உன் கழுத்து தந்தத்தினாலான கோபுரம் போன்றது. உன் கண்கள் பத்ரபீம் வாசல் அருகேயுள்ள எஸ்போனின் குளங்களைப் போன்றவை. உன் மூக்கு தமஸ்கு பட்டணத்தை நோக்கியுள்ள லெபனோனின் கோபுரம் போன்றது.
உன் தலை கர்மேல் மலைபோல் உனக்கு முடிசூட்டுகிறது. உனது தலைமுடி அரசர்களுக்கென அலங்கரிக்கப்பட்ட இரத்தாம்பர பின்னல்போல் இருக்கிறது; அந்தப் பின்னலின் அழகில் அரசன் மயங்குகிறான்.
அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்; அங்கே திராட்சை துளிர்த்திருக்கிறதா என்றும், அவைகளின் மொட்டுகள் விரிந்திருக்கின்றனவா என்றும், மாதளஞ்செடிகள் பூத்திருக்கிறதா என்றும் பார்ப்போம். அங்கே என் காதலைப் பொழிவேன்.