அபியாம் தன் தந்தை தனக்கு முன் செய்திருந்த எல்லாப் பாவங்களிலும் வீழ்ந்தான். அவனது இதயம் தன் தந்தையாகிய தாவீதின் இதயத்தைப்போல் தன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிறைவுள்ளதாய் இருக்கவில்லை.
ஆயினும், தாவீதின் பொருட்டு அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் யெருசலேமில் அவனுக்கு ஒரு விளக்கை அளித்தார்; இவ்வாறு யெருசலேமை நிலைநாட்ட அவனுக்குப் பிறகு ஒரு மகன் உதிக்கச் செய்தார்.
தாவீது ஏத்தையனான உரியாசின் மட்டில் நடந்து கொண்டதைத் தவிர, தம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் கட்டளைகளினின்று வழுவாது அவர் திருமுன் நேர்மையாக நடந்து வந்திருந்தார்.
அன்றியும் ஆசாவின் தாய் மாக்கா, பிரியாப் என்ற சிலைக்கு ஒரு தோப்பை நேர்ந்துவிட்டு, அங்கே அதற்குச் செலுத்தப்பட்ட பலிகளை நடத்தி வந்தாள். அது நடவாதவாறு ஆசா அவளை நீக்கிவிட்டு கோயிலை இடித்து அதனுள் இருந்த அந்த அருவருப்பான சிலையைத் தவிடுபொடியாக்கிக் கெதிரோன் நதிக்கரையில் அதைச் சுட்டெரித்தான்.
அப்பொழுது ஆசா ஆலயத்தின் கருவூலங்களிலும், அரண்மனையின் கருவூலங்களிலும் எஞ்சியிருந்த பொன் வெள்ளி முழுவதையும் எடுத்து அவற்றைத் தன் ஊழியர் கையில் கொடுத்து அவர்களைத் தமாஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகன் தப்ரேமோனுக்குப் பிறந்த பெனாதாத் என்ற சீரியாவின் மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.
எனக்கும் உமக்கும், என் தந்தைக்கும் உம் தந்தைக்கும் உடன்படிக்கை இருந்ததே. அதை முன்னிட்டுப் பொன், வெள்ளி முதலியவற்றை உமக்கு அனுப்புகிறேன். மேலும், இஸ்ராயேலின் அரசன் பாசா என் எல்லையை விட்டு விலகிப் போகும்படி நீர் தயவு செய்து வந்து அவனோடு நீர் செய்துகொண்ட உடன்படிக்கையை முறித்து விடும் என்று சொல்லச் சொன்னான்.
பெனாதாத் அரசன் ஆசாவுக்கு இணங்கித் தன் படைத்தலைவர்களை இஸ்ராயேலின் நகர்கள்மேல் படையெடுக்குமாறு அனுப்பினான். அவர்கள் ஐயோனையும் தானையும், மாக்கா என்ற அபேல்தோமையும், கென்னரோத் முழுவதையும், அதாவது நெப்தலி நாடு முழுவதையும் தாக்கி முறியடித்தார்கள்.
அப்பொழுது அரசன் ஆசா யூதாவெங்கும் ஆள் அனுப்பி, எல்லாரும் போய் ராமாவைக் கட்டி எழுப்பப் பாசா பயன்படுத்தி வந்த கற்களையும் மரங்களையும் எடுத்துவரச் சொன்னான். பிறகு அவற்றைக் கொண்டு அரசன் ஆசா பெஞ்சமின் நாட்டில் காபாவையும் மாஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.
ஆசாவின் மற்ற எல்லாச் செயல்களும், அவனுடைய எல்லாச் சாதனைகளும் அவன் செய்தவை யாவும், அவன் கட்டின நகர்களின் வரலாறும் யூதாவின் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. அவனுடைய இறுதி நாட்களில் அவன் கால்களில் நோய் கண்டது.
ஆசா தன் முன்னோரோடு துயில் கொண்ட பின் தன் தந்தை தாவீதின் நகரில் தன் முன்னோருக்கருகில் புதைக்கப்பட்டான். அவன் மகன் யோசபாத் அவனுக்குப்பின் ஆட்சி பீடம் ஏறினான்.
இசாக்கார் குடும்பத்தைச் சேர்ந்த ஆகியாசின் மகன் பாசா நாதாபுக்கு எதிராகச் சதி செய்து கெபெதோனில் அவனைக் கொலை செய்தான். கெபெதோன் என்பது நாதாபும் இஸ்ராயேலர் அனைவரும் முற்றுகை இட்டிருந்த ஒரு நகர்.
பாசா அரசனானவுடன், ஆண்டவர் சிலோனித்தராகிய ஆகியாசு என்ற தம் ஊழியர் மூலம் சொல்லியிருந்த வார்த்தையின் படியே, எரோபோவாமின் வீட்டார் அனைவரையும் கொன்று குவித்தான். அதோடு அவன் பிள்ளைகளில் ஒன்றையும் விட்டு வைக்காது, அவனது குலத்தையே அடியோடு அழித்தான்.
ஏனெனில் எரோபோவாம் செய்த பாவங்களை முன்னிட்டும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவன் பாவங்களை முன்னிட்டும், அவர்கள் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வருவித்த பாவத்தின் பொருட்டும் இது நிறைவேறிற்று.