தாவீது, எலியெசாரின் மக்களில் ஒருவனான சாதோக்கினுடையவும், ஈத்தமாரின் மக்களில் ஒருவனான அக்கிமெலேக்கினுடையவும் உதவியால், அவர்களைப் பிரிந்து அவர்கள் செய்ய வேண்டிய பணிக்குத்தக அவர்களை வரிசைப்படி அமைத்தார்.
ஆனால் ஈத்தமாரின் மக்களை விட எலியெசாரின் மக்களுக்குள் பலர் தலைவர்களாய் இருந்தனர். எலியெசாரின் புதல்வரில் பதினாறு பேர் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், ஈத்தமாரின் புதல்வரில் எட்டுப் பேர் குடும்பத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
எலியெசார், ஈத்தமார் ஆகிய இருவரின் குடும்பங்களிலும் திருத்தலத்தைச் சார்ந்த தலைவர்களும் கடவுளின் திருப்பணியைச் சார்ந்த தலைவர்களும் இருந்தனர். எனவே இரு குடும்பங்களையும் சீட்டுப் போட்டே பிரித்தார்கள்.
நத்தானியேலின் மகனும் லேவியர்களின் எழுத்தனுமான செமேயியாஸ் என்பவன் அரசர், தலைவர்கள், சாதோக் என்னும் குரு, அபியதாரின் மகன் அக்கிமெலேக், குருக்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு முன்பாக, அவர்களைப் பதிவு செய்து கொண்டான். எலியெசாரின் குடும்பத்திற்கும் ஈத்தமாரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.
இஸ்ராயேலில் கடவுளாகிய ஆண்டவரால் அவர்கள் தந்தை ஆரோனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைப்படியே, ஆரோன் அவர்களுக்கென செயல்முறைகளை அமைத்தார். தங்கள் முறைப்படி அவர்கள் திருப்பணி செய்யும் பொருட்டு வகுக்கப்பட்ட பிரிவுகள் இவையே.
இவர்களும் தங்கள் சகோதரராகிய ஆரோனின் புதல்வர் செய்தது போல, தாவீது அரசர், சாதோக், அக்கிமெலேக், குருக்கள், லேவியரின் குடும்பத் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில், பெரியோரும் சிறியோரும் சீட்டுப் போட்டுக் கொண்டனர். எல்லா வேலைகளும் சரிசமமாகப் பிரித்தளிக்கப்பட்டன.