அப்போது, தாவீது, "நாவாசின் மகன் ஆனோனுக்குத் தயவு காட்டுவேன். ஏனெனில் அவனுடைய தந்தை எனக்குத் தயவு காட்டியிருக்கிறான்" என்று கூறி, அவன் தந்தையின் மரணத்தின் பொருட்டு அவனுக்கு ஆறுதல் கூறத் தூதவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் ஆனோனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் நாட்டை வந்தடைந்தனர்.
அப்பொழுது அம்மோனியரின் தலைவர்கள் ஆனோனனை நோக்கி, "தாவீது உமக்கு அத்தூதுவர்களை அனுப்பியது உம் தந்தை மேல் அவருக்குள்ள மதிப்பால் என்று நீர் எண்ண வேண்டாம். உமது நாட்டை ஆராயவும் நன்கு அறிந்து உளவு பார்க்கவுமே அவர் ஊழியர் உம்மிடம் வந்துள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ளும்" என்று கூறினார்.
எனவே தாவீதின் ஊழியரை ஆனோன் பிடித்து மொட்டையடித்துத் தாடியைச் சிரைத்து தொடையிலிருந்து பாதம் வரை அவர்களின் உடைகளைக் கத்தரித்து விட்டு அவர்களை அனுப்பி வைத்தான்.
அவர்களுக்கு நேர்ந்தது பற்றித் தாவீதுக்கு உடனே செய்தி கொண்டு வரப்பட்டது. அவர்கள் மிகவும் கேவலமடைந்திருந்தது கண்டு தாவீது அவர்களைச் சந்திக்க ஆட்களை அனுப்பினார். தாடி வளரும் வரை அவர்கள் எரிக்கோவில் தங்கியிருக்கவும், அதன்பின் திரும்பிவரவும் செய்தார்.
தங்கள் இனத்தார் தாவீதின் பகையைத் தேடிக் கொண்டது கண்டு ஆனோனும் அம்மோனியரும் மெசபொத்தோமியாவிலிருந்தும், மாக்காவைச் சேர்ந்த சீரியா, சோபாவிலிருந்தும் தேர்களையும் குதிரை வீரர்களையும் கூலிக்கு அமர்த்தும்படி ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பி வைத்தார்கள்.
அவ்வாறே முப்பத்திரண்டாயிரம் தேர்களையும், மாக்காவின் அரசனையும், அவன் குடிகளையும் அணிவகுத்து நடத்திச் சென்றனர்: அவர்கள் மேதபா பகுதிக்கு வந்து அங்கே பாளையம் இறங்கினார்கள். அம்மோனியரும் தங்கள் நகர்களிலிருந்து திரண்டு போருக்கு வந்தனர்.
யோவாப் தனக்கு முன்னும் பின்னும் போர் மூளவிருப்பதை அறிந்த போது, இஸ்ராயேல் அனைத்திலுமிருந்து மிக்க ஆற்றல் படைத்த மனிதரைத் தேர்ந்து எடுத்து, அவர்களைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.
யோவாப் தன் சகோதரனைப் பார்த்து, "சீரியர் என்னை விட வலிமை வாய்ந்தவர்களாய் இருந்தால் நீ எனக்கு உதவியாக வரவேண்டும். அம்மோனியர் உன்னை விட வலிமை வாய்ந்தவர்களாய் இருந்தாலோ நான் உனக்கு உதவியாக வருவேன். திடமாயிரு;
சீரியர் தோற்று ஓடுவதை அம்மோனியர் கண்டு, அவர்களும் யோவாபின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாகச் சிதறி ஓடி நகருக்குள் நுழைந்து கொண்டார்கள். யோவாப் யெருசலேமுக்குத் திரும்பி வந்தான்.
தாங்கள் இஸ்ராயேலரால் முறியடிக்கப் பட்டதைக் கண்ட சீரியரோ, தூதுவர்களை அனுப்பி நதிக்கு அப்பால் இருந்த சீரியர்களை அழைத்து வந்தனர். ஆதரேசரின் படைத் தலைவன் சோபாக் அவர்களுக்குத் தலைவனாய் இருந்தான்.
அது தாவீதுக்கு அறிவிக்கப் பட்டதும், அவர் இஸ்ராயேலர் அனைவரையும் திரட்டிவந்து யோர்தானைக் கடந்து, அவர்களுக்கு அருகில் வந்து அவர்களுக்கு எதிராகத் தம் படையை அணிவகுத்து நிறுத்தினார்.
உடனே போர் ஆரம்பித்தது. சீரியர் இஸ்ராயேலருக்குப் புறமுதுகுகாட்டி ஓடினர். சீரியர் படையைச் சேர்ந்த ஏழாயிரம் குதிரைப் படையினரையும் நாற்பதாயிரம் காலாட் படையினரையும் படைத்தலைவன் சோபாக்கையும் தாவீது கொன்றார்.
ஆதரேசரின் ஊழியரோ, தாங்கள் இஸ்ராயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்டு அவருக்கு அடிபணிந்தனர்; தாவீதுடன் சமாதானம் செய்து கொண்டனர். அது முதல் அம்மோனியருக்கு உதவி செய்யச் சீரியர் என்றுமே துணிந்ததில்லை.