English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

1 Corinthians Chapters

1 Corinthians 10 Verses

1 சகோதரர்களே, உங்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்; நம் முன்னோர் அனைவரும் மேகத்தின் கீழ் நடந்தனர்; அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.
2 மோயீசனோடு உறவு விளைத்த ஞானஸ்நானம் ஒன்றை அவர்கள் அனைவரும் இவ்வாறு அம்மேகத்திலும் கடலிலும் பெற்றனர்.
3 இயற்கைக்கு மேற்பட்ட அதே உணவை அனைவரும் உண்டனர்.
4 இயற்கைக்கு மேற்பட்ட அதே பானத்தை அனைவரும் பருகினர். 'தங்களைப் பின் தொடர்ந்த பாறையிலிருந்து பானம் பருகி வந்தனர். அப்பாறையோ இயற்கைக்கு மேற்பட்டது; அது கிறிஸ்துவே என்க.
5 ஆயினும் அவர்களுள் பெரும்பாலோர் மேல் கடவுள் பிரியம் கொள்ளவில்லை; அவர்கள் பிணங்கள் பாலை நிலமெங்கும் சிதறிக்கிடந்தன.
6 அவர்கள் தீயன இச்சித்ததுபோல் நாமும் இச்சிக்கலாகாது எனக் காட்டவே இவை நமக்கு முன் அடையாளமாய் நிகழ்ந்தன.
7 அவர்களுள் சிலர் சிலைவழிபாட்டினர் ஆனது போல நீங்களும் ஆகாதீர்கள். அவர்களைக் குறித்துத்தான், ' மக்கள் உண்ணவும் குடிக்கவும் அமர்ந்தார்கள்; களியாட்டம் நடத்த எழுந்தார்கள் ' என்று எழுதியிருக்கிறது.
8 அவர்களுள் சிலர் வேசித்தனத்தில் ஈடுபட்டு ஒரே நாளில் இருபத்துமூவாயிரம் பேர் மடிந்தனர்; அவர்களைப் போல் நாமும் வேசித்தனத்தில் ஈடுபடலாகாது.
9 அவர்களுள் சிலர் ஆண்டவரைச் சோதித்துப் பாம்புகளால் அழிந்துபோயினர்; அவர்களைப்போல் நாமும் ஆண்டவரைச் சோதிக்கலாகாது.
10 அவர்களுள் சிலர் முணுமுணுத்து அழிவு விளைவிக்கும் தேவதூதனால் மாண்டனர்; அவர்களைப் போல் நீங்களும் முணுமுணுக்காதீர்கள்.
11 அவர்களுக்கு நிகழ்ந்த இவையெல்லாம் ஒரு முன்னடையாளம். இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு அறிவு புகட்டும் படிப்பினையாக இவை எழுதப்பட்டன.
12 ஆகையால், நிலையாய் நிற்பதாக நினைக்கிறவனுக்கு எச்சரிக்கை, அவன் நிலைகுலைந்து போகலாம்.
13 மனிதனால் தாங்கக்கூடிய சோதனை தவிர வேறு எதுவும் உங்களுக்கு வந்ததில்லை. கடவுளோ, நம்பத்தக்கவர்; வெல்ல முடியாத சோதனைக்குள்ளாகும்படி உங்களை விடமாட்டார். சோதனை வரும்பொழுது அதைத் தாங்கிக்கொள்ளும் திறனளித்து அதனின்று தப்பவும் வழி செய்வார்.
14 ஆகையால், என் அன்புக்குரியவர்களே, சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள்.
15 உங்களை விவேகிகள் என்று மதித்துப் பேசுகிறேன்; நான் சொல்லப்போவதைக் குறித்து நீங்களே ஆய்ந்து முடிவு செய்யுங்கள்.
16 திருக்கிண்ணத்தை ஏந்தி நாம் இறைபுகழ் கூறுகிறோமே; அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அன்றோ? நாம் அப்பத்தைப் பிட்கிறோமே; அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அன்றோ?
17 அப்பம் ஒன்றே; ஆதலால், நாம் பலராயினும் ஒரே உடலாய் உள்ளோம்; ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குபெறுகிறோம்.
18 பழைய இஸ்ராயேல் மக்களைப் பாருங்கள்; பலிப்பொருளை உண்பவர்கள் பலிப்பீடத்தோடு உறவுக்கொள்கிறார்கள் அல்லரோ
19 இப்படி நான் சொல்லும்போது, சிலைகளுக்குப் படைத்ததையோ, சிலையையோ பொருட்படுத்த வேண்டுமென்பதா என் கருத்து? இல்லை.
20 சிலைகளுக்குப் படைப்பவர்கள் பலியிடுவது கடவுளுக்கு அன்று, பேய்களுக்கே என்பது தான் கருத்து. நீங்கள் இவ்வாறு பேய்களோடு உறவு கொண்டவர்களாவதை நான் விரும்பேன்.
21 நீங்கள் ஆண்டவரின் கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் பருக இயலாது. ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்குபெற இயலாது.
22 ஆண்டவருக்குச் சினமூட்ட நினைப்பதா? அவரைவிட நாம் ஆற்றல் மிக்கவர்களோ?
23 ' எதையும் செய்ய உரிமையுண்டு' என்கிறீர்கள். ஆனால் எல்லாமே பயன் தராது. எதையும் செய்ய உரிமையுண்டு என்பது உண்மைதான். ஆனால் எல்லாமே ஞானவளர்ச்சி தராது.
24 யாரும் தன்னலத்தை நாடலாகாது; அனைவரும் பிறர் நலத்தையே நாடவேண்டும்.
25 கடையில் விற்கிற இறைச்சி எதையும் வாங்கி உண்ணலாம்; கேள்வி கேட்டு, மனச்சாட்சியைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
26 ஏனெனில், ' மண்ணுலகும் அதிலுள்ளதனைத்தும் ஆண்டவருடையதே'.
27 புறச் சமயத்தான் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, நீங்கள் அதற்குப் போக விரும்பினால், பரிமாறுவது எதுவாயினும் உண்ணுங்கள்; கேள்வி கேட்டு மனச்சாட்சியைக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
28 ஆனால் யாராவது, ' இது படையல்' என்று உங்களுக்குச் சொன்னால், அவ்வாறு குறிப்பிட்டவனை முன்னிட்டும் மனச்சாட்சியின் பொருட்டும் அதை உண்ணாதீர்கள்.
29 நான் குறிப்பிடுவது உங்கள் மனச்சாட்சியன்று, மற்றவனுடைய மனச்சாட்சியே. ' என் செயலுரிமை மற்றவனுடைய மனச்சாட்சிக்கு ஏன் கட்டுப்படவேண்டும்?
30 நான் நன்றிக்கூறி எதையேனும் உண்டால், அவ்வாறு நன்றிகூறி உண்கிற உணவைப்பற்றி நான் பழிச்சொல்லுக்கு ஆளாவானேன் ' என்று ஒருவன் கேட்கலாம்.
31 நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாம் கடவுளின் மகிமைக்கெனச் செய்யுங்கள்.
32 யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடைஞ்சலாய் இராதீர்கள்.
33 நானும் அவ்வாறே அனைத்திலும் அனைவருக்கும் உகந்தவனாய் இருக்க முயலுகிறேன். எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.
×

Alert

×