸ்ராயேலில் பன்னிரு ஆண்டுகளும், தேர்சாவில் ஆறு ஆண்டுகளும் ஆட்சி புரிந்தான்.
அப்பொழுது அவன் சோமேர் என்பவனிடமிருந்து சமாரியர் மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி அம்மலையில்மேல் ஒரு நகரைக் கட்டி, மலையின் உரிமையாளன் சோமேரின் பெயரின்படியே அதற்குச் சமாரியா என்று பெயர் இட்டான்.
இவன் நாபாத்தின் மகன் எரோபோவாமின் எல்லா வழிகளிலும், இஸ்ராயேலைப் பாவத்துக்கு உள்ளாக்கிய அவனுடைய பாவ வழிகளிலும் நடந்து வந்தான். இவ்வாறு தன் வீண் பகட்டால் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வருவித்தான்.
யூதாவின் அரசன் ஆசா ஆட்சியைக் கைப்பற்றின முப்பத்தெட்டாம் ஆண்டில் அம்ரியின் மகன் ஆக்காப் இஸ்ராயேலின் அரசனாகிச் சமாரியாவில் இஸ்ராயேலின் மேல் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளில் நடந்ததுமின்றி, சீதோனியரின் அரசன் எத்பாலின் மகள் ஜெசாபேலை மணந்து கொண்டான். பின்னர் பாவாலுக்கு ஊழியம் செய்து அதை வழிபட்டான்.
ஒரு தோப்பையும் அமைத்திருந்தான். இப்படி ஆக்காப் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் உண்டாகும்படி, தனக்கு முன் இருந்த இஸ்ராயேலின் அரசர்கள் எல்லாரையும் விடப் பாவத்திற்கு மேல் பாவம் செய்து வந்தான்.
அவனது ஆட்சிக் காலத்தில் பேத்தல் ஊரானாகிய ஈயேல் எரிக்கோவைக் கட்டினான். நூனின் மகன் யோசுவா மூலம்ஆண்டவர் அறிவித்திருந்தபடியே, அவன் அதற்கு அடிக்கல் நாட்டும் போது அபிராம் என்ற அவன் தலை மகனும், அதன் வாயில்களை அமைத்தபோது சேகுப் என்ற அவன் இளைய மகனும் இறந்தனர்.