தாவீது சீசின் மகன் சவுலிடமிருந்து தப்பித் தலைமறைவாய் சிசெலேக் என்னுமிடத்தில் இருந்தபோது சிலர் அவரிடம் வந்தனர். அவர்கள் ஆற்றல் மிகக் கொண்டவரும் திறமை மிக்கவருமான படைவீரராவர்.
மேலும் அவர்கள் வில் வீரராயும், இரு கையாலும் கவணையும் அம்பையும் கையாள்வதில் திறமை படைத்தவராயும் இருந்தனர். அவர்கள் பென்யமீன் குலத்தினரான சவுலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும், காதி என்ற இடத்திலிருந்து ஆற்றல் மிக்கவரும் திறமைமிக்க போர்வீரர்களும், ஈட்டியும் கேடயமும் தாங்குவோரும், சிங்கம் போன்ற முகத்தை உடையவர்களும், மலைவாழ் மான்கள் போல வேகமாய் ஓடக்கூடியவர்களுமான சிலரும் பாலைவனத்தில் தலைமறைவாய் இருந்த தாவீதிடம் வந்தனர்.
யோர்தான் நதி கரைபுரண்டு ஓடும் முதல் மாதத்தில் அதைக்கடந்து, மேற்கிலும் கிழக்கிலும் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வந்த யாவரையும் துரத்தியடித்தவர்கள் இவர்களே.
தாவீது வெளிப்போந்து, அவர்களை எதிர்கொண்டு சென்று, "நீங்கள் எனக்கு உதவி செய்யும் பொருட்டு நண்பர்கள் என்ற முறையில் என்னிடம் வந்தீர்களேயாகில், நான் உங்களோடு சேர்ந்துகொள்ளத் தயார். மாறாக, குற்றம் புரிந்திராத என்னை என் எதிரிகள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு வந்திருப்பீர்களேயாகில், நம் முன்னோரின் கடவுள் அதைப்பார்த்துத் தீர்ப்புச் சொல்லட்டும்" என்றார்.
அப்போது முப்பதின்மருக்குத் தலைவனான அமசாயியை ஆவி ஆட்கொள்ள, அவன், "ஓ! தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள். இசாயியின் மகனே! நாங்கள் உம்மோடு இருப்போம். உமக்குச் சமாதானம், சமாதானம்! உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்! ஏனெனில் உம் கடவுள் உமக்குத் துணை நிற்கிறார்" என்றான். தாவீதும் அவர்களை வரவேற்றுத் தம் படைக்குத் தலைவர்களாக்கினார்.
தாவீது பிலிஸ்தியருடன் சேர்ந்துகொண்டு சவுலுக்கு எதிராகப் போரிடச் செல்கையில், மனாசேயைச் சேர்ந்த சிலரும் அவரிடம் வந்து சேர்ந்தனர். ஆனால் அவர் அவர்களோடு சேர்ந்து போரிடவில்லை. ஏனெனில் பிலிஸ்தியத் தலைவர்கள் சிந்தனை செய்து, "இவன் தன் தலைவன் சவுலிடம் திரும்பச் சேர்ந்து கொள்வானாகில் நமது உயிருக்குத்தான் ஆபத்து" என்று சொல்லி அவரை அனுப்பி விட்டனர்.
ஆகையால் தாவீது சிசெலேகுக்குத் திரும்பிச் சென்றார். அப்பொழுது மனாசேயில் ஆயிரவர்க்குத் தலைவர்களான எத்னாஸ், யோசபாத், எதியேல், மிக்காயேல், எத்னாஸ், யோசபாத், எலியு, சாலாத்தி ஆகியோர் மனாசேயினின்றும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டனர்.
இசாக்கார் புதல்வர்களில், இஸ்ராயேலர் செய்ய வேண்டியதுபற்றிக் குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த ஆழ்ந்தறிவுள்ள இருநூறு குடும்பத்தலைவர்கள்: இவர்களது குலத்தின் மக்கள் அனைவரும் இவர்களது அறிவுரைக்குச் செவிமடுத்தனர்.
போர் புரிய நன்கு தகைமை பெற்ற அந்த வீரர் அனைவரும் தாவீதை இஸ்ராயேல் அனைத்திற்கும் அரசராக ஏற்படுத்தக் கருதி முழு உள்ளத்தோடு எபிரோனுக்கு வந்தனர். மேலும் இஸ்ராயேலில் எஞ்சியிருந்த மக்கள் யாவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர்.
மேலும், இசாக்கார், சபுலோன், நெப்தலி எல்லைகள் வரை அவர்களுக்கு அருகே இருந்தவர்கள் கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும், மாடுகள் மேலும், அவர்கள் உண்ணத்தக்க அப்பங்களையும் மாவையும், அத்திப்பழ அடைகளையும், வற்றலான திராட்சைப் பழங்களையும், திராட்சை இரசத்தையும், எண்ணெயையும், ஆடு மாடுகளையும் ஏராளமாகக் கொண்டு வந்திருந்தனர். இஸ்ராயேலில் மகிழ்ச்சி நிலவி வந்தது.