வந்தவன் அவனிடம், “நீ ஓடிப்போய் அந்த இளைஞனிடம் சொல்லவேண்டியதாவது: ‘எருசலேம் மதில்களற்ற பட்டணமாயிருக்கும். ஏனெனில், அங்கு மக்களும் அவர்களின் ஆடுமாடுகளும் திரளாகப் பலுகி நகரத்திற்கு வெளியேயும் இருப்பார்கள்.
“வானத்தின் நான்கு திசைகளிலும் நான் உங்களைச் சிதறடித்தேன். ஆனால் இப்போது வாருங்கள்! வாருங்கள்! வடநாட்டிலிருந்து ஓடி வாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர் என்னைக் மகிமைப்படுத்திய பின், உங்களைச் சூறையாடின பிற மக்களுக்கு எதிராக என்னை அனுப்பியிருக்கிறார். ஏனெனில் உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
நான் நிச்சயமாய் என் கையை அவர்களுக்கு எதிராக உயர்த்துவேன். அவர்களின் அடிமைகள் அவர்களைச் சூறையாடுவார்கள். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
“அந்நாளிலே அநேக நாடுகள் யெகோவாவிடம் இணைந்துகொள்வார்கள். அவர்களும் என் மக்களாவார்கள். அப்பொழுது நான் உன் நடுவில் வாழ்வேன். சேனைகளின் யெகோவாவே என்னை உன்னிடம் அனுப்பினார் என்பதை அப்பொழுது நீ அறிந்துகொள்வாய்.