பரம தந்தை நம்மிடம் காட்டிய அன்பு எவ்வளவு என்று பாருங்கள்! நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம். அவருடைய மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால் தான், நாம் எத்தன்மையரென்பதையும் அது அறிந்துகொள்வதில்லை.
அன்புக்குரியவர்களே, இப்போது நாம் கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் வெளிப்படும்போது, அவரைப்போலவே நாமும் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
கடவுளிடமிருந்து பிறந்தவன் பாவஞ்செய்வதில்லை; ஏனெனில் அவர் இட்ட வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது. அவன் பாவத்தில் வாழமுடியாது; ஏனெனில் அவன் கடவுளிடமிருந்து பிறந்திருக்கிறான்.
இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்யாதவனும், தன் சகோதரனுக்கு அன்பு செய்யாதவனும் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். இதனின்று, கடவுளின் மக்கள் யாரென்றும் அலகையின் மக்கள் யாரென்றும் புலப்படும்.
காயீனைப்போல் இராதீர்கள்; தீயோனைச் சார்ந்த அவன் தன் தம்பியைக் கொன்றான். ஏன் அவனைக் கொன்றான்? அவனுடைய செயல்கள் தீயனவாகவும், அவன் தம்பியின் செயல்கள் நல்லனவாகவும் இருந்தன.
இவ்வுலக செல்வங்களை உடையவன் ஒருவன், தன் சகோதரன் வறுமையுற்றிருப்பதைக் கண்டு. மனமிரங்காவிடில், அவனுள் கடவுளன்பு நிலைத்திருக்கிறதென்று எவ்வாறு சொல் முடியும்?
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவன் அவருள் நிலைத்திருக்கிறான்; அவரும் அவனுள் நிலைத்திருக்கிறார்; அவர் நம்முள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய ஆவியினால் அறிகிறோம்.