இவர்களுள் லெகேத் மூத்தவன்; சீசா இரண்டாம் புதல்வன். ஆனால் யாவுஸ், பாரியா என்பவர்களுக்குப் பல பிள்ளைகள் இல்லாததால் ஒரே குடும்பமாகவும், ஒரே பிரிவாகவும் அவர்கள் கணக்கிடப்பட்டனர்.
தங்கள் உறவினர்களுக்கும் குடும்பங்களுக்கும் தலைவர்களும் லேவியின் புதல்வருமான இவர்கள் இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களாயிருந்தனர்; தங்கள் பெயர் வரிசைப்படி பதிவு செய்யப்பட்டு, ஆண்டவரின் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் ஆண்டவரின் ஆலயத் திருப்பணியில் ஆரோனின் புதல்வர்களுக்கு உதவி செய்ய நியமிக்கப் பெற்றார்கள்; மண்டபங்களையும் உள் அறைகளையும் கவனித்து வந்தார்கள்: புனித பணிமுட்டுகளைச் சுத்தம் செய்து வந்தார்கள்; இன்னும் ஆண்டவரின் வழிபாட்டுக்கடுத்த எல்லா வேலைகைளையும் செய்து வந்தார்கள்.
குருக்கள் காணிக்கை அப்பம், போசனப் பலிகளுக்கு வேண்டிய மிருதுவான மாவு, புளியாத அப்பம். சட்டிகளில் சுடப்பட்டது, பொரிக்கப்பட்டது ஆகிய அனைத்தையும் தயாரித்து வந்தார்கள்; அத்தோடு இவற்றின் அளவையும் நிறையையும் கவனித்து வந்தார்கள்.
அத்தோடு ஓய்வுநாள் திருநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், மற்றக் கொண்டாட்டங்களின் போதும், ஆண்டவருக்குத் தகனப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் போதும் குறிப்பிட்டவர்கள் தத்தம் பிரிவுப்படி ஆண்டவர் திருமுன் எப்பொழுதும் நின்று கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தை அடுத்த ஒழுங்கு முறைகளையும், திருவிடத்தின் வழிபாட்டு முறைகளையும், கடைப்பிடித்து வந்தார்கள். மேலும் ஆண்டவரின் ஆலயத்திலே திருப்பணி புரிந்து வந்த தங்கள் சகோதரரான ஆரோனின் புதல்வருக்கும் அவர்களது திருப்பணியில் உதவி புரிந்து வந்தார்கள்.