ஓசி, ரப்பாயியா, எரியேல், ஏமாயி, எப்சேம், சாமுவேல் என்ற தோலாவின் புதல்வர்கள் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாய் விளங்கினார்கள். தாவீதின் காலத்திலே தோலாவின் குலத்தில் இருபத்திரண்டாயிரத்து அறுநூறு ஆற்றல் மிக்க வீரர் இருந்தனர்.
இவர்களோடு இவர்களின் குடும்பங்களிலும் மக்களிலும் போர் செய்யப் பயிற்சி பெற்றிருந்த வலிமை மிக்க வீரர் முப்பத்து ஆறாயிரம் பேர் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்குப் பல மனைவியரும் மக்களும் இருந்தனர்.
பேலாவின் புதல்வரான எஸ்போன், ஓசி, ஓசியேல், எரிமோத், உராயி ஆகிய ஐவரும் குடும்பத்தலைவர்களும், போர் செய்யத்தக்க ஆற்றல் மிக்கவருமாவர். அவர்கள் மொத்தம் இருபத்திரண்டாயிரத்து முப்பத்து நான்குபேர்.
மக்கீரோ தம் புதல்வர் ஆப்பீமுக்கும் சாப்பானுக்கும் பெண் கொண்டார். அவருக்கு மாக்கா என்ற சகோதரி இருந்தாள். மனாசேயின் இரண்டாவது புதல்வன் பெயர் சல்பாத். சல்பாத்துக்கும் புதல்வியர் பிறந்தனர்.
மக்கீரின் மனைவி மாக்கா ஒரு மகனைப் பெற்று அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிட்டாள். இவருடைய சகோதரரின் பெயர் சாரேஸ்; இவருடைய புதல்வர் ஊலாம், ரேக்கேன் ஆகியோர்.
எப்பிராயீமின் மகன் பெயர் சுத்தலா; இவருடைய மகன் பெயர் பாரேத்; இவருடைய மகன் பெயர் தகாத்; இவருடைய மகன் பெயர் எலதா; இவருடைய மகன் பெயர் தகாத்; இவருடைய மகன் பெயர் சாபாத்;
இவருடைய மகன் பெயர் சுத்தலா; இவருடைய புதல்வர் ஏசேர், எலாத் என்பவர்கள். ஆனால் இவர்களது உடைமையைக் கைப்பற்ற வேண்டி, கேத் நாட்டைச் சேர்ந்த மனிதர் வந்து அவர்களைக் கொலை செய்தனர்.
பிறகு அவர் தம் மனைவியுடன் மணவுறவு கொண்டார். அவளும் கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள். தம் வீட்டுக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் அப்பிள்ளை பிறந்தமையால், அவனுக்குப் பேரியா என்ற பெயர் வைத்தார்.
பேத்தேலும் அதன் சிற்றூர்களும், கிழக்கே நோரானும், மேற்கே காசேரும் அதன் சிற்றூர்களும், சிக்கேமும் அதன் சிற்றூர்களும், ஆசாவும் அதன் சிற்றூர்களுமே அவர்களுடைய உடைமைகளும் குடியிருப்புமாய் இருந்தன.
மேலும், மனாசேயின் புதல்வரை அடுத்து இருந்த பெத்சானும் அதன் சிற்றூர்களும், தானாக்கும் அதன் சிற்றூர்களும், மகெதோவும் அதன் சிற்றூர்களும், தோரும் அதன் சிற்றூர்களும் அவர்களுக்குச் சொந்தமாய் இருந்தன. அந்த இடங்களில் இஸ்ராயேலின் புதல்வன் யோசேப்பின் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
ஆசேரின் குலத்திலே தோன்றிய இவர்கள் அனைவரும் தத்தம் குடும்பங்களுக்குத் தலைவராய் இருந்தனர். மேலும் படைத்தலைவர்களுக்கெல்லாம் தலைவர்களாகவும் விளங்கி வந்தார்கள். அவர்களிலே போர் செய்யத்தக்க வயதுடையவர்களின் எண்ணிக்கை இருபத்து ஆறாயிரம்.