கொரிந்து நகரில் இருக்கும் கடவுளின் சபைக்கு. கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாய் அழைக்கப்பட்ட சின்னப்பனும், சகோதரனான சொஸ்தெனேயும் எழுதுவது:
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரை எங்கும் போற்றித் தொழுகின்ற அனைவரோடும் கூடப் புனிதராயிருக்கும்படி அழைக்கப்பட்ட உங்களுக்கு, அவர்களுக்கும் நமக்கும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தராக்கப்பட்ட உங்களுக்கு.
சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால், உங்களை நான் வேண்டுவது: நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழுங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். மாறாக, ஒரே மனமும் ஒரே கருத்தும் கொண்டு, மீண்டும் முற்றிலும் ஒன்றித்து வாழுங்கள்.
உங்களுள் ஒவ்வொருவரும், 'நான் சின்னப்பரைச் சேர்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன், நான் கேபாவைச் சேர்ந்தவன்,. நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்' என்று பலவாறு சொல்லிக் கொள்ளுகிறீர்களாம்.
கிறிஸ்து என்னை அனுப்பினது ஞானஸ்நானம் கொடுக்க அன்று, நற்செய்தியை அறிவிக்கவே, அதுவும் நாவன்மையை நம்பியன்று. அப்படி நம்பினால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றதாய்ப் போகும்.
ஏனெனில், கடவுளின் ஞானம் வகுத்த திட்டத்தின்படி, உலகம் தனது ஞானத்தைக் கொண்டு கடவுளை அறிந்து கொள்ளாததால், நாங்கள் அறிவிக்கும் செய்தியின் மடமையால், விசுவாசிகளை மீட்கத் திருவுளங்கொண்டார்.
சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட போது என்ன நிகழ்ந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். மனிதர் மதிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வல்லமையுள்ளவர்கள் எத்தனை பேர்? உயர் குலத்தோர் எத்தனை பேர்?
இருப்பினும் ஞானிகளை நாணச்செய்ய மடமை என உலகம் கருதுவதைக் கடவுள் தேர்ந்து கொண்டார். வன்மையானதை நாணச் செய்ய வலுவற்றது என உலகம் கருதுவதைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.
அவர் செயலால் தான் நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறீர்கள், இவரே கடவுளின் செயலால் நமக்கு ஞானத்தின் ஊற்றானார். இறைவனுக்கு நாம் ஏற்புடையவர்களும் பரிசுத்தர்களும் ஆவதற்கு வழியானார். நமக்கு விடுதலை அளிப்பவருமானார்.