இஸ்ராயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்களாவார்: இவரே இஸ்ராயேலின் தலைமகன். ஆயினும் இவர் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால், தமது பிறப்புரிமையை இழந்தார்; இதனால் தலைமுறை அட்டவணையிலும் அவர் தலைமகனாக எண்ணப்படவில்லை. மாறாக அவ்வுரிமை இஸ்ராயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சவுலின் ஆட்சிக் காலத்தில் ஆகாரியரோடு போரிட்டு அவர்களைக் கொன்று போட்டு, கலாத் நாட்டின் கிழக்குப் பகுதிகள் எங்கணும் அவர்கள் வாழ்ந்து வந்திருந்த கூடாரங்களில் குடியேறினார்கள்.
ரூபன் புதல்வரிலும் காத் சந்ததியாரிலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிலும் வீரர்களின் தொகை நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று இருபது. இவர்கள் கேடயமும் வாளும் அணிந்து வில் ஏந்திப் போரிடப் பழகிப் படைக்குப் போகத் தக்கவர்களாய் இருந்தனர்.
ஆகாரியருக்குத் துணையாக வந்தனர். ஆயினும் ஆகாரியரும் அவர்களோடு இருந்த யாவரும் முன்சொல்லப்பட்ட இஸ்ராயேலர் கையில் ஒப்படைக்கப்பட்டனர். ஏனெனில் இஸ்ராயேலர் போர் செய்யும்போது கடவுளை மன்றாடினார்கள். அவரிடத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்ததால் கடவுள் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.
அவர்கள் தங்கள் பகைவருக்குச் சொந்தமான ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், ஒரு லட்சத்து மனிதர்களையும் கைப்பற்றினர்.
மனாசேயின் பாதிக் கோத்திரத்து மக்களும் மிகப்பலராய் இருந்தமையால், பாசான் எல்லை முதல் பாகால் எர்மோன் வரை உள்ள நாட்டையும் சனிரையும் எர்மோன் மலையையும் தமது உரிமையாக்கிக் கொண்டனர்.
அவர்களுடைய குடும்பத்தலைவர்கள்: எப்பேர், ஏசி, ஏலியேல், எஸ்ரியேல், எரேமியா, ஒதொய்யா, எதியேல், ஆகியோரே. இவர்கள் ஆற்றல் மிக்கவராகவும் ஆண்மையுடையவராகவும் விளங்கினார்கள்.
ஆயினும் அவர்கள் தங்கள் முன்னோர் வழிபட்டு வந்த கடவுளை விட்டு அகன்று, அவர் தங்கள் முன்னிலையிலேயே அழித்துப்போட்டிருந்த புறவினத்தாரின் தெய்வங்களை வழிபட்டு முறைகெட்டுப் போயினர்.
எனவே இஸ்ராயேலின் கடவுள் அசீரியருடைய அரசன் பூலையும், தெல்காத்பல்னசாரையும் தூண்டி விட்டார். அவர்களோ ரூபனையும் காத்தையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் நாடு கடத்தி, லகேலாவுக்கும் அபோருக்கும் ஆராவுக்கும் கோசான் நதிக்கும் கொண்டு போனார்கள். அங்கே அவர்கள் இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்கள்.